கட்டுரை

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் இரயில் இயக்கம்! நிஜமாகும் நெடுநாள் கனவு!!

91views
முனைவர் என்.பத்ரி
சென்னை மக்கள் தற்போது தாம்பரம்-கடற்கரை இடையிலான இருப்புப் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக போதிய மின்சார ரயில் போக்குவரத்து இல்லாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் மார்ச் மாதத்தில் சென்னை பயணிகளுக்கு 2 நல்ல செய்திகள் காத்திருக்கின்றன.

ஒன்று போரூர், பூந்தமல்லி பகுதி மக்களுக்கும், இன்னொன்று மயிலாப்பூர் முதல் மடிப்பாக்கம் வரை தென் சென்னை பகுதிகளில் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

சென்னையில் பேருந்துப்பயணத்தை விட பயணிகள் ரயில் போக்குவரத்து வசதிகளைத்தான் மிகவும் அதிகமாக விரும்புகிறார்கள். சென்னையில் மக்கள் அடர்த்தி வெறும் 25 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே மிக அதிகமாக உள்ளதால்,. இந்நகரில் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. மக்கள் எந்த வாகனத்தில்பயணித்தாலும் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. அடுத்த 20 வருடங்களில் இப்போது உள்ள நிலையை விட சென்னை நகரின் போக்குவரத்து நிலைமை மிக மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை சமாளிக்க சென்னையில் மெட்ரோவின் இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் பூந்தமல்லி முதல் கலக்கரை விளக்கம் வரை உள்ள வழித்தடத்தில், பூந்தமல்லி முதல் வடபழனி வரை பணிகள் முடிந்துள்ளன. குறிப்பாக பூந்தமல்லி முதல் போரூர் வரை முழுமையாக பணிகள் முடிந்துவிட்டன.

அனால்,, ஆலப்பாக்கம், சாலிகிராமம் ரயில் நிலையங்களில் பணிகள் இன்னும் முடியவில்லை. இதனால் பூந்தமல்லி முதல் வடபழனி வரை மெட்ரோ ரயிலை இயக்கினாலும், ஆலப்பாக்கம், சாலிகிராமம் ரயில் நிலையத்தில் மட்டும் ரயில்கள் நிற்காமல் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் ரயிலை இயக்க அனுமதி கிடைப்பதில் தாமதம் நிலவி வந்தது. இந்நிலையில் மத்திய ரயில்வே வாரியம் விரைவில் இந்த வழித்தடத்தில் ரயில்களை விரைவில் இயக்க அனுமதிக்கும் எனத் தெரிகிறது.அனேகமாக சென்னை வரும் பிரதமர் மோடி, பூந்தமல்லி வடபழனி வரை வழித்தடத்தை மார்ச் மாதத்தில் திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்து, வேளச்சேரி-பரங்கிமலை பகுதிகளுக்கு இடையிலான பறக்கும் ரயில் திட்டம் 2009ம் ஆண்டில் தொடங்கி 2026 வரை சுமார் 17 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இத்தடத்தில் அண்மையில் ரயில் சோதனை ஓட்டமும் நடந்து முடிந்து விட்டது. எனவே, இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின்சார ரயில்களை உரிய முறையில் இயக்க முடியாத நிலையில் ரயில்வே இருக்கிறது. இதனால் கோடிக்கணக்கான பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். சென்னை ரயில்வே கோட்டத்தின் தவறான திட்டமிடுதல்தான் இதற்கு காரணம் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில்தான் பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில் 2026, மார்ச் 10ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் தாம்பரம், பரங்கிமலை, வேளச்சேரி இணைப்பு முதல் கடற்கரைக்கு திருப்பிவிட்டு மின்சார ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்தால் சிறப்பாக இருக்கும். அப்படி ரயில்களை இயக்கினால், மெயின் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை ஏற்படும் சிக்கலை ஓரளவு சமாளித்துவிட முடியும். எனவே மின்சார ரயில்களை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வழியாக கடற்கரைக்கு பல்வேறு ரயில்கள் மாற்றிவிடலாம். அப்படி நடந்தால் அது பயணிகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!