கட்டுரை

நான் என்னை அறிந்தால்…

36views
கிளியனூர் இஸ்மத்
அமீரக வாழ்க்கை எனக்கு படிப்பியலில் ஆர்வத்தைக் கொடுத்தது. சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், ஜெயகாந்தன், சிவசங்கரி, பாலகுமாரன், அப்துற்றஹீம், எம்.எஸ்.உதயமூர்த்தி, கவிகோ, கவியரசு, மு.மேத்தா இன்னும் பலரின் எழுத்து என்னை எழுத தூண்டுவதற்கு காரணமாகியது.
தத்துவங்களை படிக்கும்போது மனதில் ஒருவித ஈர்ப்பு என்னை ஆட்கொள்ளும்.சிறுவயதில் திருக்குர்ஆனின் தமிழாக்கம் என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. என் செயல்களில் திருப்பத்தைக் கொடுத்தது. பைபிளிலும் பகவத்கீதையும் ஆழமாக சிந்திக்க வைத்தது. அதன் தாக்கங்களே எனக்கு ஆன்மீகத்தை அறிமுகம் செய்தது.
ஆன்மீகம் என்றால் அதில் ஈடுபடுபவர்கள் தாடிவைத்து, காவி உடுத்தி, வணக்கத்திலேயே சதாக் காலமும் வாழவேண்டும் என்றும், குடும்பப்பற்று இன்றி எந்நேரமும் இறைசிந்தனையோடு இருக்கவேண்டும் என்றும், பலர் எண்ணிக் கொண்டிருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். ஆன்மீகத்திற்கு உடைமாற்றம் தேவை இல்லை மன மாற்றம் தான் தேவை.
ஆன்மீகம் என்றால் பலருக்கு பயம். பயத்தைக் கொடுப்பது ஆன்மீகமல்ல அதை தெளிவுபடுத்துவதே ஆன்மீகம். அது அறிவுக் களஞ்சியம் அது அன்பை ஊற்றெடுக்க வைக்கும் அமுதசுரபி. மனிதனை மனிதனாக வாழவைக்கும் வழிகாட்டி.
வாழ்க்கையே வணக்கம் என்கிறான் இறைவன்.அந்த வணக்கமான வாழ்க்கையை புரிந்துக் கொள்வதற்கு ஆன்மீகத்தின் ஞானம் உதவி புரிகிறது.
ஆன்மீகத்தின் நுழைவாயிலில் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.அந்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. எத்தனையோ நூல்களை படித்தும் என்னிடம் பதில் இல்லாமல் போனது எப்படி? ஏட்டு கல்வியில் கிடைக்காத பதில்கள் ஞானக்கல்வியில் கிடைக்கிறது.
ஞானிகள் அதிகம் யோசிக்கக் கூடியவர்கள். ஒரு கருத்தை கூறினால் அதில் பலவிதமான பொருள்கள் இருக்கும். பல ஞானக்கதைகளை வாசிக்கும் போது அது நமக்கு வெளிச்சப் படுத்துகிறது.
ஆன்மீகம் என்பது ஆன்மாவைப்பற்றிய விளக்கம் அந்த விளக்கம் தான் ஞானம்.
விஞ்ஞானிகள் எதையும் ஆராய்ந்து கூறும் போது உலகம் உடனே ஏற்றுக் கொள்ளும். ஆனால் மெய்ஞ்ஞானி ஒன்றை கூறினால் இந்த உலகம் யோசிக்கும். காரணம் அறியாமை ,விளங்காமை.
ஞானம் வெளியிலிருந்து தொடங்கப்படுவதல்ல.தன்னிடமிருந்து ஆரம்பிக்கப் படுவது. சுய சிந்தனையை தன்னில் ஏற்படுத்தக் கூடியது. ஞானம் கற்பதில் என்ன பயன் இருக்கிறது? என்ற சிந்தனை அதனுள் நுழையுமுன் என்னிடம் எழுந்தது.

ஒரு மருத்துவரிடம் நீங்கள் மருத்துவரானதால் உங்களுக்கு என்ன பயன்? என்று கேட்பதைபோல் தான் ஞானமும் என்று விளங்கப்படும் போது உணரப்பட்டேன்.
இந்த உலகில் எத்தனையோ விதமான அறிவுகள் படித்துக் கொடுக்கப்படுகின்றன அவைகளெல்லாம் பொருளீட்டலை மையமாக வைத்தே போதிக்கப்படுகிறது. ஆனால் மனிதனைப் பற்றி படித்துக் கொடுக்கப்படுவது தான் ஆன்மீகஞானம்.
ஒருமுறை குருநாதரிடம் ஓரு கேள்வி கேட்கப்பட்டது. பாவம் என்பது என்ன?
மனிதன் தன்னை தான் அறியாமல் இருப்பது தான் பாவம் என்று பதிலுரைத்தார்கள். ஒரு வரி பதிலாக இருந்தாலும் இதில் ஓராயிரம் விளக்கம் இருக்கிறது.
ஒரு மனிதன் இறைவனைத் தேடி காடு மேடெல்லாம் அலைந்து களைத்து போய் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிறான். அருகிலிருந்த மனிதர் அவருக்கு களைப்பு நீங்க உணவு கொடுத்திருக்கிறார். உணவை உண்டதும் மீண்டும் இறைவனைத்தேட புறப்பட்டார். புறப்பட்டவரிடம் எங்கே செல்கிறீர்? என்று உணவு தந்தவர் வினவ நான் இறைவனைத் தேடி போய் கொண்டிருக்கிறேன் என்று பதில் கூறினார்.
இறைவனின் முகவரி என்னிடம் இருக்கிறது நீங்கள் அலையவேண்டாம் என்றார். உண்டவனுக்கோ ஆச்சரியம்…எங்கு இருக்கிறான் சொல்லுங்கள்?, என்று ஆர்வத்துடன் கேட்க அவரை அமைதிப்படுத்தி அமரவைத்தார்.
ஐயா! ஒன்றை அறியவேண்டுமானால் அதைப்பற்றி தெரிய வேண்டும். தெரிவது எப்படி? தெரிந்தவரிடம் கேட்க வேண்டும். இறைவனை அறியவேண்டுமானால் இறைவனின் படைப்பை அறியவேண்டும். நீயே இறைவனின் படைப்புதானே உன்னை நீ அறிய முற்படு நீ தேடும் இறைவனை நீ காணலாம் என்றார். இந்த அறிவுதான் குருவாக நிற்கிறது.
கையிலே வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைகின்ற கதைதான்.
பொறியியல் கல்லூரியில் மருத்துவம் படிப்பது எப்படி.? எதையும் சரியானவர்களிடம் சார்ந்தால்தான் நம்மை சரிசெய்துக் கொள்ள முடியும்.
ஞானத்தேடல் உள்ள மனிதனிடம் குருத்தேடல் இருக்கும். அறிந்தவரிடமிருந்து தான் அறிவைப் பெறமுடியும். குரு என்பது அறிவு . இந்த உலகமே குருத்துவமாக தான் இருக்கிறது.
ஒன்றிலிருந்து புறப்பட்டதுதான் இந்த உலகம் இரண்டு என்பது பேதம். இரண்டு ஒன்றாகும் போது அங்கு ஏற்படுவது ஏகத்துவம் . ஆதமும் ஏவாளும் (ஹவ்வா)ஒன்றிணைந்தபோது மனிதம் உற்பத்தியானது. அந்த வழிமுறைதான் நேற்றும், இன்றும், நாளையும்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறோம். குழந்தையிடம் எந்த பாரபட்சமுமில்லை. நாமும் குழந்தையாக இருந்துதானே வளர்ந்திருக்கிறோம் நம்மிடமும் தெய்வத்தன்மை இருக்கவேண்டுமே இருக்கிறதா? இருக்கிறது அது மறைந்திருக்கிறது. இருந்தது எப்படி மறைந்தது?
நாம் படித்த நூல்களை அடிக்கி வைத்து வருகிறோம் நிறைய புத்தகங்கள் நம்மிடம் சேர்ந்துவிட்டன என்னென்ன நூல்கள் இருக்கிறது என்பதே சில நாட்களில் மறந்தும் போய்விடுகிறது. ஒரு குறிப்பிட்ட நூலைத் தேடுவதற்கு அடுக்கிவைத்த நூலை ஒவ்வொன்றாக எடுத்து இடமாற்றுவோம். நாம் தேடும் நூல் அடியில் இருக்கிறது இதை கண்டுபிடித்து எடுப்பதற்கு அடுக்கப்பட்டிருந்த அத்தனை நூட்களையும் எடுக்கவேண்டி இருந்தது அல்லவா? அதுபோல்தான் நாம் குழந்தையாக இருந்தபோது தெய்வத் தன்மையில் இருந்தோம் நாம் வளரவளர புத்தகங்களை அடிக்கியது போல நம் மனதில் அடிக்கி வைக்கப்பட்ட அத்தனையும் கிளறவேண்டும், தேடவேண்டும் தேவையானதை வைத்துக் கொண்டு தேவையற்ற எண்ணங்களை சிந்தனைகளை களையவேண்டும் அப்படி களையப்படும்போது தேடப்படுவது கிடைக்கும்.
எப்படி தேடுவது என்பதை சொல்லிக் கொடுப்பவர்தான் குரு. நம் முகத்தை நமக்கு காட்டும் கண்ணாடி போல. பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்தான் முதல் குருவாக இருக்கிறாள். தாய்க் கல்விக்கு பின்தான் கல்விக்கூடங்கள் மற்ற அனைத்தும்.
எதையும் கற்றுக் கொடுக்கப்படாமல் ஒரு குழந்தை வளர்ந்தால் அது மிருகமாகிவிடும். மிருகத்திற்கு ஒன்றை கற்றுக் கொடுத்தால் அது மனிதனாக முடியாது. படைப்புகளில் மிக சிறந்த படைப்பு மனிதன் என்கிறான் இறைவன்.
மனிதனிடம் எல்லா குண அதிசியங்களும் இருக்கின்றன. அதனால்தான் அவனுக்கு அதிகமாக போதனை தேவைப்படுகிறது.
மனிதன் மனிதனாக வாழ்வதற்கு ஞானஅறிவுத் தேவை…அந்த அறிவு மனிதனிடம் இருக்கிறது அதை அடையாளப்படுத்தவே குருத்துவம் தேவைப்படுகிறது.
பொருள் வாங்கச் சென்றவர்கள் கடையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கக் கூடாது வாங்கப்போகும் பொருளில் குறியாக இருப்பது போல் குருவிடம் சென்றவர்கள் ஞானத்தை பெறுவதில் குறியாக இருக்கவேண்டும் குருவிடம் குறையை தேடிக் கொண்டிருந்தால் நிறைவு பெற முடியாது.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!