கட்டுரை

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்

77views
புரட்சித்தலைவன் ஆன கதை
ஒரு நடிகர் மக்களிடையே செல்வாக்கு பெற்று, ஒரு அரசியல் தலைவராய் உருவாக வும், முதலமைச்சராகவும் முடிந்ததென்றால் அது மகத்தான சாதனை.  அந்தச் சாதனை நிகழ்த்தியவர் எம்.ஜி.ஆர் என்று அறியப்படும் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். ஒரு நாளில் அந்தச் சாதனை நிகழ்ந்து  விடவில்லை. பல்லாண்டு கால கடின உழைப்பு அதன் பின்னணியில் இருந்திருக்கிறது.
1917-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் நாள் இலங்கை கண்டியில்  பிறந்தார் எம்.ஜி.ஆர். தந்தை கோபால மேனன், தாய் சத்யபாமா. குடும்பத்தில் கடைக்குட்டி (ஐந்தாவது பிள்ளை) எம்.ஜி.ஆர். இலங்கையில் பிறந்தாலும், மலையாளி எனக் கருதப்பட்டாலும் அவருடைய பூர்விகம் தமிழகம்  என்று தெரிய வருகிறது.
எம்.ஜி.ஆருக்கு இரண்டரை வயதானபோது அவ ருடைய தந்தையும், அண்ணன் ஒருவரும், தமக்கைகள் இருவரும் அடுத்தடுத்து இறந்துவிட்டிருந்தனர். தந்தை யின் காலத்தில் வசதியாக இருந்த குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது.  அன்னை சத்யா தன் இரண்டு குழந்தைகளான சக்கர பாணி, எம்.ஜி.ஆருடன் தமிழகம் திரும்பினார். அங்கே கும்பகோணத்தில் தம்முடைய சகோதரர் நாராயணன் நாயர் ஆதரவில் குடியேறினார். அவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பின்பாட்டுப் பாடுகிறவர்.
அன்னை சத்யா குழந்தைகளை பள்ளிக் கூடத்தில் சேர்த்துப் படிக்க வைத்தார். அஞ்சாமை, நேர்மை, வாய்மை என்று அருங்குணங்கள் பலவும் வாய்க்கப் பெற்ற பெண்மணி அவர்.  அதனால்தான் வாழ்வின் அத்தனை பிரச்சனைகளையும் ஒற்றை ஆளாய் நின்று அவரால்  சமாளிக்க முடிந்தது.
அன்னையின் வளர்ப்பில் எம்.ஜி.ஆர். சிறந்த பண்பாளராய் உருவானார். சகோதரியின் குடும்பம் வறுமையில் படும் துயர் கண்டு பொறுக்க முடியாத நாராயணன் நாயர் குழந்தைகளைத் தாம் பணியாற்றும் நாடகக் கம்பெனியில் சேர்த்துவிடுமாறு யோசனை கூறினார்.  முன்றாம் வகுப்போடு  எம்.ஜி.ஆரின் படிப்பு நின்று போனது. மதுரை ஸ்ரீ ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சகோதரர்கள் இருவரும் நடிகர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
காளி என். ரத்தினம் என்ற நடிகர் எம்.ஜி.ஆருக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார். அந்த நாடகக் கம்பெனி கதை வசனம் எழுதுகிறவராக  இருந்தவர் நடிகர் எம். கே. ராதாவின் தந்தை எம். கந்தசாமி முதலியார்.  பி.யூ. சின்னப்பா, டி.எஸ். பாலையா போன்றவர்கள் அந்தக் கம்பெனியில் நடித்துக் கொண்டிருந்தனர். நாடக நடிகருக்குத் தேவையான நடிப்பு, வசனம், பாட்டுப் பயிற்சிகளுடன் நடனம், வாள், சிலம்புப் பயிற்சியும் பெற்றார் எம்.ஜி.ஆர். பயிற்சிகள் முடிந்ததும் பாலபார்ட் வேடங்களில் நடிக்கத் தொடங்கிய எம்.ஜி.ஆர் பெற்ற முதல் சம்பளம் ஐந்து  ரூபாய்.
தாமும் ராஜபார்ட் (கதாநாயக வேடம்) நடிகராகி நிறையப் பணம் சம்பாதித்து நல்ல உடைகள் அணிந்து, தாயாரை சவுகர்யமாய் வாழ வைக்க வேண்டும் என்று கனவு கண்டார் அவர்.  எம்.ஜி.ஆர் நடித்த முதல் நாடகம் மகாபாரதம்.   பி.யூ. சின்னப்பா, எஸ்.ஜி. கிட்டப்பா, என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோருடன் புதியவராக  எம்.ஜி.ஆரும்  நடித்தார். ஆனாலும் அவரிடம் பிரியமாய் அவர்கள் நடந்து கொண்டது வாழ்வின் உன்னதம்.
ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி வாத்தியார் எம். கந்த சாமி முதலியார் ஒரு நாடகக் குழுவை ஒப்பந்த அடிப்படையில் இரங்கூனுக்கு (பர்மா) அழைத்துச் சென்ற போது எம்.ஜி.ஆரும் அந்தக் குழுவில் இடம் பிடித்தார்.  அப்போது அவருக்கு வயது 14. இந்தியா திரும்பியதும் மீண்டும் பழைய கம்பெனியிலேயே நடிப்பு தொடர்ந்தது. தமிழகத்தில் அப்போது பேசும் படம் தயாரிக்கத் தொடங்கியிருந்தார்கள்.
நாடக நடிகர்களில் பலரும் சினிமா வாய்ப்புத் தேடி  படையெடுத்தார்கள். எம்.ஜி. ஆரும், சக்கரபாணியும் சினிமாவில் நடிக்க விரும்பினர். அன்னையின் அனுமதியும் கிடைத்தது. குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது.  வாத்தியார் கந்தசாமி முதலியார் தம்முடைய செல்வாக்கில் மகன் எம். கே. ராதாவை சில படங்களில் நடிக்கச் செய்திருந்தார்.
எம்.ஜி.ஆரும் சக்கரபாணியும் வாய்ப்பு தேடி சிரமப்பட்டார்கள். தினமும் வாத்தியார் எம். கே. கந்தசாமி முதலியாரைப் பார்த்து வணங்கிச் செல்வார்கள் அப்போது எம்.ஜி.ஆருக்கு வயது பதினெட்டு கதர் வேட்டி சட்டை அணிந்து, உயர்ந்த குதி வைத்த செருப்புடன் நடந்து செல்வார்.
பார்க்கவே கம்பீரமாய் இருக்கும். வாத்தியார் எம். கே.கந்தசாமி முதலியார் சிபாரிசில் ‘சதிலீலா வதி’ படத்தில் இன்ஸ்பெக்டர் வேடம் கிடைத்தது எம்.ஜி.ஆருக்கு. சினிமாவில் அவர் பெற்ற முதல் சம்பளம் நூறு ரூபாய்.
இடையில் கொஞ்ச நாள் வாய்ப்பில்லை. பிறகு ‘இரு சகோதரர்கள்’ என்ற படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து சிறு சிறு வேடங்கள். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ‘வீரஜகதீஷ்’ படம் 1938-ல் வெளியானது. அவருடைய திருமணம் பார்கவி என்ற பெண்ணுடன் நடந்தது. அப்போது எம்.ஜி.ஆருக்கு வயது 21.
பட வாய்ப்பு இல்லாததால் குடும்பம் நடத்தவே சிரமம். அப்போது இரண்டாம் உலகப் போர் மூண்டது. ஜப்பான்காரன் சென்னையிலும் குண்டு வீசுவான் என்று அஞ்சப்பட்டது.

 

எம்.ஜி.ஆர் குடும்பத்தினர் வற்புறுத்தலுக்காக சதானந்தவதி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.  ஆனால் சதானந்தவதி  கருச் சிதைவு, காசநோய் பாதிப்புகளில் படுத்த படுக்கையானார். 1962-ல் இயற்கை எய்தினார்.
1940-களில் அரிச்சந்திரா போன்ற படங்களில் அவர் சிறி சிறு  வேடங்களில் நடித்தார். 1945 ல் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான ‘ராஜகுமாரி’ திரைப் படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாகனாக  நடித்தார்.  அதன் பிறகு அவர் நடித்த அபிமன்யு, ராஜமுக்தி, ரத்ன குமார், மோகினி படங்களில் அவருக்குக் கிடைத்தது இரண்டாவது கதாநாயக வேடந்தான். சின்னப்பா, பாகவதர், டி.ஆர். மகாலிங்கம், கே.ஆர். ராமசாமி, எம். கே. ராதா ஆகியோர் புகழ் பெற்றிருந்த கலாம் அது.
எம்.ஜி.ஆர் அப்போது அவர்களுடன் ஒப்பிடப்படக்கூடிய நிலையை அடைந் திருக்கவில்லை. 1949-ல் கலைஞர் வசனமெழுதிய ‘மந்திரிகுமாரி’ படத்தில் நடித்ததன் மூலம் எம்.ஜி.ஆர். முக்கிய நடிகர்களில் ஒருவரானார்.
1950 – 53 காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் நடித்த மர்மயோகி, சர்வாதிகாரி, அந்தமான் கைதி, என் தங்கை, ஜெனோவா, நாம் என்று அத்தனை படங்களும் வெற்றி பெற்றன. 1952-ல் மலைக்கள்ளன் மகத்தான வெற்றி.

மருதநாட்டு இளவரசியில் நடித்த போது வி.என். ஜானகியுடன் நட்பு ஏற்பட்டது. பிறகு அதுவே காதலாகி அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
1952-ல் அறிஞர் அண்ணாவை சந்தித்த எம்.ஜி.ஆர். அரசியலிலும் ஈடுபாடு கொண்டார். 1953-ல் ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு பங்களாவை விலைக்கு வாங்கிய எம்.ஜி.ஆர். தமது தாயின் நினைவாக ‘சத்யா இல்லம்’ என்று பெயரிட்டார்.
1962-ல் தி.மு.க வெற்றி பெற்ற போது எம்.ஜி.ஆரை எம்.எல்.ஏ ஆக்கினார் அண்ணா. எம்.ஜி.ஆர். தேர்தலில் வென்று (பல்லாவரம் தொகுதி) எம்.எல்.ஏ ஆனார்.
எம்.ஜி.ஆரின் வாள் வீச்சுக்காக ஓடிய படம் குலேபகாவலி. அவரை வசூல் சக்ரவர்த்தியாக்கிய படம் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்….
தொடர்ந்து வெற்றி முகந்தான், வெள்ளிவிழாப் படங்கள்தான்.
சின்னப்ப தேவரின் படங்கள் பலவற்றிலும் எம்.ஜி.ஆர் தான் கதாநாயகன். 1958-ல் எம்.ஜி.ஆரின் சொந்தத் தயாரிப்பான நாடோடி மன்னன் அமோக வெற்றி பெற்றது. அதன் மூலம் அவர் இயக்குனராகவும் தன்னை செதுக்கி கொண்டார்.
1959 மதுரை நகரத்து மக்கள் அவருக்கு அன்புப் பரிசாக 110 சவரனில் தங்கவாள் வழங்கிப் போற்றினர்.
எம்.ஜி.ஆர். 136 படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய சினிமாப் புகழ் அரசியலிலும், அரசியல் செல்வாக்கு சினிமாவிலும் அவருக்குக் கை கொடுத்தது.
எம்.ஜி.ஆர். தி.மு.க. கூட்டங்களில் கலந்து கொண்டு, தேர்தல் பிரச்சாரம் செய்தார். 1962-ல் தி.மு.க வெற்றி பெற்ற போது எம்.ஜி.ஆரை எம்.எல்.சியாக்கினார் அண்ணா.
ஒளி விளக்கு எம்.ஜி.ஆரின் நூறாவது படம்.
ரிக்ஷாக்காரன் படத்துக்காக ‘பாரத்’ விருது பெற்றார் அவர்.
எம்.ஜி.ஆர் நடிப்பின் மூலம் பெருஞ்செல்வத்தைக் குவித்திருந்தார். அந்தப் பணத்தை அப்படியே பூட்டி வைத்துக் கொண்டுவிடவில்லை அவர்.
அரசியல்வாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்று பலருக்கும் அவருடைய உதவி கிடைத்தது. மருத்துவமனை, கல்லூரிகள், புயல் வெள்ள வறட்சி நிவாரணம் என்று பல நல்ல காரியங்களுக்கு அவர் நிறையவே வாரி வழங்கியிருக்கிறார். வள்ளல், மக்கள் திலகம் என்ற பட்டங்களுக்கு சொந்தக்காரர் ஆனார்.
1969-ல் அண்ணா மறைந்தபின் கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்றார். அப்போது எம்.ஜி.ஆர். கழகப் பொறுப்பாளர். 1971-க்குப் பிறகு கலைஞர் – எம்.ஜி.ஆர். இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். கழகத்திலிருந்து வெளியேறினார்.
எம்.ஜி.ஆர். தி.மு.க கழகத்திலிருந்து வெளியேறி அகில இந்திய அண்ணா தி.மு.க. என்று தனி அமைப்பை ஏற்படுத்தினார். 1977 தேர்தலில் அ.இ.அ.தி.மு.க  127 இடங்கள்) வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்தது.  எம்.ஜி.ஆர். முதல்வர் ஆனார்.
பத்மஸ்ரீ, டாக்டர் என்று எம்.ஜி.ஆர். பல பட்டங்களைப் பெற்றவராயினும் தமிழ்வாணன் வழங்கிய மக்கள் திலகம் பட்டமும், கிருபானந்தவாரியார் வழங்கிய பொன்மனச் செம்மல் பட்டமும் குறிப்பிடத்தக்கவை.
1984-ல் நோய் வாய்ப்பட்ட எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கிருந்தபடியே தேர்தலில் வெற்றி பெற்றார். மக்கள் ஆட்சி அமைக்கும் உரிமையை மூன்றாவது முறையும் அவருக்கு வழங்கினர்.
மீண்டும் நோயுற்ற எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பினார். சிகிச்சை பலனின்றி தொடர்ந்து நலிவுற்றவர் 1987 டிசம்பர் 24-ஆம் நாள் அதிகாலை மரணமடைந்தார். ‘பாரத ரத்னா’ வரை பல சிறப்புகள் பெற்றாலும் தமிழக மக்களுக்கு என்றும் அவர் இதயக்கனி தான் எம்.ஜி.ஆர்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!