15
எம்.ஜி.ஆரால் ‘ஆண்டவனே’ என்று அழைக்கப்பட்ட பழம்பெரும் நடிகை யார் என்று தெரியுமா? அந்த நடிகை கையால் தயாரிக்கப்பட்ட நெய்யில் வறுத்த உப்புக்கண்டம் வாங்கிச் சாப்பிட்ட தியாகராஜ பாகவதர் அவர்கள் மரணப் படுக்கையில்கூட ஆசைப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘தில்லானா மோகனாம் பாள்’ படத்தில் சிவாஜி கணேசன் பயன்படுத்திய 5 கிலோ எடையுள்ள வெள்ளி வெற்றிலைப் பெட்டி யாருக்குச் சொந்தமானது தெரியுமா? பழம்பெரும் நகைச்சுவை நடிகை சி.டி. ராஜகாந்தம்தான் இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர்.
டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த நகைச்சுவைத் திரைப்படமான ‘சபாபதி’ (1941) படத்தில் காளி என். ரத்தினத்தின் ஜோடியாக வேலைக்காரியாக நடித்ததன் மூலம் திரைப்பட ரசிகர்களின் நினைவில் நிரந்தரமாகத் தங்கிவிட்டவர் இவர்.
கோயம்புத்தூர் வானொலி நிலைய நிகழ்ச்சி அமைப்பாளர் ஸ்டாலினுக்கு 1997-ல் அவர் அளித்த பேட்டியின் எழுத்துவடிவமாக இப்புத்தகம் வெளியாகி யிருக்கிறது. வெறும் 55 பக்கங்களே கொண்ட இப்புத்தகத்தில், அறியப்படாத பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது அந்தக் கால நாடக சபாக்களிலும், திரைப்பட ஸ்டுடியோக்களிலும் இருந்த திண்ணைத் தூண்களை ஓடிப்பிடித்து விளையாடும் உணர்வு ஏற்படும்.
கோவையில் பிறந்த ராஜகாந்தம், அந்தக் காலத்திலேயே 8-ம் வகுப்பு வரை படித்தவர். பள்ளி மாணவியாக இருந்தபோதே அவருக்குத் திருமணமாகி விட்டது. 3 மாத சிசுவை வயிற்றில் சுமந்தபோது, அவரது கணவர் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அவரையும், அவரது குழந்தையையும் காப்பாற்றியது இசைதான். பள்ளியில் கற்றுக்கொண்ட இசைப் பாடலைப் பக்கத்து வீட்டுக்காரரின் ஆர்மோனியப் பெட்டியை வைத்து நாடக சபா தொடர்புள்ள ஒருவரிடம் பாடிக்காட்டினார் ராஜகாந்தம். அதைத் தொடர்ந்து கள்ளிக்கோட்டையில் உள்ள எஸ்.ஆர். ஜானகியம்மா நாடக சபாவில் இடம் கிடைத்தது. வாரம் 3 நாடகங்களில் பாடி நடிக்கும் அளவுக்கு வளர்ந்தார். அப்போது ஒவ்வொரு நாடகத்துக்கும் அவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு ரூபாய்தான்.
அதே ராஜகாந்தம் பின்னாளில் ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார். அந்தச் சமயம் எம்.ஜி.ஆரும், அவரது சகோதரர் எம்.ஜி. சக்ரபாணியும் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் மாதச் சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் இருவரையும் குதிரை வண்டியில் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று வந்து காலை முதல் இரவு வரை உணவளித்து உபசரித்தவர் ராஜகாந்தம். இந்தத் தகவலை ஆனந்த விகடனில் எழுதிய ‘நான் ஏன் பிறந்தேன்?’ கட்டுரையில் பதிவுசெய்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
தெரு முழுக்கப் பந்தல் போட்டு தனது மகள் ராஜலட்சுமிக்கு பாடகர் திருச்சி லோகநாதனைத் திருமணம் செய்து வைத்தது, ஏழிசை மன்னர் தியாக ராஜ பாகவதர் உள்ளிட்ட இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளுடன் தடபுடல் விருந்துடன் அந்தத் திருமணம் 5 நாட்கள் நடந்தது, அதில் கே.பி. சுந்தராம்பாள், எம்.எல். வசந்தகுமாரி, தண்ட பாணி தேசிகர், என்.எஸ்.கிருஷ்ணன் என புகழின் உச்சத்திலிருந்த திரைக் கலைஞர்களெல்லாம் பங்கேற்றது என்று பல தகவல்களை இப்பேட்டியில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் ராஜகாந்தம்.
add a comment