கட்டுரை

மக்கள் வரவேற்பை பெறும் நாய்கள் தடை ஆணை!

177views
முனைவர் என்.பத்ரி

நாய்களின் எண்ணிக்கைக்கான கணக்கெடுப்பு சென்னையில் 2018-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அப்போது 1 லட்சத்து 30 ஆயிரம் நாய்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் நாய்களுக்கு கருத்தடை தடுப்பூசி போடப்படாத நிலையில், இப்போது இவற்றின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்திருக்கிறது. தமிழகம் முழுவதுமே வீட்டு நாய்கள் மட்டுமல்ல, தெருநாய்கள் தரும் தொல்லைகளும் அதிகரித்து வருகின்றன.

எப்போதும் தெருவுக்கு பத்து நாய்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவை யாரை எப்போது கடிக்கும் என்பது தெரிவதில்லை. எனவே, இவற்றைக் கடக்கும் மக்கள் பயத்துடனேயே நடமாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்படிப்பட்டசிக்கலிலிருந்து தப்பிக்க புத்திசாலித்தனமாக கையில் பிஸ்கெட் பாக்கெட்டுடன்தான் பலரும் போகின்றனர்.இவற்றுடன் ஆங்காங்கே சுற்றித் திரியும் கால்நடைகள் வேறு நம்மை பயமுறுத்துகின்றன.

சமீபத்தில் சென்னையில் தெருநாய்கள் மற்றும் வெறிநாய்கடித்ததின் காரணமாக சென்னை கொடுங்கையூர், ஜாபர்கான் பேட்,ராயப்பேட்டை, நெற்குன்றம் ஆகிய பகுதிகளில் மக்கள் இறந்துள்ளனர். பிட்புல் போன்ற இனநாய்களும் வெறிநாய்களும் பொது மக்களை கடிக்கும் சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன.

எனவே, சென்னை மாநகராட்சி பிட்புல், ராட்வீலர் போன்ற சில இன நாய்களை வாங்குவதற்கு தடை விதித்தல்,வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வாங்குவதை கட்டாயப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்க்கக் கூடாது.மீறினால் 1 லட்சம் அபராதம் என்றும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட நாய்கள் தொடர்பாக பட்டியலையும் வெளியிட்டுள்ளது. மேலும் நாய்களை வளர்ப்பவர்கள் அதன் உரிமையாளர்கள் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என்ற விதிகளும் விதிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்த பதிவும் நிறைவடைந்து விட்டது.

சென்னையை பொறுத்தவரை நாய்களை நடைபயிற்சி அழைத்துச் செல்லும் போது அதற்கு முகக்கவசம் அணிந்து செல்வது கட்டாயம் என்னும் விதி இன்றும் மீறப்பட்டுதான் வருகின்றது. மாநகராட்சியில், பிட்புல் மற்றும் ராட்வீலர் போன்ற தடை செய்யப்பட்ட நாய் இனங்களை இனி புதிதாக எவரும் வாங்கவோ,வளர்க்கவோ முடியாது. இந்த நாய்கள் கடித்து பாதிப்போர் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், அரசு எடுத்துள்ள இந்த முக்கிய முடிவு பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 22.12.2025முதல் இந்த ரக நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிகிறது. ஏற்கனவே இந்த நாய்களை வைத்திருப்பவர்கள் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இனிமேல் நாய்களை பொது இடங்களில் திரிய விட்டால்,உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில்,சென்னை மாநகராட்சி செல்லப் பிராணிகளின்உரிமையாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை யும் அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. இவற்றை மீறும் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி தெரிவிவித்துள்ளது.விதிகளை கடைப்பிடிக்காத நாய்களின் உரிமையாளர்கள் பற்றி புகார் அளிக்க 1913 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.

நம்மை நாய் கடித்தால்,காயம்பட்ட பகுதியை சோப்பு மற்றும் தண்ணீரால் நன்கு கழுவ வேண்டும். உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

ரேபிஸ் கிருமி ஒருவரை தாக்கி, அதன் அறிகுறி தென்பட தொடங்கிவிட்டால்,உலகில் எந்த சிறந்த மருத்துவராலும் அவரை காப்பாற்ற முடியாது. நாய்க்கடி விஷயத்தில் அலட்சியம் காட்டும் ஒவ்வொரு நிமிடமும் நமது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, பொதுமக்களில் சிலருக்கு நாய்க்கடியின் ஆபத்து பற்றி தெரிவதில்லை. நாய் கடித்துவிட்டால் ஏதோ பூரான் கடித்துவிட்டதை போல சுண்ணாம்பு வைத்துவிட்டு செல்பவர்கள் இன்னும் கிராமங்களில் உள்ளனர்.இதனால் பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.

நாய் கடித்துவிட்டால் உடனே குழாய் தண்ணீரை மிக வேகமாக திறந்து விட்டு, அதில் காயத்தை கழுவ வேண்டும். முதலில் ஒரு நிமிடத்திற்கு குழாய் தண்ணீரில் காயத்தை காட்டிவிட்டு, பிறகு சோப்பு போட்டு அந்த இடத்தை நன்றாக அழுத்தி கழுவ வேண்டும். நாய் கடித்ததால், அதன் உமிழ் நீரில் இருக்கும் ரேபிஸ் வைரஸ், அந்தக் காயத்தில் சோப்புபட்டதும் இறந்து விடும்.

இப்படி கழுவிய பிறகு, சிறிதும் தாமதிக்காமல் அரசு மருத்துவமனைக்கு சென்று ARV எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவாக முடியுமோ,அவ்வளவு விரைவாக ஊசி போட்டு கொள்வது நல்லது. வீட்டு நாய் கடித்தாலும், இந்த ரேபிஸ் ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும்.

நாய் கடித்த அன்றைய தினத்தில் இருந்து 5 தவணைகளாக மருத்துவரின் அறிவுரைப்படி, முறையான கால இடைவெளிகளில் இந்த ரேபிஸ் ஊசியை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். காயம் அதிகமாக இருந்தால் மருத்துவரின் அறிவுரைப்படி 90-வது நாளும் ஆறாவது தவணையாக ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும். கடிபட்ட இடத்தை துணியை வைத்து மூடக்கூடாது. ஐந்து தவணை ஊசி முடியும் வரை மருத்துவர்கள் அறிவுரைப்படி உணவு பத்தியம் இருக்க வேண்டும். முக்கியமாக, கடித்த நாயை அடித்துக் கொல்வதோ, அதை விரட்டுவதோ கூடாது. அடுத்த 15 நாட்களுக்கு, அந்த நாயை கண்காணிக்க வேண்டும். ரேபிஸ் பாதித்த நாய் ஒருவரைக் கடித்தால், அந்த நாய் ரேபிஸ் வைரஸ் தாக்கி 15 நாட்களில் இறந்து விடும். அதிலிருந்து அந்த நாய் ரேபிஸ்நாய்தான் என்பதை நாம் உறுதி செய்து கொள்ளலாம். ஆனால், முதலில் ஊசி போட்டுக் கொண்ட பிறகுதான், இந்த ஆராய்ச்சியையெல்லாம் செய்ய வேண்டும்.

அண்மையில் தெருநாய்களின் பெருக்கம் குறித்து கருத்து தெரிவித்திருந்தஉச்ச நீதிமன்றம்,தெரு நாய்கள் சமூகத்தின் அச்சுறுத்தலாக மாறிவிட அனுமதிக்கக்கூடாது. அத்தகைய நேரங்களைக் கையாள்வதில் சமநிலை தேவைஎன்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கேரள அரசும் உச்ச நீதிமன்றத்தில்,’மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தெரு நாய்களை கொல்ல அனுமதிக்க வேண்டும்’ என்று கூறி மனுத்தாக்கல் செய்திருக்கிறது.சென்னை மாநகராட்சியில் அதிகபட்சமாக வரும் புகார்களின் எண்ணிக்கையில்,தெருநாய்த் தொல்லைகள் குறித்த புகார்கள் மூன்றாவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. வீட்டு நாய்களின் தாக்குதலிலிருந்துமக்களைக் காப்பாற்ற, வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள தமிழக அரசு எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் தெருநாய்கள் சார்ந்தும் முறையான அரசாணைகளை வெளியிட்டால் நல்லது. இதுவே பொதுமக்கள் அனைவரின் உடனடி எதிர்பார்ப்பும் ஆகும்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!