209
சைத்ரா: திரை விமர்சனம்
மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ” சைத்ரா”
காதல் படங்களுக்கும், ஆக்சன் படங்களுக்கும் கிடைக்கும் வரவேற்பை போலவே ஹாரர் திரைப் படங்களுக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவே செய்கிறது. இந்த நம்பிக்கை தான் பல இயக்குனர்களை இதுகுறித்து சிந்திக்கவும் வைக்கிறது.
புதுமுக இயக்குனர் M. ஜெனித்குமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் சைத்ரா ஒரு ஹாரர் மூவி.
உண்மையில் பேய்கள் இருக்கிறதா? .. திகில் நிறைந்த இரவுகளை கடந்து செல்வது எப்படி? போன்ற யுக்திகளை பின்னனியில் வைத்து கதை சொல்பவர்கள் மத்தியில் வேறு ஒரு கோணத்தில் பயணிக்கிறது இந்த படம்.
சைத்ராவும் கதிரும் இளம் தம்பதிகள். தன் மனைவி சைத்ரா மனநல கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதாக நினத்து மருத்துவம் செய்து வருகிறார் கதிர். ஒரு கட்டத்தில் அது மனநல கோளாறு கிடையாது பேய் சேட்டைகளின் வெளிப்பாடே என உணர்ந்து நண்பன் மூலம் ஆனைமலை சாமியார் என்ற ஒருவரை தேடி போகிறார். அந்த சாமியார் வந்தாரா, சைத்ரா குணமடைந்தாரா போன்ற கேள்விகளுக்கு திகிலுடன் பதில் சொல்லி இருக்கிறது இந்த திரைப்படம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு யாஷிகா ஆனந்த் திரையில் சைத்ராவாக வலம் வருகிறார். பல நேரங்களில் இவர் தான் உண்மையில் பேயோ என திகிலூட்டுகிறார்.
அவரது கணவர் கதிராக அவிதேஜ் நடித்திருக்கிறார். ஒரு சில இடங்களில் அவரது நடிப்பு நம்மை சபாஷ் போட வைக்கிறது.
இன்ஸ்பெக்டராக கண்ணன் வட்டார வழக்கில் பேசியபடி வருவது அருமை. அவரது தங்கையாக வரும் சக்தி மகேந்திரா பார்க்க அழகா இருக்கிறார். இயல்பான நடிப்பில் ஸ்கோர் செய்தும் விடுகிறார். மொசக்குட்டி ஜெய்பீம் படத்திற்கு பிறகு இந்த படத்தில் ஆனைமலை சாமியாரின் சிஷ்யப் பிள்ளையாக வரும் அவரது உடல்மொழியும் டயலாக் டெலிவரியும் ரசிக்க வைக்கிறது.
உபரி கதாபாத்திரங்கள் பெரிதாக கவரவில்லை.
இந்த படத்திற்கு சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இரவு காட்சிகளால் மிக நேர்த்தியாக காட்சிகளை பதிவு செய்திருக்கும் அவரது காமிரா பகல் நேர காட்சிகளில் கோட்டை விட்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் மெனக்கெடல் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
எலிஷாவின் படத்தொகுப்பு பரவாயில்லை ரகம்.
இரண்டு பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் பிரபாகரன் மெய்யப்பன்.
நல்ல வித்தியாசமான பேய் கதையுடன் அறிமுகம் ஆகியிருக்கும் M ஜெனித்குமார் கவனிக்க வைக்கிறார். கடைசி பதினைந்து நிமிடம் பேய்நிமிடம் என்றே சொல்லலாம். திக் திக் பயத்துடன் உறைய வைத்து விடுகிறார்.
ஒரே நாளில் நிகழும் சம்பவம் என்பதால் கதையில் சில பலவீனங்கள் இயல்பாகவே வந்துவிட்டிருக்கிறது. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். கிராஃபிக்ஸ் காட்சிகள் பெரிதாக படத்திற்கு பலம் சேர்க்கவில்லை. முதல் பாதியில் எடிட்டர் கொஞ்சம் கத்தரி வைத்திருக்கலாம்.
இப்படி சில குறைகளை நாம் பட்டியவிட்டாலும் பேய் படத்திற்கு ஒரு புது டிரெண்டை உருவாக்கி இருக்கும் இந்த படம் ஒரு முறை பார்க்க கூடிய தகுதியை பெற்றிருக்கிறது.
பய ரேகையுடன் களமிறங்கி இருக்கும் இந்த புதியவர்களின் ஆயுள் ரேகையை நீட்டித்து இருக்கிறது இந்த “சைத்ரா”
add a comment