தமிழகம்

அழகர் கோயிலில் நவீன பிரசாத கூடம், பூங்கா திறப்பு: அமைச்சர்கள்.

40views
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நவீன பிரசாத தயாரிப்பு கூடத்தையும், ரூ.48 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவையும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
மதுரை மாவட்டம் , அழகர்கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் (04.07.2023) இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நவீன பிரசாத தயாரிப்பு கூடத்தையும்,  ரூ.48 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவையும் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள்.
தொடர்ந்து, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் , பொறுப்பேற்ற பின்பு கடந்த 2 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் தமிழ்நாட்டில் திருக்கோவில்கள் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை அழகர்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது.
ஒரு மாதத்தில் ராஜ கோபுரத்திற்கும், அடுத்த இரண்டு மாதத்தில் கள்ளழகருக்கும் குடமுழுக்கு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 764 கோயில்களில் 501 கோயில்களுக்கு மத்திய அரசின் தர சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. அதிகமாக தரச்சான்று பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு. திருச்செந்தூர் கோவிலை மேம்படுத்த ரூபாய் 200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. சுவாமிமலை கோவிலில் லிப்ட், திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ரோப்கார் ஆகியவற்றிற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் 812 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆட்சியை “குடமுழுக்கின் உற்சவ ஆட்சி” என சொல்வதில் பெருமை கொள்கிறோம். கடந்த ஆண்டு மேற்கொண்ட குடமுழுக்கு உள்ளிட்ட திருப்பணிகளை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் கூடுதலாக தொடர நடவடிக்கை எடுத்து வருகிறோம். மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள், இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும். அதனை தொடர்ந்து திருக்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தும் பணிகளையும் தொடர்ந்து கண்காணித்த வருகிறோம். அழகர்கோவில் மலையில் சாலைகள் அமைக்கும் பணிகளுக்காக வனத்துறையின் அனுமதி பெறப்பட்டு, ஓரிரு நாட்களில் சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர் – பக்தர் உறவு சமூகமாக இல்லாவிட்டால் அதை கேட்கும் உரிமை இந்துசமய அறநிலையத்துறைக்கு உண்டு. பக்தர்கள், இறைவனுக்கு அடுத்தபடியாக கருதுவது தீட்சிதர்களையும் அர்ச்சகர்களையும் தான். அதை மதித்து பக்தர்களை கவுரவிக்க வேண்டிய பொறுப்பு தீட்சிதர்களுக்கு உண்டு. அப்படி பக்தர்களுக்கு மதிப்பு அளிக்காவிட்டால் அங்கு அரசு தலையிடும். கோவிலில் சட்ட மீறல் இருந்தால் சட்டத்தின் ஆட்சி நடக்கும் மாநிலத்தில் அதைக்கேட்கும் அனைத்து உரிமையும் இந்துசமய அறநிலையத் துறைக்கு உண்டு.
உயர்நீதிமன்ற ஆணையை ,  தீட்சிதர்கள் மீறியதால் தான் அரசு அதில் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசின் ஆணையை மீறிய அர்ச்சகர்களின் நடவடிக்கையை உடைத்து எறிந்து பக்தர்கள் கனகசபை மீது ஏறி நான்காவது நாள் தரிசனம் செய்தார்கள். இதை ஒரு போட்டியாக கருதவில்லை. பக்தர்களின் தேவையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தெய்வத்திற்கு பணிவிடை செய்யும் தீட்சிதர்களுக்கு உண்டு. அவர்கள் நேர்மையாக மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். தனியார்வசம் கோவில் சொத்துக்கள் இருந்த போது கோயில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு உள்ளன. அதன் காரணமாகத்தான் அறநிலைய துறை வசம் கோயில்கள் கொண்டு வரப்பட்டன. அரசிடம் உள்ள வரை தான் கோவில்கள் சொத்துக்கள், பக்தர்கள், பணியாளர்கள் அர்ச்சகர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு என, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் க.வி.முரளிதரன் , மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் , மு.மணிமாறன் உட்பட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, கோயில் துணை ஆணையர் மு. ராமசாமி மற்றும் அலுவலர்கள் ஆன்மிகப் பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!