சினிமா

பிரசார திரைப்படமா இல்லை மசாலா திரைப்படமா ….

108views
சாலா : திரைவிமர்சனம்
குடும்ப உறவுகளின் உன்னதம், அகச் சிக்கலில் இருந்து தீர்வு, காதலின் அழகு, சமூக பிரச்சனைகளின் பிண்ணனி – இப்படி வெளி வந்துகொண்டிருந்த தமிழ் சினிமா சற்று திசைமாறி ரத்தம், வன்முறை, துப்பாக்கி, கொலை, கற்பழிப்பு, என பயணித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் யூ டர்ன் அடித்து பீப்புள் மீடியா பாக்ட்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் சாலா’.
வடசென்னை ராயபுரத்தில் பார்வதி ஒயின்ஸ் உரிமையாளர் குணாவுக்கும், அவரது தொழில் முறை கூட்டாளி தங்கதுரைக்கும் பகை. மிகப்பெரிய செல்வாக்குடன் வலம் வந்துகொண்டிருக்கும் குணாவின் பார் மூடப்பட்டு கோர்ட்டால் சீல் வைக்கப்படுகிறது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்க குணாவும் தங்கதுரையும் அவரவர் வழியில் வளர்ந்து பெரிய தாதாக்களாகின்றனர்.
குணாவின் பாரில் வேலைக்கார சிறுவனாக இருக்கும் ‘சாலா’ ஒருநாள் தன் முதலாளி கொலை செய்யப்படும் தருவாயில் காப்பாற்றுகிறான். இந்த சம்பவத்திற்கு பிறகு அவன் மீது அளவு கடந்த அன்பை பொழியும் குணா தன் தம்பியாகவே அவனை சுவீகரித்துக் கொள்கிறான். நாளுக்கு நாள் குணா, தங்கதுரை கோஷ்டிகளுக்கு இடையில் மோதல் வலுக்கிறது. இதற்கிடையில் தேர்தலில் குணா வேட்பாளராக நிற்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
புனிதா என்கிற பள்ளிக்கூட ஆசிரியை மதுக்கடைகளுக்கு எதிராக செயல்படும் சமூக போராளியாக வருகிறார். மது கடைகளை இழுத்து மூட வேண்டும், சுகாதாரமில்லாமல் இயங்கும் பார்களை உடனடியாக அரசு சீல்வைக்க வேண்டும். அதற்கான அரசு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், ஹெல்மெட் போட்டுக்கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டவேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைங்களை முன்வைத்தபடி வலம் வருகிறார். ஒரு இடத்தில் சாலாவிடம் இந்த கடையும், பாரையும் இழுத்து மூடுவேன் என்று சவால் விடுகிறார் புனிதா.
குணாவின் பார்வதி ஒயின்ஸ் மீண்டும் திறக்கப்பட்டதா, புனிதாவின் சவால் நிறைவேறியதா, குணா தங்கதுரையின் கோஷ்டி மோதல்கள் முடிவுக்கு வந்ததா போன்ற கேள்விகளுக்கு விடை தான் ‘சாலா’.
சாலாவாக தீரன் . இந்த படம் அவருக்கு முதல் திரைபபடம். அவர் உடல் மொழியும் நடிப்பும் அந்த பாத்திரமாகவே பொருந்தி போகிறார். மனிதர் கோடம்பாக்கத்தில் ஒரு ரவுண்டு வர சாத்தியங்கள் இருக்கின்றன. புனிதாவாக ரேஷ்மா வெங்கடேஷ், பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். தமிழ் சினிமா கதாநாயகி போல அவரை பயன்படுத்தாதது அவருக்கு கிடைத்த கௌரவம். பார்க்க அழகாகவும் இருக்கிறார். நல்ல கதைக் களத்தை தேர்வு செய்து நடித்தால் எதிர்காலம் அவருக்கு சிறப்பாக இருக்கும்.
குணாவாக அருள்தாஸ் தன் இயல்பான நடிப்பின் மூலம் நம்மை கவர்கிறார். சார்லஸ் வினோத் தங்கதுரையாக வந்து வில்லத்தனத்தில் ரவுண்டு கட்டுகிறார். காமடியன் இல்லாத குறையை சாலாவின் நண்பன் தாஸாக வரும் ஸ்ரீநாத் பூர்த்தி செய்கிறார். பள்ளிக்கூட மாண்வர்களாக வரும் அந்த மூன்று பேரும் கவனத்தில் நிற்பது திரைக்கதையின் பலம். ஒரு பீர் வாங்கி மூன்று பேர் குடிக்க போராடும் இடம் தொடங்கி வில்லனிடம் மாட்டிக் கொள்ளும் வரை படத்தின் போக்குக்கு துணை செய்கின்றனர்.
ரவீந்திரநாத் குருவின் காமிரா கோணம் அலட்டல் இல்லாமல் இருப்பதே படத்தின் பிரசார நெடியை சற்று தணிக்கிறது. புவனின் படத்தொகுப்பு இயக்குனருக்கு கூடுதல் சப்போர்ட். தீசனின் பின்னணியிசை படத்தின் வெற்றிக்கு துணை செய்கிறது. பாரில் நடக்கும் ஒரு பாடல் தாளம் போடும் ரகம்.
தயாரிப்பளார் டி.ஜி. விஸ்வ பிரசாத், இணை தயாரிப்பாளர் விவேக் கொச்சிபோல்ட்டா இருவருக்கும் இந்த படம் நல்ல பெயரை சம்பாதித்து கொடுக்கும்.
படத்தின் இயக்குனர் எஸ்.டி.மணிப்பால். முதல் படத்தை பிரசார பாணியில் ஆரம்பித்து வணிக ரீதியாக அதை ஒரு வெற்றிப் படமாக தரமுடியும் என்பதை நிரூபணம் செய்திருக்கிறார். ஒரு சாதாரண கதை தான். பிரமாண்டங்களை முன் வைக்காமல் அவர் எடுத்திருப்பது வரவேற்புக்குரியது.
வழிநெடுக பிரசார நெடி கொஞ்சம் தூக்கல். சினிமா என்றாலே ஹீரோ அல்லது ஹீரோயின் அநாதை பிள்ளைகளை வளர்ப்பது போல காட்டுவது, ஹீரோ சட்டத்தை மதிக்காமல் செயல்படுவது போல் சித்தரிப்பது எல்லாம் இந்த படத்திலும் வந்திருப்பது கொஞ்சம் பழைய வாசனை வீசுவதை தவிர்க்க முடியவில்லை. கிளைமாக்ஸ் அதிர்ச்சி.
மொத்தத்தில் ‘சாலா’ வகுப்பறைக்கு வெளியே வந்திருப்பதால் தப்பித்திருக்கிறது.
விமர்சனம் : RJ நாகா

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!