32
( பகுதி 1 )
நெல்லை கவி க.மோகனசுந்தரம்
சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றுவதில் தமிழ்ச் சமுதாயதிற்கு ஈடு இணை இல்லை. தாய் மாமன், அப்பா கூட பிறந்த அத்தை, மைத்துனன், சித்தப்பா மக்கள், பெரியப்பா மக்கள் என்று ஒரு கூட்டமே அதை கட்டிக் காத்தது.
முறை வாசல், கட்டு, வழிமுறைகள் என்றெல்லாம் இருந்தது. சமீபத்திய காலத்தில் அவைகள் குறைந்து கொண்டே வருகிறது என்ற ஐயம் வருகிறது. ஏனெனில் பத்திரிகை கூட நேரில் சென்று கொடுக்கும் பழக்கம் குறைகிறது.அலைபேசியில் புலனம் மூலம் அனுப்புகிறார்கள். பெரும்பாலான வீடுகளில் ஒரு குழந்தையே என்பதால் மாமா,அத்தை சித்தப்பா, பெரியப்பா, உறவுகளும் காணாமல் போகிறது.
முன்பு விசேஷ வீடுகளில் நம்மை வரவேற்பதற்கு வாசலில் முக்கிய நபர் காத்திருப்பார். இப்பொழுது ஒரு குபேர பொம்மை தான் நம்மை வரவேற்கிறது. வா என்று சொல்லவும் ஆளில்லை போவென்று சொல்லவும் ஆளில்லை. முன்பு எல்லாம் திருமணத்திற்கு சென்றால் முதலில் மணமக்களை ஆசீர்வதித்து விட்டுத்தான் – கட்டாயப்படுத்தி அழைத்தால் மட்டுமே விருந்து உண்ணப் போவோம். இப்பொழுது முதலில் விருந்தை சுவைத்து விட்டு தான் மணமக்களையே தேடுகிறோம். எல்லா இடங்களிலும் நீண்ட வரிசை. அதிலும் சமீபத்தில் மொய்ப்பணத்தை வாங்குவதற்கு கூட பணியாட்கள்.
உறவுகளை வரவேற்க ஆள் இல்லை… மொய்ப் பணம் வாங்க மட்டும் தனித்தனி கவுண்டர்கள். முன்பு திருமண வீட்டார் திருமணத்துக்கு வந்திருந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக வரவேற்பர். ஒவ்வொருத்தரையும் நினைவு கொள்வர். இப்போது யார் வந்திருக்கிறார் யார் வரவில்லை என்பதைக் கூட நினைவில் கொள்வதில்லை.
முன்பு அன்பால் அரங்கம் நிறைந்திருக்கும். இப்போதோ ஆடம்பரத்தால் நிறைந்திருக்கிறது. அது ஒரு நிகழ்ச்சி போல தெரியவில்லை. ஒரு கணினியால் தொகுக்கப்பட்ட ஒரு ப்ரோக்ராம் போல இருக்கிறது. முன்பு எல்லாம் ஒரு திருமண வீட்டில் இன்னொரு திருமணம் நிச்சயமாகும் வாய்ப்பு நிறைய இருந்தது.
இப்பொழுது யார் யார் என்று யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை. வந்தவர்களும் திருமணத்தை கவனிப்பதில்லை. சுற்றி இருக்கும் அலங்காரத்தையும் ஆடம்பர மக்களையும் ரசிக்கிறார்கள். இப்படி மாறிப் போனது மிகவும் வருத்தம் தான். ஆடம்பரங்களை தவிர்த்து அவசியமானதை அன்போடு, நடைமுறை சம்பிரதாயத்தோடு செயல்படுத்தினால் பழமை தங்கும். நம் வாரிசுகளுக்கும் நமது பாரம்பரிய பெருமை புரியும்.
( தொடர்ந்து பயணிப்போம் )
add a comment