50
டப்பாங்குத்து – திரை விமர்சனம்
ஒரு கலாச்சாரத்தின் மிக முக்கிய அங்கம் நாட்டுப்புற கலைகள். மரபு சார்ந்த எளிய மக்களின் பொழுபோக்கு கலைகள் காலச்சக்கரத்தில் சிக்கி காணமல் போகுமானால் அது ஒரு பண்பாட்டின் வீழ்ச்சி என்றே சொல்ல வேண்டும்.
கரகாட்டம், ஒயிலாட்டம், போன்ற நாட்டியங்களும், ஒப்பாரி, கொலசிந்து, தாலாட்டு போன்ற பாட்டு வகைகளும் கிராமிய விழுமியங்களின் எச்சங்களாக இன்றும் இருக்கின்றன என்றாலும் காலப்போக்கில் அந்த கலைஞர்கள் வாழ்வாதாரம் இன்றி வேறு தொழிலுக்கு இடம் பெயர்ந்து விட்டனர் என்பதை ஒரு திரைப்படம் மூலம் சொல்ல முனைத்திருக்கின்றனர்.
கோவில் திருவிழாக்களுக்கு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தும் மதிச்சியம் பாண்டியின் தாய் மாமன் தர்மலிங்கம். ஆட்டக்காரர்களை ஒப்பந்தம் செய்து தரும் வேலை செய்து வருபவன். பாண்டி அந்த ஊரில் தனம் என்ற ஆட்டக்கார பெண்ணை விரும்புகிறான். இது அவன் தாய்மாமனுக்கு பிடிக்கவில்லை. தனம் தன் தாய் எங்கிருக்கிறாள், தன்னுடைய அப்பா யார் என்பதை கண்டுபிடித்தால் தான் பாண்டியை திருமணம் செய்து கொள்வதாக சொல்கிறாள். தனத்தின் அப்பா யார் , இதற்கெல்லாம் காரணம் யார் என்பதை அறியும் தருவாயில் அதிர்ந்து போகிறான் பாண்டி. தனத்தை முடிவில் கைப்பிடித்தானா என்பதை சுவாரஷ்யமான திரைக்கதை மூலம் சொல்லி முடிக்கின்றனர்.
இப்போதெல்லாம் திரைப்படங்களில் பாடல்கள் வைக்கலாமா வேண்டாமா என்பதான சர்ச்சை போய் கொண்டிருக்கும் நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்களை வைத்துக்கொண்டு துணிச்சலாக களம் இறங்கி இருக்கும் குழுவினருக்கு பாராட்டுக்கள்.
கிராமிய பாடல்களில் கோலோச்சிய கரிசல் கருணாநிதி, தேக்கம்பட்டி சுந்தரராஜன், ஆக்காட்டி ஆறுமுகம், பரவை முனியம்மா, தேனீ குஞ்சரம்மா, கிடாக்குழி மாரியம்மா இவர்களையெல்லாம் இன்றைய தலைமுறைக்கு பாடல்கள் வழியாக கொண்டு வந்து சேர்த்திருக்கின்றனர்.
மதிச்சியம் பாண்டியாக சங்கரபாண்டியன் கரகாட்டக்காரன் ராமராஜனை பிரதிப்பளிக்கும் வேடம் என்றாலும் எந்த இடத்திலும் அந்த சாயல் வராமல் பார்த்துக் கொள்கிறார்.
தீப்தி ராஜ் படத்தின் கதாநாயகி தனமாக வருகிறார். கொஞ்சம் வடநாட்டு சாயல் தெரிந்தாலும் தமிழக கலைகளின் அடையாள நாயகியாக தகவமைத்து கொள்வதில் சபாஷ் போட வைக்கிறார்.
ஜக்கு என்ற கதாபாத்திரத்தில் காதல் சுகுமார். படம் தொய்வில்லாமல் செல்ல பக்கபலமாக இருக்கிறார். தர்மலிங்கமாக வரும் ஆண்ட்ருஸ், ராசாத்தியாக வரும் துர்கா இவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.
ஆத்தங்கரை பூந்தோட்டம் ..என்ற பாடலில் தமிழ்நாட்டில் பாயும் நாற்பத்தைந்து ஆறுகளை பட்டியலிட்டு அந்த ஆறுகள் பாயும் இடங்களில் படமாக்கி சப் டைட்டிலுடன் கொடுத்திருக்கும் முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
படம் முழுக்க பாடல்கள். படம் ஆரம்பித்து ஒரு அரை மணிநேரத்திற்குள் ஆறு பாடல்கள் கடந்துவிடுகின்றன. படத்தின் பலமும் பலவீனமும் இது தான் என்றாலும் இசையமைப்பாளராக கம்பீரமாக தன் வேலையை கொண்டாட வைக்கும் விதமாக செய்திருப்பதால் இசையமைப்பாளர் சரவணனை நாம் கொண்டாடலாம்.
தன் கேமராவின் வழியாக கிராமத்தின் தெருக்கூத்தை திரையில் படமாக்கி இருக்கும் ஒளிப்பதிவாளர் ராஜா கே பக்தவச்சலம் பாராட்டுக்குரியவர். தீனாவின் நடனம் படத்திற்கு தெம்பு. படத்தொகுப்பாளரின் பங்கு மெச்சலாம்.
கதை, திரைக்கதை, வசனம் எஸ்.டி.குணசேகரன். தன்னுடைய வேலையை கனகச்சிதமாக செய்திருக்கிறார். பாடல்கள் மற்றும் இயக்கம் முத்துவீரா. ஒரு ஆவணப்படத்தை ஆவணமாக கடத்தாமல் ஜனரஞ்சகமாக கடத்தி இருப்பதில் சிரத்தை தெரிகிறது.
ஒரு ஆவணப்படமாக மாறிவிடமோ என்கிற பயத்தை திரைக்கதை வழியாக போக்கிக்கொண்டாலும் படம் ஒரு வித அலுப்பினை தருகிறது என்பதை மட்டும் மறுக்க வாய்ப்பில்லை.
எப்படி இருந்தாலும் டப்பாங்குத்து – நாட்டுப்புறக் கலைக்கும் நாட்டுப்புற கலைஞர்களுக்கும் உன்னதம் சேர்க்க முனைத்திருப்பதால் பாராட்டுடன் நாம் வாழ்த்தவும் செய்யலாம்.
RJ நாகா
add a comment