128views
முனைவர் என்.பத்ரி
சமீப காலமாக சென்னை மட்டுமல்லாமல் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தெருக்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் பொது மக்களை அடிக்கடி கடிப்பதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக தெருக்களில் வலம் வரும் நாய்கள் நடப்பவர்களுக்கும், இருசக்கர வாகனங்களில் செல்வோர்களுக்கும் அதிக தொல்லைகளைத் தருகின்றன.
கடந்த ஆண்டு 4.8 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளளனர். மேலும், கடந்த ஆண்டு 43 பேர் மட்டுமே நாய்க்கடியால் உயிரிழந்துள்ள நிலையில் இந்த ஆண்டு இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், நகரப்புற மருத்துவமனைகளில் நாய்க்கடி சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை, சேலம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் நாய்க்கடியின் பாதிப்புகள் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த 2026-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே இதுவரை 2.63 லட்சம் நாய்க்கடி சம்பவங்களும் 17 ரேபிஸ் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.மாநிலத்தில்,தற்போது தெருநாய்களின் எண்ணிக்கை சுமார் 15 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக,மாநில அரசு விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ABC) மற்றும் தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. நாய்க்கடிப்புக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளாக நாய் கடித்த இடத்தை காயத்தை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு 15 நிமிடம் நன்கு கழுவுதல், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி (Anti-Rabies Vaccine) செலுத்திக்கொள்ளுதல் போன்றவைகளை நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். நாய் தனது நகத்தால் கிழித்தாலோ,அல்லது நாய் மூலம் ஏதேனும் சிறிய காயங்கள் ஏற்பட்டாலும் RIG என்று சொல்லக்கூடிய Rabies Immunoglobulin என்ற 3ஆம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது.
மேலும்,தெருநாய்களை பொது மக்கள் எதிர் கொள்ளும்போது கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும். அவைகளைப் பார்த்து ஓடுவதுக்கூடாது. தெருவில் நடக்கும்போது ஒரு குச்சியை வைத்துக் கொண்டு நடக்கலாம்.முதியோர்களும்,குழந்தைகளும் தகுந்த துணையுடன் தெருக்களில் நடப்பது ஒரு பாதுகாப்பான அணுகுமுறையாகும். நாய்க்கடிக்கு ஆளானவர்களில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நான்கு டோஸ் ARV தடுப்பூசி அட்டவணைப்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். சிலர் செல்லப்பிராணிகள் அல்லது பழக்கமான நாய்கள் கடித்தால் பாதிப்பில்லை என்று கருதி, தடுப்பூசி போடுவதைத் தவிர்த்தால் அது ஆபத்தில் சென்று முடிந்து விடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கடித்தது செல்லப்பிராணியா அல்லது தெரு நாய்களா என்பதைப் பொருட்படுத்தாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் எந்தப் பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறதோ நகராட்சி நிர்வாகத்துறை ஊழியர்கள் அதனை பிடித்து கருத்தடை செய்து வருகின்றனர். நாய்க்கடியால் மருத்துவமனைக்கு வந்தால் உரிய நேரத்தில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ரேபிஸ் நோயால் பாதிப்படைந்தவர்கள் மருத்துவமனையில் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் அரசு சுகாதாரத்துறை கூறுகிறது.
தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வெறிநாய்க்கடி நோய் பரவாமல் தடுக்கவும் உள்ளாட்சி அமைப்புகள் மேலும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும்,இதுவரை இல்லாத அளவு நாய்க்கடி இறப்புகள் ஏற்படுவதால் இப்பிரச்சனைப் பற்றிய உடனடி ஆய்வுகளும், அதன் முடிவுகளும் இதற்கானத் தீர்வுகளை பரிந்துரைக்கலாம். எனவே,அரசும்,தனியார் நிறுவனங்களும் இதற்கான முன்னெடுப்பில் தீவிரம் காட்டலாம். இதுவே, தற்போது பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
add a comment






