தமிழகம்

காட்பாடி கல்புதூரில் பாதையை சரிசெய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி

24views
வேலூர் மாவட்டம், காட்பாடி கல் புதூரில் கடந்த ஒரு மாதமாக பாதையை சரி செய்யாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை கண்டித்தும், பாதையை உடனடியாக சரி செய்து கொடுக்குமாறும் மாநில நெடுஞ்சாலை துறையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தார்.
வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்திற்கு உட்பட்டது கல்புதூர். இந்த கல்புதூர் 1வது வார்டு ஆகும். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மாநில நெடுஞ்சாலை துறை கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டியது. இது நான்கு புறமும் பள்ளம் தோண்டியதால் பொதுமக்கள் செல்லும் வழியை முழுமையாக அடைத்து விட்டனர். பொதுமக்களும் பணி முடியும் என்று அமைதி காத்து மாற்று வழிப் பாதைகளில் சுற்றி சுற்றி தங்களது இல்லங்களுக்கு சென்றபடி இருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த பாதையைச் சீரமைக்காமலும் கழிவுநீர் கால்வாய் பணியை முடித்து கொடுக்காமலும் மாநில நெடுஞ்சாலைத்துறை அலட்சியப் போக்கில் செயல்பட்டது. இதனால் கொதித்து எழுந்த கல்புதூர் பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து கடலூர் -சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட நேற்று காலை 9 20 மணிக்கு ஒன்று திரண்டு வந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி மற்றும் காட்பாடி காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் கல்புதூருக்கு விரைந்து வந்தனர். அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் இந்த கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை முடித்துக் கொடுத்து தங்களுக்கு சாலை வசதியை முழுமையாகவும், நிரந்தரமாகவும் ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்திற்காக பொதுமக்கள் திரண்டதால் சுமார் 20 நிமிடங்கள் கல்புதூர் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனியின் உறுதி மற்றும் உத்திரவாதத்தை நம்பிய கல்புதூர் பகுதி வாழ்பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!