சினிமா

விஷமத்தனமாக மாறிவிட்டிருக்கும் கதை

110views
BOAT – திரைவிமர்சனம் :
ஒரு சினிமாவின் தலையெழுத்தை சினிமாவால் தீர்மானிக்க முடியாது.
இரண்டு மணிநேரம் ஓடும் ஒரு சினிமா திரையில் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட பார்வையாளனிடம் கடத்தும் விளைவுகள் இங்கு அதிகம் என சொல்லலாம்.
தலைமுறை கடந்து புதுமையும், தொழிநுட்பமும் இணைந்து செல்லுலாய்டு கனவுகளை சீராக செதுக்க ஆரம்பிக்கிறது இன்றைய ரசனை.
திரையரங்கில் நிகழ்த்தும் மாயாஜாலங்களில் பெரும்பாலும் வணிக நோக்கம் அற்றவைகளாக இருப்பது தான் ஆச்சர்ய முரண்.
சிம்புதேவனின் இப்போதைய அப்படிப்பட்ட ஆர்ச்சயம் தான் ‘போட்’.
1943 ல் சுதந்திர போராட்டக் களத்தின் இறுதி சுற்றில் ஜப்பான்காரன் குண்டு வீசப்போகிறான் என்கிற அச்சத்தில் மக்கள் இடம் பெயரும் நேரத்தின் பிண்ணனியில் கதை ஆரம்பமாகிறது.
ஒரு படகு பத்து பேர் பயணிக்க வேண்டிய சூழ்நிலை. அதிக எடை ஒரு பக்கம். சுறா மீன்களின் தாக்குதல் இன்னொரு பக்கம் . மழை புயல் என இயற்கையின் பயமுறுத்தல் என கதையின் வலுவான பக்கங்களை பட்டியலிட்டு விட்டு அம்புலிமாமாவாக கதைச் சொல்லி புரியவைப்பதில் மெனக்கெட்டிருப்பது புரிகிறது.
நவீன பாரத விலாஸை நடுக்கடலில் அரங்கேற்றி இருக்கிருக்கிறார் இயக்குனர்.
தெலுங்கில் மாட்லாடும் ஒரு பெண், மலையாளத்தில் சம்சாரிக்கும் ஒரு மனிதன், ஹிந்தியில் உரையாடும் ராஜஸ்தான் சேட்டு, பக்கா சென்னை காசிமேடு தமிழில் துடுப்பு போடும் மனிதன், போதாக்குறைக்கு பிரிட்டிஸ்காரனின் தமிழை துப்பாக்கி குண்டுகளுடன் அலையடிக்க வைத்திருக்கும் சாமர்த்தியம் என நிறைய விஷயங்கள் இருந்தாலும் கதை விஷமத்தனமாக மாறிவிட்டிருக்கிறது.

ஜப்பான்காரன் போடப்போகும் குண்டுக்கு பயந்து உயிர்தப்பும் எல்லோரும் மீண்டும் கரையில் கால் வைத்தார்களா என்பதை பதைப்புடன் அரதப் பழசான திரைக்கதை உத்தியில் சொல்ல முனைந்திருப்பதில் திரைக்கும் ஆடியன்ஸுக்கு இடையில் உள்ள கனைக்ட்டிங் மிஸ்ஸிங்.
படம் முழுக்க பேசி பேசியே போராடிக்கிறார்கள. வேறு வழியும் இல்லை. நடக்கடலில் இருந்து அவர்களாலும் தப்ப முடியாது. கதவு திறந்து நம்மாலும் வெளியேறவும் முடியாது.
யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், சின்னிஜெயந்த், கௌரி ஜி கிஷன், மதுமிதா, சாம்ஸ், ஷா ரா, லீலா, அக்சத், ஜெஸ்ஸி என எல்லோரையும் ஏற்றிக்கொண்டு பயணிக்கிறது போட்.
நம்மை மூச்சு திணற திணற வைத்து செய்திருக்கிறது டீம்.
ஒளிப்பதிவில் மாதேஷ் மாணிக்கம் கொஞ்சம் கவனிக்க வைக்கிறார். நடுக்கடல் அனுபவங்களை அவர் புத்தகமாக எழுதி வெளியிடலாம். தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பு சுமார் ரகம்.
ஜிப்ரான் அந்தக்காலத்து இசையை தர நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். கர்நாடக இசையும், கானாவையும் இணைத்து அவர் செய்திருக்கும் புதுமை ஆஸ்கருக்கு யாராவது பரிந்துரைக்கலாம்.
வரலாற்று பின்னணியில் கதை சொல்லவேண்டிய நிர்பந்தம் வாய்க்கும் போது நிறைய கவனம் வேண்டும்.
கண்ணுக் கெட்டிய தூரம்வரை கடல். ஒரு போட். இந்த லிமிடேஷனில் எல்லோருக்கும் ஏற்படும் அல்சைமர் சிம்புதேவனுக்கும் ஏற்பட்டிருக்கிறது. மற்றபடி தன்னை கரையேற்றிக் கொள்ள நிறைய மெனக்கெட்டிருக்கிறார் மனிதர்.
சுதந்திர காலத்து சாயலோ, அது தொடர்பான குறிப்புகளோ இடம்பெறாமல் போயிருந்தால் படம் வியாபார சந்தையில் மல்லுக்கட்ட முடியாமல் போயிருக்கும்.
பத்து பேருக்கா தத்தளிக்கிறது என்று பார்த்தால் இப்போது தான் லேட்டாக புரிகிறது. மொத்த பார்வையாளர்களையும் மறைமுகமாக போட்டில் ஏற்றிக் கொண்டு பயணித்திருப்பதால் தான் நடுக்கடலில் தத்தளிக்கிறது அந்த போட்.
உங்களுக்கு நீச்சல் தெரிந்தால் நீந்தி கரையேறலாம்.
RJ நாகா

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!