தமிழகம்

காயல்பட்டினம் நகராட்சி வார்டு மறுவரையை உடனடியாக செய்ய வேண்டும்; காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை உயர்த்த வேண்டும்; இ.யூ. முஸ்லிம் லீக் காயல்பட்டினம் பிரைமரி ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்

66views
காயல்பட்டினம், ஜூலை 23 –
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் பிரைமரி ஊழியர் கூட்டம் 21.07.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணியளவில், காயல் பட்டினத்தில் உள்ள அதன் தலைமை அலுவலகமான தியாகி பீ.எச்.எம். முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில், நகர தலைவர் எம்.எஸ். நூஹ் ஸாஹிப் தலைமையில் நடைபெற்றது.
அரபி ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.  தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, கூட்ட அறிமுக உரையாற்றினார்.  கூட்டத் தலைவரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி. சுஹைல் இப்ராஹீம், மாவட்ட துணைத் தலைவர் அம்பா ஜாஃபர், நகர நிர்வாகிகளான ஏ.ஆர். தாஹா, என்.டீ. அஹ்மத் ஸலாஹுத்தீன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் இக்கூட் டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை யாற் றினார்.  அண்மையில் நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில், எதிரணியில் அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரண்டு முறை இருந்த ஓ. பன்னீர் செல்வம் அவர்களை எதிர்த்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாநில துணைத் தலைவர் கே. நவாஸ்கனிக்கு ஆதரவாக செய்யப்பட்ட தொடர் தேர்தல் பரப்புரை, அதற்காக வகுக்கப்பட்ட வியூகங்கள், தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரின் மனப்பூர்வமான ஒத்துழைப்பு, ரமழான் நோன்பு காலமாக இருந்த நிலையிலும் – உடல் அலுப்பு உள்ளிட்ட அவதிகள் எதையும் கருத்தில் கொள்ளாமல், தமிழ்நாடு முழுவதிலுமிருந்து கடமை உணர்வுடன் வருகை தந்து களப்பணி ஆற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர்களின் தொடர் உழைப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக – ஒரு தனிப்பட்ட நாடாளுமன்றத் தொகுதிக் காகப் போட்டியிடும் வேட்பாளர் என்ற நிலையில் பார்க்காமல் ஒட்டுமொத்த சமுதாயத்தின் வெற்றியும் இதில் அடங்கி இருப்பதாகக் கருதி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் சமுதாய மக்கள் புனித ரமழான் மாதத்தில் செய்த வலிமையான தொடர் பிரார்த்தனைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டே இறையருளால் மகத்தான வெற்றி கிடைத்துள்ளதாகவும்,  கடந்த தேர்தலில் அவர் பெற்ற வெற்றியைவிட அதிக வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றியைப் பெற்றுள்ள தாகவும் அவர் தனது சிறப்புரையில் குறிப்பிட்டு, இது போன்று கட்சி முன்னெடுக்கும் எல்லா பணிகளிலும் அங்கத்தினரின் மனமார்ந்த ஒத்துழைப்பும், தொடர் உழைப்பும் இருக்குமேயானால் இறையருளால் முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைகள் என்றென்றும் பங்கமின்றி பாது காக்கப்படும் என்று கூறி, கூட் டத்தில் பங்கேற்ற அனை வரையும் உற்சாகப்படுத்திப் பேசினார்.
ஒரு நாள் முன்பு ஏரல் நகர பிரைமரி தலைவரின் இல்லத் திருமண நிகழ்ச்சியை ஒட்டி நடைபெற்ற குருதிக்கொடை முகாமில் கலந்து கொண்டு குருதி கொடையளித்த சமூக சேவகர் லெப்பை தம்பி – நகர நிர்வாகத்தின் சார்பில், மாநில பொதுச் செயலாளரால் பயனாடை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
இக்கூட்டத்தில் பின் வருமாறு தீர்மானங் கள் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டன:-
அழகப்பபுரம் பள்ளிவாசல் புணரமைப்பு பணிகளுக்கு நிதி திரட்டுதல் :
இ.யூ. முஸ்லிம் லீக் சார்பாக குறும்பூர் அருகேயுள்ள அழகப்பபுரம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் புணரமைப்புப் பணிகள் துவங்கப்பட்டு வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி ஞாயிறு மாலை 5.00 மணியளவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறவிருக்கிறது. இதன் புணரமைப்புப் பணி களுக்கு இ.யூ. முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அனைத்து பகுதிகளிலும் நிதி வசூல் திரட்டி முழு ஒத்துழைப்பு வழங்கி இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.
இளைஞர்களுக்கான பயிலரங்கம் :
இ.யூ.முஸ்லிம் லீகின் அவசியத்தை மாணவர்கள், இளைஞர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் அகஸ்ட் மாதம் இறுதியில் இன்பச் சுற்றுலா – பயிலரங்கம் நடத்துவதென்றும், அதற்கான ஏற்பாடுகளை செய்திட இளைஞர் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.சி. சுஹைல் இப்ராஹிம், அதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்திட மாவட்ட செய்தி தொடர்பாளர் ஹாபிழ் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரை இக்கூட்டம் நியமிக்கின்றது.
மணிச்சுடருக்கு சந்தாக்களை அதிகரித்தல் :
அன்றாடச் செய்திகளோடு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அனைத்துப் பகுதி செய்திகளையும், சமுதாயச் செய்திகளையும் உள்ளடக்கி தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஒரே நாளிதழாக மணிச்சுடர் மட்டுமே திகழ்கிறது. எனவே, அதை வளர்த்துப் பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் சமுதாய மக்களுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து, மணிச்சுடர் வெளியீட்டுப் பணி தொய்வின்றித் தொடர்ந்திட சந்தாக்களை அதிகப்படுத்திடவும், ஒவ்வோர் உறுப்பினரும் அதற்காகத் தனிப்பட்ட முறையில் தொடர் அக்கறை செலுத்தவும் இக்கூட்டம் வேண்டிக் கொள்கிறது.
வார்டுகள் மறு வரையறை :
காயல்பட்டினத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளை சிறிதும் மதிக்காமல் கடந்த காலத்தில் செய்யப்பட்ட வார்டு மறுவரையறையை நீக்கிவிட்டு, ஒட்டு மொத்த ஊர் மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் காயல்பட்டினம் நகராட்சியின் மூலம் மீண்டும் முறைப்படி வார்டு மறு வரையறையைச் செய்திட தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
ரயில் நிலைய நடைமேடையை உயர்த்தல் :
காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைமேடை தாழ்ந்த நிலையில் இருப்பதால் பயணிகள் திருச்செந்தூர் சென்று ரயிலில் ஏறும் நிலை இருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, நடைமேடையை உயர்த்தித் தர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும், நகரின் இதர கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பிலும் ஒன்றிய அரசுக்கும், ரயில்வே துறை நிர்வாகத்திற்கும் பல முறை கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.
பயணியர் நலன் கருதி காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை விரைவில் ழபைh டுநஎநட ஞடயவகடிசஅ ஆக உயர்த்தித் தருமாறு ஒன்றிய அரசையும், தொடர்வண்டித் துறையையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
காயல்பட்டினம் கடற்கரை மேம்பாடு :
காயல்பட்டினம் கடற்கரையை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தி வரும் நிலையில், அதை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், முழுப் பாதுகாப்போடும் தொடர்ந்து பராமரித்திடவும், நகரில் சட்டம் ஒழுங்கு கெடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, அதைத் தாண்டி கடற்கரை மேம்பாடு என்ற பெயரில் புதிதாக அரசின் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க வேண்டாம் எனவும் காயல்பட்டினம் நகராட்சியை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு :
காயல்பட்டினத்தில் இளைஞர்களுள் ஒரு சாரார் இடையே போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் முன்னெடுப்பில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அது ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது. வருடங்கள் செல்லச் செல்ல மீண்டும் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதைக் குறித்து இக்கூட்டம் கவலை தெரிவிக்கிறது.
காயல்பட்டினத்தில் போதைப்பொருட்களை தொடர்ந்து பகிர்ந்து வரும் சமூக விரோதிகளை சட்டத்தின் பிடியில் நிறுத்தி, கடுமையான நடவடிக்கை எடுத்து, இந்தக் குற்றச்செயலுக்கு நிரந்தரத் தீர்வு காண ஆறுமுகநேரி காவல்துறையையும், இது தொடர்பில் தொடர்ந்து அக்கறை செலுத்திட தூத்துக் குடி மாவட்ட காவல் துறையை யும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :
காயல்பட்டினம் ரயில்வே நிலைய நடைமேடை உயர்த்துதல், காயல்பட்டினம் கடற்கரையில் நமதூரின் கலாச்சார தனித்தன்மையை பாதுகாத்தல் மற்றும் அதன் சுகாதார மேம்பாடுகள், போதைப் பொருள் பயன் பாட்டுக்கு எதிரான நடவ டிக்கைகள் குறித்து எடுக்கப் பட்டுள்ள தீர்மானங்கள் நிறைவேறாத பட்சத்தில் செப்டம்பர் மாதத்தில் ஊரில் அனைத்து அரசியல் கட்சிகள், ஜமாஅத்தார்களை ஒன்று திரட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைச் செயலாளர் என்.டீ. முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ நன்றி கூற, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ஹாஃபிள் எஸ்.கே. சாலிஹ் துஆ பிரார்த்தனை செய்ய, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.  இக்கூட்டத்தில் காயல் பட்டினம் பிரைமரி உறுப் பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!