தமிழகம்

பொது சிவில் சட்டம் எதிரொலி; பாராளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் சரிவை சந்திக்கும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேட்டி

32views
மத்திய அரசின் பொது சிவில் சட்ட அறிவிப்பால் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் சரிவை சந்திக்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.எம். காதர் மொகிதீன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறி இருப்பதாவது, இந்தியாவில் பல்வேறு மத, இன, மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை கண்டுள்ள இந்திய தேசத்தில் ஒவ்வொரு மதத்தினரும் தனித்துவமிக்க அவரவர் கலாச்சார முறைகளை பின்பற்றி வரும் நிலையில், அனைத்து மத மக்களுக்கும் நீதியை நிலை நாட்டுவதாக பாஜக அரசு கூறுவது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது போல் உள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு நாட்டு மக்களை குழப்புவதற்காகவே பொது சிவில் சட்டத்தை அறிவித்துள்ளது. பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம் என்ற அறிவிப்பின் மூலம் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் சரிவை சந்திக்கும். மேலும் அவர் கூறுகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை எதிர் காலத்தில் கொண்டு வருவோம் என அம்பேத்கர் வலியுறுத்தி இருந்ததாக தவறான தகவல்களை பரப்பி வருகிறார். இதில் துளி அளவும் உண்மை இல்லை. தமிழக வரலாற்றிலேயே ஆளுநர் ஆர்.என். ரவியை போல ஒரு ஆளுநரை பார்த்ததில்லை. ஆளுநர் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அரசியல் கட்சி பிரமுகர் போல் செயல்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கி, மாவட்ட தலைவர் எஸ். செய்யது சுலைமான், மாவட்ட பொருளாளர் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹிம், மாணவரணி தேசிய துணைத் தலைவர் எம். அல் அமீன், இளைஞரணி மாநில துணைத் தலைவர் ஏ. செய்யது பட்டாணி, மாநில தலைமை நிலைய பேச்சாளர் எம். முஹம்மது அலி, இராமநாதபுரம் நகர தலைவர் முஹம்மது காசிம், புளியங்குடி சாகுல் ஹமீது, சாம்பவர் வடகரை ரசூல் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!