147
ரயில் / திரை விமர்சனம்
தன்னை யாரும் அங்கீகரிக்கவில்லை என்கிற ஒற்றை காரணத்திற்காக குடிகாரனாக மாறிவிடும் கதாநாயகன். ஏழு வருடமானாலும் நிச்சயம் தனக்கு குழ்நதை பிறக்குமென்கிற நம்பிக்கையில் வாழும் கதாநாயகி. மருமகன் பொறுப்பற்று இருக்கிறானே, என்றுதான் திருந்துவானோ என்று எங்கும் மாமனார். பிழைப்பிற்காக சொந்த மாநிலத்தில் தன் குடும்பத்தை விட்டுவிட்டு தமிழ்நாட்டிற்கு வரும் வடநாட்டு இளைஞன். எந்த கவலையும் இல்லாமல் குடியொன்றையே பிரதானமாக கருதி வாழும் துணைக்கதாபாத்திரம். இவர்களை வைத்துக்கொண்டு ஒரு பேமிலி எண்டர்டைன்மெண்ட் டிராமாக வந்திருக்கும் திரைப்படம் “ரயில்”
முத்தையா ஒரு எலெக்ட்ரீஷியன். ஒழுங்காக வேலைக்கு போகமாட்டான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடிப்பது ஒன்றையே தொழிலாக வைத்திருக்கிறான். அவனது மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு குழந்தையில்லை. இவர்கள் குடியிருக்கும் வீட்டில் ஒரு வடக்கத்தி இளைஞன் சுனில் வசிக்கிறான். தீதி தீதி என்று பாசத்தைபொழிகிறான். சுனிலை தம்பியாகவே நினைத்து வீட்டில் வைத்திருக்கும் மீன் குழம்பு வரை கொடுத்து அன்பை பகிர்கிறாள் செல்லம்மாள். இது முத்தையாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. வடநாட்டு மக்கள் புலம் பெயர்ந்து தமிழ்நாட்டில் வேலைக்கு வருவதால் உண்டான பாதிப்புகளை பட்டியலிட்டு பேசும் தன் நண்பன் வரதனுடன் சேர்த்து சுனிலை தீர்த்துக்கட்ட நினைக்கிறான் முத்தையா. அதன்பிறகு என்ன நடந்தது. முத்தையா- செல்லம்மாள் நிலை என்ன. சுனில் என்ன ஆகிறான் என்பது படத்தின் கதை.
முத்தையாவாக குங்குமராஜ் நடித்திருக்கிறார். அப்படியே பாத்திரமாகவே மாறி இருக்கிறார். சுனில் குடுமபத்தாருடன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது சுனில் அப்பா தனக்கு அறிவுரை சொல்வதை ஏற்றுக்கொள்ளாமல் சட்டென்று எழுந்து கைகழுவ செல்லும் ஒரு காட்சி. வெகு எதார்த்த்மான முகபாவத்துடன் மனிதன் அசத்திவிடுகிறார். இப்படி பல காட்சிகளை பட்டியலிடலாம்.
செல்லம்மாள் கதாபாத்திரத்தில் வைரமாலா. நல்ல நடிப்பு. கதநாயகனுக்கு இணையான பாத்திரம். கணவனை ஒருமையில் விளிப்பதிலாகட்டும், தன் குழந்தை ஆசையை ஏக்கமாக பேசும் காட்சியாகட்டும், சுனில் மனிவியை கட்டிபிடித்து அழும் போதும் சரி, நடிப்பைக் கடந்து வேறு ஒரு பரிமாணத்தை கடத்துகிறார்.
சுனில் கதாபாத்திரத்தில் வடகத்தி இளைஞனாக வரும் பர்வேஸ் மெஹ்ரு அப்படியே பாத்திரத்துடன் பொருந்தி இருக்கிறார். தான் முத்தியாவை அடித்துவிட்டதற்காக மன்னிப்பு கேட்கும் இடம் அருமை.
வரதனாக ரமேஷ் வைத்தியா. ஒல்லியான ஒரு நகைச்சுவை நடிகர் கோடம்பாக்கத்திற்கு கிடைத்திருக்கிறார். காமெடி நடிகர்கள் எல்லாம் கதாநாயகன்களாக வலம் வர ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில் இவரின் அறிமுகம் சோடைபோகாத ஒன்று.
துணைக் கதாபாத்திரங்களாக மாமனாராக வரும் செந்தில் கோச்சடை, வீட்டின் உரிமையாளர் கிழவி, கதாநாயகனுடன் திருப்புளி என்ற பாத்திரத்தில் வரும் சுபாஷ் ஆகட்டும் எல்லோரும் அவரவர் கேரக்டர் உணர்ந்து செய்திருக்கின்றனர்.
இசை அறிமுகம் SJ ஜனனி . பாடல்களில் அப்படியே இளையராஜாவை கண்முன் நிறுத்துவதை தவிர்த்திருக்கலாம். பூ பூக்குது புத்திக்குள்ள பாடல் மட்டும் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் பெரிதாக மெனக்கெடல் இல்லை. இசையால் நகர முடியால் பல இடங்களை திரைக்கதையால் நகர்த்தி இருக்கின்றனர். பாடல்கள் ரமேஷ் வைத்யா எனபது உபரி தகவல்.
தேனீ ஈஸ்வரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமா பலவீனமா? என்று பட்டிமன்றமே வைக்கலாம்.
பூ பூக்குது புத்திக்குள்ள பாடல் படமாக்கி இருப்பதில் அப்படி ஒரு மெனக்கெடல் தெரிகிறது. கதை என்ன கேட்கிறதோ, காட்சிகளுக்கு என்ன தேவையோ அதை எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ளாத விதமே மேலோங்கி தெரிகிறது.
நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு காட்சிகளின் நகர்விற்கு துணைசெய்திருந்தாலும், ஒரு சில இடங்களில் திரைக்கதையின் தெளிவின்மையால் நொண்டியடிக்கிறது.
மு.வேடியப்பனின் டிஸ்கவரி சினிமாஸ் தயாரித்து இருக்கும் முதல் திரைப்படம். சகஜமான சினிமாவாக இல்லாமல் மாற்று சினிமாவாக எடுக்க முன்வந்ததற்கு பாராட்டுகள். ஆனால் கமர்ஷியலாகவும் ஒரு எதார்த்த படத்தை அடுத்த தயாரிப்பில் கொடுக்க இந்த முயற்சி அவருக்கு துணை செய்யட்டும்.
கதை திரைக்கதை வசனம் இயக்கம் பாஸ்கர் சக்தி. ஏற்கனவே எழுத்தாளராக நன்கு அறியப்பட்டவர். மெட்டிஒலி மெகா சீரியல், எம்டன் மகன், அழகர் சாமியின் குதிரை, நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்றவர்.
ஒரு சிறுகதையாக அல்லது நாவலாக இதை வாசித்திருந்தால் ஒருவேளை மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி இருக்கலாம். சினிமா என்ற ஒன்றை இந்த படைப்பு உள் வாங்கவில்லையோ என்ற எண்ணம் பார்வையாளனுக்கு வருவதை தவிற்பதற்கில்லை.
வசனம் ஒரு சில இடஙக்ளில் நிமிர வைக்கிறது. கதாநாயகி திருப்புளியிடம் பேசும் ஒருகாட்சி. உங்க அண்ணன் எப்படிடா…என்றதற்கு அவர் நலலவர் தான் என அவன் பதில் சொல்ல, அப்போ வரதன் என கேட்டதும், அவரும் நல்லவர்தான் என சொல்லி விட்டு ரெண்டு பெரும் சேர்ந்தா அப்புறம் எதுவும் சொல்ல முடியாது.. என் வரும் காட்சியில் பாஸ்கர் சக்தி கவனம் பெறுகிறார்.
மனித நேயத்துடன் ஒரு வடமாநிலத்தவனின் உடலை தமிழக கிராமியத்தின் பின்னணியில் அடக்கம் செய்யும் அன்பின் உயர்நிலையை காட்சி சித்தரிப்பில் கொண்டு வந்திருப்பத்தில் ஒரு இயக்குனராக எழுந்து நிற்கிறார் பாஸ்கர் சக்தி.
என்ன சொல்ல வருகிறது இந்த படம்.
வட மாநிலத்தவர்களின் வருகையால் பாதிக்கப்பட்ட தமிழனின் வாழ்வாதரங்களை பேசுகிறதா ? இல்லை அவர்களின் அன்றாட வாழ்வியலில் இருக்கும் பிரசனைகளை சொல்கிறதா? புலம் பெயரும் ஒவ்வொருவரின் தேவைகள் என்ன. அதற்காக அவர்களை தர வைக்கும் விலை என்ன… போன்ற சமூக அக்கறையை அலசுகிறதா என்றால் அப்படி எதையும் இந்த படம் செய்யவில்லை.
கொஞ்சம் அந்நியப்பட்டு நின்றாலும் அக்கறையுடன் நம்மை பயணிக்க அழைக்கிறது இந்த ரயில்.
RJ நாகா
add a comment