தமிழகம்

தமிழ் ஹைக்கூ: மூன்றாவது ஹைக்கூ உலக மாநாடு – 2024 : மதுரையில் நடைபெற்ற ஒரு நாள் ஹைக்கூ திருவிழாவில் தமிழக அரசு கவிக்கோ அப்துல்ரகுமான் பெயரால் விருது வழங்க கோரிக்கை

82views
மதுரை : 
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமைக்குரிய மதுரை மாநகரிலுள்ள உலகத் தமிழ்ச்சங்க அரங்கத்தில் 2024 ஜூன் 9 ஞாயிறன்று ‘தமிழ் ஹைக்கூ: மூன்றாவது உலக மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஹைக்கூ கவிஞர்கள் கலந்துகொண்டனர்.
முதலாவதாக, பொய்யாப்புலவர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பிறகு, ஓவியக் கண்காட்சியை ஓவியக்கவிஞர் அமுதபாரதி திறந்து வைத்தார்.
மாநாட்டிற்கு வரவேற்புக்குழு தலைவர் கவிஞர் சகா (எ) கஜேந்திரன் தலைமையேற்றார். செயலாளர் கவிஞர் மூரா அனைவரையும் வரவேற்றார். ரொட்டேரியன் டாக்டர் கே.சீனிவாசன், எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேத்தி கவிஞர் உமாபாரதி ஆகியோர் மாநாட்டை முன்னிலை வகித்தனர்.
சேவை வரி மற்றும் கலால் சுங்கவரித் துறையின் உதவி ஆணையர் ஜி.வெங்கட்சுப்பிரமணியன், தமுஎகச அறம் கிளையின் தலைவர் அ.உமர் பாரூக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ‘ஹைக்கூ
மாநாடு எதற்காக?’ எனும் தலைப்பில் பேசிய மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் நந்தவனம் சந்திரசேகரன் உரையாற்றினார்.

தமிழ் ஹைக்கூ உலக மாநாட்டின் நோக்கம் குறித்து கவிஞர் மு.முருகேஷ் பேசுகையில், “இன்றைக்கு உலகின் திசைகளிலெல்லாம் பரவியிருக்கிற ஹைக்கூ கவிதைகள் தமிழிலும் இளைய கவிஞர்கள் பலராலும் ஆர்வத்துடன் எழுதப்படுகிறது. புதியவர்களுக்கு ஹைக்கூ பற்றிய புரிதலையும் தெளிவையும் உண்டாக்குவதோடு, தமிழ் ஹைக்கூவை உலக அளவில் கொண்டு செல்வதே இந்த மாநாட்டின் நோக்கம்” என்று கூறினார்.
‘தூண்டில்’ மாநாட்டுச் சிறப்பு மலரினை டாக்டர் கே.சீனிவாசன் வெளியிட, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகர் இலக்கியப் புரவலர் அ.ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார். பின்னர், தமிழ்
ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கத்திற்கான இலட்சினையைப் (லோகோ) பற்றி கவிஞர் மு.முருகேஷ் அறிமுகம் செய்ய, ஓவியக்கவிஞர் ஆ.உமாபதி உருவாக்கிய இலட்சினையை ஓவியக்கவிஞர் அமுதபாரதி வெளியிட, இலக்கியப் புரவலர் அ.ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார்.

பின்னர் நடைபெற்ற ஹைக்கூ வாசிப்பரங்கம் 1 & 2, ஹைக்கூ பகிர்வரங்கம், ஹைக்கூ அயலகப் பகிர்வரங்கங்களில் தமிழின் மூத்த – இளைய கவிஞர்கள் 70-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்,
மாநாட்டில் கலந்துகொண்ட மலேசியாவைச் சேர்ந்த ந.பச்சைபாலன், சிங்கப்பூரைச் சேர்ந்த கவிஞர்கள் டி.என்.இமாஜான், ஆதிரன், இலங்கையைச் சேர்ந்த கவிஞர் ஜலீலா முஸம்மில் ஆகியோரின் ஹைக்கூ படைப்பிலக்கியப் பணியினைப் பாராட்டி, ‘ஹைக்கூ பேரொளி’ எனும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மாநாட்டையொட்டி கவிஞர் கவிமுகில் நடத்திய ஹைக்கூ கவிதைப்போட்டிக்கான பரிசளிப்பும், மாநாட்டு ஹைக்கூ வாசிப்பரங்கில் சிறப்பான கவிதைகளைப் படித்த கவிஞர்களுக்கும், மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஓவியத்திற்கு சிறந்த கவிதையெழுதிய கவிஞர்களுக்கான புத்தகப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கவிஞர் மு.முருகேஷ் ஒருங்கிணைப்பில் நாற்பது ஹைக்கூ நூல்களின் வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது.
கவிஞர் தங்கம் மூர்த்தி மாநாட்டு நிறைவுரையில் பேசும்போது, தமிழகத்தில் இன்றைக்கு எழுதப்பட்டு வரும் சிறப்பான பல ஹைக்கூ கவிதைகளை மேற்கோளாகச் சுட்டிப் பேசினார். வரவேற்புக்குழு பொருளாளர் கவிஞர் வெ.கிருஷ்ணவேணி நன்றியுரை ஆற்றினார்.

இந்த மாநாட்டில் மறைந்த கவிக்கோ அப்துல்ரகுமான் பெயரால் தமிழக அரசு ஆண்டுதோறும் சிறந்த ஹைக்கூ கவிஞர்களுக்கு விருதுகளை வழங்க வேண்டுமென்றும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ரூ.5 இலட்சம் வைப்பு நிதி செலுத்தி, ஹைக்கூ இருக்கையை உருவாக்க வேண்டுமென்றும், தமிழக அரசு நூலகங்களுக்கு கொள்முதல் செய்யப்படும் நூல்களில் ஹைக்கூ நூல்களும் வாங்க வேண்டும் என்கிற 3 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரொட்டேரியன் டாக்டர் கே.சீனிவாசன், உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹைக்கூ இருக்கை அமைப்பதற்கான வைப்புநிதி ரூ.5 இலட்சத்தை தானே நன்கொடையாக வழங்குவதாக மேடையிலேயே அறிவித்தார். ஹைக்கூ கவிஞர்களின் பலத்த கரவொலிகளோடு மாநாடு நிறைவுற்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!