கட்டுரை

கள்ளச்சாராய சாவு தீர்வு என்ன??

335views
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற துயரச் சம்பவத்திற்கு காரணமாக இருப்பவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல தண்டிக்கப்பட வேண்டியவர்களும் கூட… அதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. ஆனால் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராயச் சாவு தான் இந்தியாவிலேயே முதன் முதலில் நடைபெற்றது போல  பல அறிவு ஜீவிகள் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
 புகழ்பெற்ற திரைப்பட நடிகர்கள் கூட இந்தச் சம்பவத்தை கண்டிக்கிறபோது மாறி மாறி ஆட்சிக்கு வருபவர்களால் இதனை எதுவும் செய்ய இயலவில்லை என்று  கண்டனம் செய்கிறார்கள்.

சங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் திரைப்படத்தில் அதி புத்திசாலி மாணவனாக விஜய் வருவார். ஆசிரியருக்கே பாடம் நடத்துவார். ஆனால் அந்த திரைப்படத்தில் இரண்டு காட்சிகளில் உயர்ரக மதுப்பாட்டில்களுடன்  சக மாணவ  நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்துவார்.
 அந்தத் திரைப்படம் சொல்ல வருவது என்னதான் அறிவு ஜீவியாக புத்திசாலியாக ஒருவர் இருந்தாலும் அவரும் மது சாப்பிடுவார் என்பது தான் மையக்கரு.அல்லது இப்படியும் சொல்லலாம் மது சாப்பிடுவது அவ்வளவு பெரிய குற்றமில்லை என்று… இளையோர் மத்தியில் மதுப்பழக்கத்தை குற்ற உணர்ச்சி இல்லாமல் கொண்டு சென்ற பெருமை தமிழ்நாட்டில் வெளியாகும் திரைப்படங்களுக்கு உண்டு. இதில் பிரபலமான நடிகர்கள் அனைவருக்கும் பங்கு உண்டு.

 எல்லா அசைவுகளிலும் ஒரு அரசியல் உண்டு என்பார்கள். அது இப்போது பல திசைகளில் இருந்து கண்டனம் வருகிறது.  ஆட்சி முழுமையும் தவறாகத்தான் இருக்கிறது என்று சொல்வது தான் அரசியல் ஆகிறது. கல்வி, சுகாதாரம், தனிநபர் வருமானம், இவைகளில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதல் மூன்று இடங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
 மறந்துவிட வேண்டாம் கடந்த 58  ஆண்டுகளாக இங்கே நடைபெற்று வருவது திராவிட இயக்கங்களின் ஆட்சியில் தான்  இந்த வளர்ச்சியும் சாத்தியப்பட்டிருக்கிறது.

இன்னும் சில அறிவு ஜீவிகள் தமிழ்நாட்டின் அரசு வருமானமே மது விற்பனையால் தான் வருகிறது என்று சொல்லி வருகிறார்கள் அதுவும் தவறான கண்ணோட்டம் தான்…
தமிழ்நாட்டில் கடந்த 2023–24 ஆம் ஆண்டில்   அரசு மதுபான கடைகள் மூலம் அரசுக்கு கிடைத்தது 45 ஆயிரத்து 855  கோடி ரூபாய். இதே ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மது விற்பனை மூலம் கிடைத்த வருமானம் என்பது 47 ஆயிரத்து 600 கோடி ரூபாய் …அதாவது தமிழ்நாட்டை விட சுமார் 2000 கோடி ரூபாய் அதிகம் மது விற்பனையால் வந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் அரசு மதுபானம் விற்பது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ராமன் பிறந்த அயோத்தி உள்ளிட்ட புனித நகரங்களைக் கொண்டது உத்தரப்பிரதேசம் மாநிலம். கடந்த 2021ல்ஜூன் மாதத்தில் அலிகார் அருகிலுள்ள  ஹூச் கிராமம் சோகத்தில் மூழ்கியது. கள்ளச்சாராயம் சாப்பிட்டு 36 பேர் இறந்தது தான் அந்த சோகத்திற்கு காரணம்.
 அப்போது இன்னொரு சர்ச்சையும் எழுந்தது. 70-க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் 36 பேருக்கு மட்டும் தான் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினரே குற்றம் சாட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்ணல் காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் சாப்பிட்டு 42 பேருக்கு மேல் உயிர் இழந்ததாக
2022 ல் ஜுலை 28 ல் அன்றைய குஜராத் மாநில  நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாக வெளிவந்தன.பாவ்நகர் மற்றும் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 97 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அச்செய்தி விரிவாக எடுத்துச் சொன்னது.
 கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய சாவு என்பது வெறுமனே காவல்துறையின் அலட்சியம் மட்டுமல்ல… அங்கு வாழும் மக்களின் சமூக பொருளாதாரக் காரணிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்  என்று சமூக சமத்துவ மருத்துவர்களின் சங்க கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.
 உண்மைதான்… அண்மைக்காலங்களில் ஆந்திராவில் ஆந்திராவிற்கு சென்று செம்மரம் வெட்டி துப்பாக்கி சூட்டினை எதிர்கொண்டு உயிரிழந்தவர்கள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்ட தொழிலாளர்கள் தான். இதனைக் கலையாமல் வெறுமனே மதுவிலக்குப் பிரச்சாரம் செய்வது தொடுவானம் நோக்கிய பயணமாகத் தான் இருக்கும்.
 கள்ளச்சாராயம் இந்தியாவில் பல்வேறு கிராமங்களில் பரவி நிற்கிறது. அசாதாரணமான உழைப்பை மேற்கொள்கிறவர்களுக்கு மது அத்தியாவசிய உணவுப் பொருளாக மாறுகிறது. நம் நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கின்ற ராணுவ வீரர்களுக்கு அளவுடன் உயர்ரக மது வகைகள் வழங்கப்படுவது அனைவரும் அறிந்ததே.
 கட்டுப்பாடுடன் கூடிய மதுவிலக்கு என்பதுதான் சாத்தியமாகுமே தவிர முழுமையான மதுவிலக்கு என்பது நிச்சயம் சாத்தியமில்லை.
மாணவர்கள் மத்தியில் குறிப்பாக TNPSC நடத்துகின்ற அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகளில் தமிழ் இலக்கியத்தில் மதுவுக்கு எதிராகப் போராடிய திருவள்ளுவர் தொடங்கி கவிச்சக்கரவர்த்தி கம்பன் வரையிலும் எழுதிய தரவுகளில் இருந்து கேள்விகள் கேட்டு கேட்கப்பட வேண்டும். அது மட்டுமல்ல பேருந்துகளில் திருவள்ளுவரின் கள்ளுண்ணாமை அதிகாரத்தை எழுதி வைக்க வேண்டும். இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ளும் வகையில் அரசின் பாடத்திட்டங்களிலும் கள்ளுண்ணாமை குறித்த பாடங்களை சேர்த்திட வேண்டும்.
குடிகாரர்களாகப் பார்த்து திருந்தினால் தான் மனித குலம் மதுவில் இருந்து விடுபட முடியும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.!!!

நீ சு பெருமாள்
nsperumalcpi@gmail.com
+91 94426 78721
பரமக்குடி.

1 Comment

  1. அருமையான பதிவு.. மதுவிலக்கு குறி்த்து நிதர்சனமான உண்மையை நூலாசிரியர் கூறியுள்ளார். தனி மனித மற்றும் சமூக ஒழுக்கமே நிரந்தர தீர்வு. அரசை குறை கூறாமல் அடுத்த கட்ட சிந்தனை அவசியம் என்பதையும் நீதி நெறி பள்ளி கல்லூரி மட்டுமல்லாமல் திரைப்படம் முகமாகவும் கொண்டு செல்ல வேண்டும் என்பதை அழகாக கூறியுள்ளார்..

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!