கட்டுரை

மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் – 2

126views
இன்று சிக்கன்-65 ஒரு சர்வதேச உணவாக இருக்கிறது. இந்த பெயர் தெரியாத தமிழர்களே இருக்க இயலாது. ஆனால், இது சென்னையில் உள்ள புஹாரி உணவகம் 1965 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய உணவு என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

இந்த உணவகத்தை 1951 ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் துவங்கியவர்   திரு. ஏ.எம். புஹாரி. ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய பைன் டைனிங் (Fine Dining)  முறையில் தென்னிந்திய உணவுகளை பரிமாறிய முதல் உணவகம்   என்று கூட இதனை சொல்லலாம். திரு. புஹாரி 1973-74 இல் சென்னை நகர ஷெரிப் ஆக இருந்தவர். இளம் வயதிலேயே இலங்கை சென்று, அங்கே கல்வி கற்று,  வணிகத்தில் சம்பாதித்து  திரும்பியவர்.

கொழும்பு நகரில் அவர் நடத்திய கடை பெயர் Hotel De Bhuhari.   அவரது சொந்த ஊர் பெயர் கேம்பலாபாத். கேம்பலாபாத் ஊராட்சி தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரி வட்டத்தில் அமைந்துள்ளது.
புஹாரி ஹோட்டல் மட்டுமல்ல ஹோட்டல் புளு டைமெண்ட் உரியமையாளர்களுக்கும் சொந்த ஊர் இதே கேம்பலாபாத் தான். சிக்கன்-65 போலவே மற்றொரு பெயர் பெற்ற உணவு கேம்பலாபாத் தக்கிடி. இஸ்லாமிய திருமண வீடுகளில் திருமணத்திற்கு அடுத்த நாள்  பரிமாறப்படும் உணவு இது.
இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட கேம்பலாபாத் உருவான கதை சுவையானது. சிவராமன் குளம், கங்கநாதபுரம் ஆகிய இடங்ககளில் வசித்த இஸ்லாமியர்கள் 1937 ஆம் ஆண்டு தங்களுக்கு ஒரு நல்ல வாழ்விடம் வேண்டி கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களை அணுகினார்கள். அவர் இந்த முறையீட்டை Sir Archibald Young Gipps Campbell என்கிற ஆங்கிலேயரிடம் எடுத்துச் சென்றார். AYG கேம்பெல் சென்னையின் தலைமை செயலராக பணியாற்றியவர். வருவாய் வாரியத்தின் உறுப்பினர். அவர் உடனடியாக இந்த புதிய குடியிருப்பு உருவாக 80 ஏக்கர் நிலங்களை ஒதுக்க ஏற்பாடு செய்தார். இந்த நகரம் உருவாகும் போது இதற்கு கேம்பெல் அவர்கள் பெயரினை இட வேண்டும் என்பது கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் ஆலோசனையாக இருந்தது.
அந்த ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டு இந்த புதிய குடியேற்ற நகரம் ” கேம்பலாபாத்” என்று பெயர் சூட்டப்பட்டது. பெர்சிய சொல்லான “அபாத்”  என்பதற்கு குடியிருப்பு என்று பொருள். அஹமதாபாத், வாலாஜாபாத், ஹைதராபாத் என்பவையும் இந்த பெர்சிய சொல்லின் அடிப்படையில் பெயரிடப்பட்ட நகரங்கள் தான்.

சிவராமன் குளம், கங்கநாதபுரம் இஸ்லாமியர்களுக்கு தனி குடியிருப்பு நகரம் என்கிற ஆவல் எப்படி தோன்றியது என்பதை அறிய கொஞ்சம் பின்னோக்கி பயணிக்க வேண்டியுள்ளது,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மற்றொரு ஊர் பேட்மாநகரம்  . கீழடிக்கு முந்தையதாக கருதப்படும் சிவகளை அகழாய்வு நடை பெரும் இடத்தில உள்ள ஊர். இந்த ஊர் தான் கேம்பலாபாத் உருவாகும் உந்து சக்தியை கொடுத்தது.
1914 ஆம் ஆண்டு இரண்டு வாரங்கள்  நிற்காமல் பெய்தது கன மழை. தாமிரபரணி கரைகளை தாண்டி வெள்ளம் புரண்டது.  இந்த வெள்ளத்தில் சிக்கி தவித்தனர் தோப்பூர் எனும் கிராம மக்கள். உயர்ந்த கட்டிடங்களிலும், மசூதியின் கோபுரங்களிலும் தங்கி உயிர் தப்பினர். இங்கு வசித்த, நெசவு தொழில் செய்யும்,  100 இஸ்லாமிய குடும்பங்களுக்கு ஒவ்வொரு பருவ மழை காலத்திலும் இந்த வாழ்வா, சாவா போராட்டம் நிகழ்ந்து வந்தது. இந்த இழப்புகளுக்கும், துயரங்களுக்கும் முடிவு கட்ட அவர்கள்   தூத்துக்குடி சப் கலெக்டராக இருந்த பேட் (H.R.Pate) என்பவரை அணுகினர். அந்த கிராமத்திற்கு வந்து, சேதங்களை பார்த்தவர் அரசுக்கு இவர்களுக்கு பாதுகாப்பான வாழ்விடம் கோரி பரிந்துரை செய்தார். அவரது முயற்சியில் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் 150 ஏக்கர் நிலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அங்கு நேர்த்தியான ஒரு புது நகரம் உருவானது.  தங்களுக்கு ஒரு பாதுகாப்பான குடியிருப்புக்கு ஏற்பாடு செய்த திரு.பேட் அவர்களுக்கு நன்றிக்கடனாக தாங்கள் உருவாக்கிய மாநகரத்திற்கு  ” பேட்மாநகரம்” என்று பெயரிட்டனர்.

1879 ஆம் ஆண்டின் திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவின் மேம்பட்ட பதிப்பை 1916 இல் வெளியிட்டது திரு. பேட் அவர்களின் பேசப்படும் சாதனை.
  “திருநெல்வேலியைப்பற்றி அறிவதற்கான முதல் வரலாற்று நூலாக இருப்பது பிஷப் கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம். 1916ல் சென்னை ஆளுனரின் ஆணைக்கேற்ப  ஹெச்.ஆர்.பேட் தொகுத்தெழுதிய திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு அதன் பின் வந்த நேர்த்தியான மொழியில் எழுதப்பட்ட தகவல் களஞ்சியம்.” எனக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
ஜெபா
 

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!