தமிழகம்

தாய் மரணித்து தனித்துவிடப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து இன்று “பிறந்த வீட்டு சீருடன் ” திருமணம் நடத்திய “தோப்பூர் அரசு மருத்துவமனை அனைத்து பணியாளர்கள் “

178views
கடந்த 9 வருடங்களுக்கு முன் மதுரைக்கு வடமாநிலத்தில் இருந்து ரொஸ்பெக் என்ற பெண் தனது கைக்குழந்தைகளுடன் டெல்லியில் இருந்து ரயில் மூலம் வந்துள்ளார்.
ரொஸ்பெக்கின் சொந்த ஊர் மதுரை. காதல் கணவனால் கைவிடப்பட்ட அந்த பெண் சொந்த பந்தங்களை தேடி மதுரை வந்துள்ளார்.  ரொஸ்பெக்கிள் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது.
மதுரை ரயில்நிலையத்தில் வந்து இறங்கியதுமே ரொஸ்பெக்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரயில் நிலையத்திலேயே படுத்த படுக்கையானார்.  இந்த சம்பவம் 9 வருடங்களுக்கு முன்பு நடந்ததாகும்.

ரொஸ்பெக்கின் குழந்தைகள் ரீட்டா, அலெக்ஸ் இருவரும் டெல்லியிலே பிறந்து வளர்ந்ததாலே அவர்களுக்கு தமிழ் தெரியவில்லை. அவர்கள் பேசிய இந்தி மொழி, மற்றவர்களுக்கு புரியவில்லை.  இதனால் தாய்க்கு உதவ அவர்கள் அலைந்தார்கள். அங்கு வந்த இந்தி தெரிந்த சிலர், அவர்கள் கதையை கேட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவர்களது தாய் ரொஸ்பெக்கை சேர்த்திருக்கிறார்கள்.  அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ரொஸ்பக்கிற்கு தீவிரமான காசநோய் இருப்பதை பரிசோதனைக்கு பின் கண்டுபிடித்தனர்.
ரொஸ்பெக்கை, காசநோய்க்கு பிரத்தியேக சிகிச்சை வழங்கக்கூடிய தோப்பூர் நெஞ்சக மருத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.  தோப்பூர் மருத்துவர்கள் பெரும் முயற்சி செய்தும், ‘ரொஸ்பெக்’கை காப்பாற்ற முடியவில்லை.  தாயை இழந்த இந்த இரு குழந்தைகளையும் தோப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அரவணைத்து அவர்களே வளர்த்தார்கள்.  ஆனால், அந்தக் குழந்தைகளையும் பரிசோதனை செய்தபோது அவர்களுக்கும் அவரது தாயிடம் இருந்து காசநோய் வந்திருப்பது உறுதியானது. இருவரையும் மருத்துமவனையில் தங்க வைத்து 8 மாதங்கள் சிகிச்சை வழங்கி அந்த நோயில் இருந்து குழந்தைகளை மீட்டார்கள்
மருத்துவர்கள், பணியாளர்கள் தங்கள் பிள்ளைகளை போல் பாசம் காட்டியதால் அவர்களுடய அரவணைப்பில் ஒட்டிக்கொண்டார்கள்.  மருத்துவமனை ஊழியர்களுடன் பேசி பேசி தமிழும் கற்றுக்கொண்டார்கள்.  அவர்களுக்கு தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையே பிறந்த வீடுபோல மாறியது.  நோய் குணமடைந்த நிலையில் சமூக நலத்துறை மூலம், அரசு விடுதியில் இருவரையும் மதுரை தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனை ஊழியர்கள் தங்க வைத்து படிக்க வைத்தனர்.
பள்ளிக்கு லீவு விட்டால் இருவரும் தாய் வீட்டிற்கு வருவது போல் மருத்துவமனைக்கு ஓடி வந்துவிடுவார்கள்.  இந்த சூழலில் ரீட்டா 10-ம் வகுப்பு முடித்து 18 வயது முடிந்த நிலையில் அவர், மீண்டும் தோப்பூர் அரசு மருத்துவமனைக்கே வந்தார். அவர், வேறு எங்கும் செல்ல விருப்பமில்லாமல் மருத்துவமனையிலேயே தங்க வேண்டும் என்று குழந்தை போல் அடம் பிடித்துள்ளார்.  அவரின் பாசத்தில் நெகிழ்ந்துப்போன மருத்துவர்கள் காசநோயாளிகளுக்கு உதவும் தற்காலிக பணி ஒன்றை போட்டுக்கொடுத்து மருத்துவமனையிலேயே தங்கி பணிபுரிவதற்கு ஏற்பாடு செய்தார்கள்.
தற்போது ரீட்டாவுக்கு வயது 22 ஆன நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க மருத்துமனை மருத்துவர்கள், பணியாளர்கள் ஏற்பாடு செய்தனர்.  ரீட்டாவை போலவே பெற்றோரை இழந்த மதுரையில் உள்ள ஹோட்டலில் பணிபுரியும் ஜோசப் என்ற இளைஞரை பேசி முடித்து சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தமும் செய்துள்ளனர்.  ஜூன் 14-ம் தேதி புதன்கிழமை திருமணம் நடைபெற்றது.
‘ரீட்டா’வின் தம்பி அலெக்ஸ், ஐடிஐயில் படிக்கிறார். மருத்துவமனையில் ‘ரீட்டா’, அவரது தம்பியுடன் பழகிய நோயாளிகள், மற்றவர்கள் திருமண நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.  தோப்பூர் மருத்துவர்கள்,. பணியாளர்கள் திருமண அழைப்பிதழ் அச்சடித்து அழைப்பு விடுத்தனர்.
மணப்பெண் ரீட்டாவிற்கு மருத்துவமனை மருத்துவர்கள் செவியர்கள், மற்றும் பல்வேறு நிலை ஊழியர்கள் சீர்வரிசையாக, வீடு கட்டுவதற்காக அவனியாபுரம் அருகே வளையங்குளத்தில் ஒன்றரை சென்ட் பிளாட், 6 பவுன் நகை, கட்டில், பீரோ வாங்கி வைத்திருக்கிறார்கள் திருமணம் முடிந்ததும் இந்த சீர்வரிசைப் பொருட்களை வழங்கினர்.

இறந்து போன நோயாளியின் குழந்தைகளை பாசத்தோடு வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கிய மருத்துவமனை ஊழியர்களின் பின்னணியில் மதுரை அரசு மருத்துமவனை ‘டீன்’ ரத்தினவேலுவின் வழிகாட்டுதலில் தோப்பூர் நிலைய மருத்துவர் Dr.காந்திமதிநாதன் மற்றும் மருத்துவர்கள் , செவிலியர்கள், பணியாளர்கள் இருந்துள்ளார்.

ரீட்டாவிற்கு திருமண உதவிகளை செய்ய அனுமதி வழங்கியதோடு சிகிச்சைப் பெற்ற மருத்துவமனையிலே தற்காலிக பணியும் வழங்கி உள்ளனர்.  கலவரத்திற்கும் முரட்டுத் திற்கும் மதுரையை மேற்கோள் காட்டும் திரைப்படங்கள். உறவுகளை சொல்லவும் உரிமைகள் கொடுக்கவும் இருக்கிறது மதுரையில் “மனிதநேயம்” உயிர்களை இழந்தது போதும்… உறவுகள் அழிந்தது போதும்…” அன்பால் அரவணைக்கவும் ஒரு கருணை இல்லம் மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனை.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!