கட்டுரை

‘பெண் பெயரில் அறிமுகம் ஆகும் எல்லா கலைஞர்களுக்கும் வரக்கூடிய பெயர் குழப்பம் தான் எனக்கும் வந்தது’ பேனாக்கள் பேரவை நடத்திய மாதாந்திர சந்திப்பில் நாடக எழுத்தாளர் நடிகர் திரு கோவை அனுராதா கலகலப்பு.

52views
மதிப்பிற்குரிய திரு மோகன் தாஸ் அவர்களின் முயற்சியால் பேனாக்களின் சந்திப்பு என்ற கூரையின் கீழே கலை, இலக்கிய பிரபலங்களைச் சந்தித்துகலந்துரையாடும் நிகழ்ச்சி சமீப காலங்களில் நடைபெற்று வருகிறது.
அந்த பேனாக்களின் சந்திப்பு எனும் கூரை பேனாக்கள் பேரவை எனும் கூடாரமாக மாறி நேற்று மடிப்பாக்கத்தில் பன்முக திறமையாளர் கலைமாமணி கோவை அனுராதா அவர்களுடன் ஆன சந்திப்பு சிறப்பாக நிகழ்ந்தது.

கோவை அனுராதா அவர்கள் திண்ணை நாடகத்தில் தொடங்கி தமிழகத்தில் பல நாடக மேடைகளை சிறப்பித்து திரைப்படத் துறையில் துணை இயக்குனராக இயங்கி வீடியோ தொடர்கள் குறும்படம் காணொளி நிகழ்ச்சிகள் பொதிகை சன் டிவி ஜெயா டிவி போன்றவற்றில் பல தொடர்கள், எழுத்தாளர், நடிகர் பாடகர், உபன்யாசகர், என பன்முகம் காட்டியவர். பல விருதுகள் கலை மாமணி உட்பட. சமூக சேவையாளராக வெள்ள நிவாரண நிதி வழங்குதல் பள்ளிகளுக்குகல்வி உதவிகள் போன்ற சமூகப் பணிகளில் ஈடுபட்டவர்.  தற்சமயம் ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வரும் இவர் பிறருக்கு உதவி செய்வதே என் வாழ்நாள் குறிக்கோள் என்று சொல்லும் ஒரு மகத்தான மாமனிதர்.  அவரைச் சந்தித்ததில் பேனாக்கள் பேரவை பேர் உவகைப் பெறுகிறது.

சுவையான மாலை சிற்றுண்டியுடன் நிகழ்ச்சி தொடங்கியது.  பேனாக்கள் பேரவை சார்பில் திரு என் சி மோகன்தாஸ் அவர்கள் அமெரிக்காவிலிருந்து வீடியோவில் வந்து கோவை அனுராதா அவர்களுக்கு வணக்கத்தையும் வந்தனத்தையும் தெரிவித்தார்.  பேனாக்கள் பேரவை சார்பாக நிர்வாக உறுப்பினர்கள் மடிப்பாக்கம் வெங்கட், கவிஞர் தயாளன், விஜி R. கிருஷ்ணன், அகிலா ஜுவாலா, பூவேந்தன், ரவி நவீனன் ஆகியோரும், பிரபல எழுத்தாளர்கள் திருவாளர்கள் சம்பத், சு ஸ்ரீ நவரஞ்சனி ஸ்ரீதர், ஆர் சி நடராஜன் தம்பதியர், திரு பி வி ராஜ்குமார், மகாதேவன் ஸ்ரீனிவாசன் ஆகியோர்கலந்து கொண்டனர்.
நான் மீடியாவில் இருந்து ஆர்ஜே நாகா அவர்கள் தன் உதவியாளருடன் வந்து ஒலி ஒளி அமைப்புகளை மிகச் சிறப்பாக செய்து கொடுத்தார்கள்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர் அனைவரும் தாங்கள் எழுதிய புத்தகங்களை அவரிடம் கொடுத்து அவரது ஆசி பெற்றனர்.  நான் எனது உழல் வலிகள் சிறுகதை தொகுப்பை கொடுத்து ஆசீர்வாதம் பெற்றேன்.  அவரது சின்னஞ்சிறு கதைகள் என்ற சிறுகதை தொகுப்பினை அவர் எங்களுக்கு வழங்கினார்.

கோவை அனுராதா அவர்கள் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அமெரிக்காவிலிருந்து என் சி மோகன் தாஸ் நேற்று இரவு பேசி நிகழ்ச்சி சிறப்பாக அமைய வேண்டும் என்ற தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதையும் மடிப்பாக்கம் வெங்கட் அவர்கள் முன்னின்று இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்ததையும் பாராட்டினார்.
தான் நடிகராகவும் எழுத்தாளராகவும் கலை உலகிற்குள் நுழைந்ததாக அவர் குறிப்பிட்டார்.  பெண் பெயரில் அறிமுகம் ஆகும் எல்லா கலைஞர்களுக்கும் வரக்கூடிய பெயர் குழப்பம் அவருக்கும் நிகழ்ந்ததை சுவையாக சொன்னார்.
அவரை அனுராதா ரமணன் என்றும் சிலர் குறிப்பிட்டதையும் சொன்னார். தனது அனுஷ நட்சத்திரம், ராதாகிருஷ்ணன் என்ற பெயரையும் இணைத்து கோவை அனுராதா என்ற பெயர் வைத்துக் கொண்ட வரலாற்றை கூறினார்.
நகைச்சுவை பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லும் பொழுது நகைச்சுவை உணர்வு ஜீன்களில் அடங்கியிருக்கும் ஒன்று என்றார்.  புத்தக வாசிப்பை விட வாழ்க்கை வாசிப்பு அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்று ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையை வாசித்து அந்த அனுபவங்கள் தான் பலசுவையான தகவல்களாக வெளி வருகிறது என்றார்.

புத்தகங்களை வாசிக்கும் போது தான் பிறர் எப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது ஆகவே புத்தக வாசிப்பும் அவசியம்தான் என்றார்.
ஆர் சி நடராஜன் அவர்கள் நகைச்சுவை உணர்வு திருமணமான ஆண்களுக்குத் தான் அதிகமாக இருக்கின்றதா என்று கேட்டதற்கு,  அது என்னவோ தெரியவில்லை எல்லா நகைச்சுவைகளிலும் வீட்டில் உள்ள மனைவியை வைத்துத்தான் பேசுகிறார்கள்.
பெண்களும் கணவர்களைகிண்டல் பண்ணி நகைச்சுவையாக பேச முன்வர வேண்டும் என்றார்.  கோவை அனுராதா அவர்களின் நாடக குழு, இயக்குனர் சிகரம் அவர்களின் நாடகக் குழு போன்றே செயல்படுகிறது என்று  கே.பாலச்சந்தர் அவர்கள் பாராட்டியது தனக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
ஒரு நிகழ்ச்சியில் ஒரு பிரபல சரித்திர நாவலாசிரியர் கார்டு கவர் எழுதுறவன் எல்லாம் எழுத்தாளன் என்று வந்து விட்டான் என்று பேசிய விதம் தன் மனதுக்கு வருத்தத்தை அளித்தது என்றும் அதனால் பொதுவாக தான் எழுத்தாளர்கள் சங்கம் நிகழ்த்தும் நிகழ்வுகளுக்கு செல்வதில்லை என்றும் குறிப்பிட்டார்.

எழுத்தாளர் சங்கங்களில் பொதுவாக முகத்துக்கு நேரேபாராட்டிவிட்டு பின்னால் இவன் என்ன எழுதி கிழித்து விட்டான் என்று சொல்லும் மாண்பினை உடையவர்களாக தான் நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்று வருத்தப்பட்டார்.
ஆனால் இங்கே நீங்கள் கூடியிருப்பது பேனாக்களின் நட்பு என்ற வகையில், நட்பு எப்பொழுதுமே ஆகச்சிறந்த ஒன்று நட்புக்கு ஈடு இணை எதுவுமே இல்லை ஆகவே முழு சம்மதத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வந்தேன்.  அதேபோன்று இங்கே கூடியிருக்கும் நீங்கள் நட்புறவுடன் பழகுவதை நான் பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டார்.  பன்முகத் தன்மை வாய்ந்தவராகையால் அவரை நானும் அகிலா ஜுவாலா அவர்களும் ஒருசேர ஏதாவது பாடலை பாடும்படி கேட்டோம்.

அருமையாக சில பாடல்களை பாடி அசத்தி விட்டார். குரல் வளமும் பாவமும் நிறைந்தவர், ஒரு மிகச்சிறந்த பாடகராக வர வேண்டியவர் எழுத்திலும் நாடகத் துறையிலும் புகழ்பெற்றது வியப்பாகவே இருந்தது.
நிகழ்ச்சியில் ஆர் ஜே நாகா அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது
ரவி நவீனன்

 

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!