கட்டுரை

காதுல பூ – நாடகமும் நானும்

86views
மழைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருகிறது சென்னை…
இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சென்னை வெள்ளக்காடாகலாம்.
பல மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உலாவர ஆரம்பிக்கலாம்.
செய்தி தொலைக்காட்சிகள் போர்க்காஸ்ட்டிங் செய்ய தொடங்கிவிட்டிருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை சோம்பலை புறந்தள்ளி விட்டு கிளம்பலாம் என்று ஆயத்தமாகி விட்டேன்.
‘நாடகம் பார்க்க வாங்களேன் …நீங்க என்னோட கெஸ்ட்…’ என்று அன்புடன் அழைத்தார் அந்த பிரபலம்.
சமீபத்தில் தான் எனக்கு அவருடன் பழக்கம்.
அவர் ஒரு திரை பிரபலம். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். 24 மணிநேரமும் உடனிருக்கும் பாதுகாவலருடன் வலம் வருபவர்.
தன் மீது நிறைய சர்ச்சைகள் வைக்கப்பட்டாலும் அதை இயல்பாய் கடந்து செல்பவர். நெருங்கி பார்த்தால் இவரா அவர் என்று வியக்க வைப்பவர்.
அவர் திரு எஸ்.வி.சேகர் அவர்கள்.
தொடர்ந்து பல மாதங்களாக அந்த அரங்கத்திற்குள் தன் நகைச்சுவை நாடகங்கள் வழியாக மக்களை சந்தித்து கொண்டிருக்கிறார்.
காதுல பூ –
நாடகம் பார்க்க அழைத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு மாலை நேரம் தோழியுடன் அடையாறு சென்றேன்,
நேற்றைய சத்யா ஸ்டூடியோ இன்றைய டாகடர் எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்ததும் வெளியே பேனர்களில் சிரித்துக் கொண்டிருந்தார் சேகர்.
பல முறை ஒலி வடிவில் கேட்டு மகிழ்ந்த நாடகம் தான். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேறிய நாடகத்தை புதிதாக பார்ப்பது போன்ற மனநிலையுடன் ரசிகர்கள் காத்திருந்ததை அங்கு கவனிக்க முடிந்தது.
7 மணிக்கு நாடகம் ஆரம்பம், 6.30 மணிக்கு ஸெல்ப் ட்ரைவில் அங்கு வந்து சேர்ந்தார் எஸ்.வி.சேகர்.
ஓட்டுனர் வைத்துக் கொள்ளாத 75 வயது அந்த இளைஞர் உற்சாகத்துடன் எல்லோருக்கும் கை அசைத்துவிட்டு சிறிது நேரம் அமைப்பாளர்களிடம் உரையாடிய பின் ஒப்பனை அறைநோக்கி செல்கிறார்.

காம்பிளிமெண்ட் டிக்கெட் பெற்றுக் கொண்டு இடம் பார்த்து அமர்ந்தோம்.
குளிர்சாதனம் செய்யப்பட்ட அந்த அரங்கம் எங்களுக்கு அப்போது போதுமானதாக இருந்தது நேரம் போக போக தான் குளிரின் தாக்கம் கை விரல்களை சில்லிட வைத்தது .
இரண்டொரு முறை தேநீர் குடிக்கலாமா என்று கூட யோசித்தோம்.
100 மணி நேரத்தில் 200 ஜோக்குகள். இதற்கு எஸ்.வி.சேகர் கேரண்டி என்று சொல்லிக் கொள்ளலாம்.

சந்தேகம் இருந்தால் அடுத்தவாரம் அதே இடத்தில ‘மஹாபாரதத்தில் மங்காத்தா’ நடக்க இருக்கிறது. முடிந்தால் நாடகம் முடியும் வரை பொறுமையாய் காத்திருந்து எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம். அதிகமாக வருமே தவிர குறைவாக வர வாய்ப்பிருக்காது. சளைக்காமல் ஜோக்கடித்தபடியே இருக்கிறார் மனிதர். சர்வ சாதாரணமாக அரசியல் ஜோக்குகளை டைமிங்கில் பேசிவிட்டு கடந்துவிடுகிறார். நாம் தான் அதை கடந்து போக முடியாமல் அப்படியே நின்று விடுகிறோம்.
எட்டரை மணிக்கு நாடகம் முடிந்தது.

கால்வலிக்கு ஸ்பிரே அடித்துக் கொண்டு ரசிகர்களிடம் வழக்கம் போல தன் ஹியூமர் பேச்சில் கலகலக்க தொடங்கிவிட்டார். பேச்சின் சுவாரஷயத்தில் யாரும் அரங்கம் விட்டு வெளியே செல்லவில்லை. அதை விட ஆச்சர்யம் நாடகம் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஒருவர் கூட வெளியே செல்லவில்லை என்பது தான். ரசிகர்கள் அவர் மீது வைத்தருக்கும் மரியாதை. இதுதான் எஸ்,வி.சேகருக்குரிய பலம்.
இதுவரை ஏழாயிரம் மேடைகளை கண்டிருகிறது ‘நாடகப்ரியா’. தந்தை திரு வெங்கடராமன் அவர்களால் தொடங்கப்பட்ட நாடகக் குழுவை தொய்வில்லாமல் இன்றுவரை வெற்றிகரமாக நடத்துவது என்பது சாதாரண விஷயமில்லை. நடத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்.
தந்தை திரு வெங்கடராமன் அவர்களுக்கு இது நூற்றாண்டு காலம். அரசு எடுக்கும் விழாவில் இந்த சாதனை கொண்டாடப்பட இருப்பதாகவும், நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
செலஃபீ எடுத்துக்கொள்ள ரசிகர்களை மேடைக்கு அழைத்து அலைபேசிகளில் புன்னகைத்தபடி படங்களாக எடுத்து தள்ள ஆரம்பித்துவிட்டார்
அவர்.
நானும் தோழியும் விரும்பி சுயமி எடுத்துக் கொண்டோம்.

‘ஒரு பத்து கேள்வி ரெடி பண்ணுங்க. உங்கள் சேனலுக்கு பேட்டி தரேன்’ என்றார்.
விரைவில் கேள்விகளை சாக்காக வைத்துக்கொண்டு அவரை சந்தித்து விட வேண்டும்.
காதுல பூ – இது நாடகத்தின் பெயராக இருந்தாலும் எனக்கு கழுத்தில் விழுந்த பூமாலையாக எண்ண தோன்றுகிறது.
இந்த ஞாயிறு, பௌர்ணமியாக எனக்குள் வளர ஆரம்பிக்கிறது.
RJ நாகா

1 Comment

  1. திரு. எஸ்.வி. சேகர் அவர்கள் நடித்த படங்களும் நாடகங்களும் ரசித்து பார்த்ததுண்டு. படித்தேன். மகிழ்ந்தேன், பகிர்கிறேன் என் தோழிகளுடன். மேலும் பணி சிறக்க வாழ்த்துகள். 💐💐💐

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!