கவிதை

நடிப்புக்கொரு சிவாஜி

33views
தமிழ்த் திரையுலகுக்கு அவனொரு சீதனம்…
ஒன்பான் சுவைகளையும் கடந்த
ஒப்பற்ற நூதனம்…
அவன் மவுனத்துக்கும்
சிங்கத்தின் கர்ஜனை உண்டு…
அவன் கர்ஜனைக் குரலுக்குள்ளம்
கடலின் ஆழம் உண்டு…
அவன் குனிந்து நடிக்கும் காட்சியிலும்
நடிப்பு நிமிரும்…
இமயம் போல் உயரும்..
அவன் பணிவுகளில்
மக்கள் அரங்கம்
ஓங்காரமாய் மகிழ்ச்சிக்குரல் எழுப்பும்….
கலைஞரின் பேனா
அவனால் கவுரவம் பெற்றது…
கலைஞர் வசனம் பேசிப்பேசி
கடைக்கோடித் தமிழன் நெஞ்சிலும் தமிழ் மணம் கமழ்ந்தது…
கலைஞர்
விரலால் வரைந்த தமிழைத்
தன் குரலால் தமிழகமெங்கும் கொண்டு சேர்த்தவன் அவன்தான்…
அவன் அம்மிக்கற்களையும்
சிற்பமாக்கிய சிற்பி…
ஆமாம்…
கடைநிலை நடிகர்களும்
அவனோடு நடிக்கையில்
கவனிக்கப் பட்டார்கள்…
மக்கள் வாயால்
கவுரவிக்கப் பட்டார்கள்…
இமயம்…
எந்தச் சிறுபாறைக் குன்றுகளையும்
எட்டி உதைப்பதில்லை அல்லவா…?
அவன் நடிப்புக்கடல்…
சிற்றோடைகளை எப்படிப் புறக்கணித்துப் போவான்…?
அவன் தழும்பாமல்
நிறைந்த நிறைகுடம்…
பொங்கப் பொங்க
பொங்கி கொண்டே இருந்த பாற்குடம்…
நடிகனாய் இருந்தும் – வாழ்வில்
நடிக்கத் தெரியாதவன்…
மேதைகளோடு இருந்தும்
அரசியல் வித்தைகள்
புரியாதவன்..
அவன் நேர்மைக்கு
கலையுலகம் தலைதாழ்ந்தது..
அவனை ஏற்காமல்
அரசியல் தரம் தாழ்ந்தது…
காலை பத்து மணிக் கூட்டத்துக்கு
மாலை ஐந்து மணிக்கு வரும்
அரசியல் வாதிகளிடையே
அவன் மட்டும்தான்
ஒன்பது மணிக்கே வந்தான்…
அரிதாரம் பூசி வந்தவனை
ஏற்றுக்கொண்ட அரசியல்
அரிதாரம் பூசாத இவனை
அரசியலுக்கு வெளியே வைத்தது…
நல்ல வேளை…
அரசியலில் இவன் தோற்றான்…
இல்லையெனில்
திரையுலகம் ஓர் அற்புதமான கலைஞனை இழந்திருக்கும்…
தமிழில் மட்டுமல்ல –
இந்தியாவில் மட்டுமல்ல –
அகில உலகிலும் அவனொரு
சாதனைச் சரித்திரம்…
நடிகனாய் வென்றவன்…
அரசியலில் மட்டும் தோற்றுப் போனான்…
ஆனால் கலையுலக மேதையாய்
மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்து வென்றவன்…
பரிசுகளைத் தந்து அவனை அரசுகள் கவுரவப் படுத்தின…
விருதுகள் வந்து அவன் வீட்டில் அமர்ந்து
தங்கள் விலாசங்களை வெளிச்சப்படுத்தின…
பெரியாருக்குப் பிரியமானான்…
கர்மவீரருக்குக் கரமானான்…
அண்ணாவுக்குத் தம்பியானான்….
கலைஞருக்குத் தோழனானான்…
எம்ஜிஆருக்கு இணையானான்…
எல்லோருக்கும் அன்பனானான்…
நடிப்புலகில் மட்டும் இணையில்லாதவன் எனப் பேரானான்…
அவன்
கலையுலகத்தின் அதிசயம் …
நாடக உலகின் நவரசம்…
அவனை விட்டு விட்டு நீங்கள்
திரைவரலாற்றை எழுத முடியாது…
அவன் இல்லாத நாடக வரலாற்றை வரைய முடியாது…

அத்தாவுல்லா
நாகர்கோவில்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!