கட்டுரை

தந்தை பெரியாரின் பார்வையில் லஞ்சம்

39views
அதிரை எஸ்.ஷர்புத்தீன்
சிறப்பாசிரியர்- ‘நான்’ மின்னிதழ்
லஞ்ச ஒழிப்பு அதிகாரியே லஞ்சம் வாங்கும் செய்திகள் இன்று நம் நாட்டில் பத்திரிக்கைகளில் அடிக்கடி வெளியாவது நமக்கு சர்வசாதாரணமாகிவிட்டதுதான்!.
சமீபத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கூறினார்: ‘’தமிழ்நாட்டில் சமூக மாற்றம் உருவாக வேண்டுமென்றால் பொதுமக்கள் ஓட்டுக்குக்காசு வாங்கக்கூடாது’’ என்று.
அன்றே தந்தை பெரியார் அவர்கள், ‘’வாக்காளர்கள் பணம் பெற்றுக்கொண்டு ஓட்டளிப்பதனால்தான் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள். ’’
‘’ வருவாய் போதாமல் இருப்பதற்கும், கடன்காரர்களாய் இருப்பதற்கும் காரணம், நமது பலவீனத்தின் பயனான பேராசையும் அவசரமுமே ஆகும். ’’ என்று கூறினார்.
ஒருவருக்கு பொருளாதாரத்தேவை அதிகரிக்கும்போது அதேசமயம் திறமை இல்லாமல் அவர் இருப்பாரேயானால் தன் ஆசையினால் ஏற்படக்கூடிய அவசரம்தான் அவரின் ஏழ்மைக்குக் காரணம் என்று சிறப்பாகக்கூறியுள்ளார் தந்தை பெரியார் அவர்கள்.

வருவாயைப்பெருக்க முயற்சி, சிந்தனை மற்றும் புத்திசாலித்தனமான உழைப்பு இல்லாமல் இருப்பதினால்தான் பலர் தங்களுடைய குடும்பத்தேவையில் தன்னிறைவு பெறாமல் போகிறார்கள். பேராசையின் காரணமாக கடன் வாங்கி துன்பத்தில் உழல்கிறார்கள்.
ஒரு அலுவலகத்தில் தனக்குமேல் வேலைபார்த்து தன்னைவிட அதிக சம்பளம் வாங்கக் கூடியவரைப்பார்த்து நாமும் அவரைப்போல் வரவேண்டும் என நினைப்பது தவறு அல்ல. அதுதான் சரியானதுமாகும். முன்னேறவேண்டியது நம் கடமையாகும். ஆனால் அப்படி ஆவதற்கு நம் திறமையை வளர்த்துக்கொள்ளாமல் இருந்தால் எப்படி முன்னேறமுடியும்?  இந்த பலவீனம் பேராசையில் போய் முடிகிறது. துன்பம் உண்டாகிறது அதனால் தன் தகுதிக்கேற்ப லஞ்சம் வாங்க முற்படுகிறான். அதனால்தான் இன்று எந்த அதிகாரி லஞ்சஒழிப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளாரோ அவரே லஞ்சம் வாங்குகிறார்.
மருத்துவர் ராமதாஸ் அவர்கள், முதலில் தன் கட்சியினருக்கு இந்த நற்கொள்கையைக் கடைப்பிடிக்க கட்டாயப்படுத்த மிகவும் முயற்சி செய்வார் என நம்புகிறோம். இப்படி அவர் செய்யும்போது அவர் கூறும் பாமக அரசியல் திட்டமே குடும்பத்தில் ஒருவருக்கு அரசு அல்லது தனியார் வேலை என்பதுதான் என்ற அவர் கனவு விரைவில் நடக்கவும் செய்யும்.
லஞ்சம் என்ற ஊழல் பெருகும்போது இது மக்களிடம் திறமையின்மையை ஏற்படுத்துகின்றது இதனால் சமுதாயத்தில் சீரழிவு ஏற்படுகிறது என்றால் மிகையாகாது.
பொதுமக்கள், பதவியில் இருப்பவர்கள் மற்றும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் மாத்திரமல்ல தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை தங்கள் உயிர்மூச்சாகக்கொண்டுள்ளோம் எனக் கூறும் கட்சியினரும் இன்னும் பிற அரசியல் கட்சியினரும், மற்ற அனைத்து அமைப்புகளும் லஞ்சஒழிப்பை தீவிரமாகப்பின்பற்றினாலொழிய தந்தை பெரியார் அவர்களின் சீரிய எண்ணத்தை நம் தமிழகம் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக்கித்தராது என்பது உண்மைதான்.
அப்படித்தானே!

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!