97
– தமிழ்வானம் செ. சுரேஷ்
மணவை முஸ்தபா பிறந்தநாள் ஜூன்-15 (15-06-1935)
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தர உலக அளவில் நிர்பந்தம் கொடுத்த போராளிகளில் ஒருவரும், அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினித்துறை என நவீனத் தமிழுக்கு எட்டு கலைச்சொல் அகராதிகளை மகுடமாகச் சூட்டியவர் என்று பல சாதனைகளை நிகழ்த்தியவரும், தமிழகம் உலகுக்கு வழங்கிய சிறந்த அறிஞர்களில் ஒருவராக வாழ்ந்து மறைந்தவர்தான் மணவை முஸ்தபா.
அறிவியல் தமிழில் எழுதுபவர்கள் எல்லோரிடத்திலும் தொடர்பில் இருந்தவர் மணவை முஸ்தபா. தனது பெரும் முயற்சியால் அறிவியல் தொழில்நுட்ப கருத்துப் பரிமாற்றம் எனும் பெயரில் முதன் முதலாக நடந்த அறிவியல் தமிழ்க் கருத்தரங்கை நடத்திக் காட்டினார். 15 நாட்கள் நடந்த அந்தக் கருத்தரங்கை ஒரு பயிற்சிப் பட்டறை போலவே நடத்தினார். மருத்துவம், இயற்பியல், தொழில்நுட்பம், வாகன இயல் என உயிர்க்காப்பு மருந்து முதல் உதிரிப்பாகங்கள் வரை எல்லாவற்றுக்குமே தமிழ்ப் பெயர்கள் இருக்க வேண்டும் எனும் பேராவல் கொண்டவர்.
தமிழின் அறிவியலுக்கு அவர் தந்த ‘மருத்துவக் கலைச் சொல் களஞ்சியம்’, ‘அறிவியல் தொழிற்நுட்பக் கலைச் சொல் களஞ்சிய அகராதி’ ஆகிய இரு பிரம்மாண்டமான படைப்புகளை துணையாகக் கொண்டே கடந்த 25 ஆண்டுகளாகப் பள்ளிக்கல்வித்துறையின் தமிழ்ப் பயிற்று மொழி சார்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வரையிலான நூல்களை ஆசிரியர்கள் உருவாக்கி வந்துள்ளனர். ‘கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி’யும் அவரது அபார உழைப்பில் விளைந்த பொக்கிஷம். இன்றும் கூகுள் பயன்படுத்தும் ‘தேடல்’, ’துளாவி’, ’உள்நுழைக’ பதங்கள் அவர் நமக்களித்த கொடைகள் தான்.
‘பிரித்தானிக்கா’ எனும் கலைக் களஞ்சியத்தைத் தமிழுக்கு கொண்டுவந்த மணவை முஸ்தபா அவர்களின் பணி, ஆங்கிலத்தின் முதல் அகராதியை கொண்டுவந்த சாமுவேல் ஜான்சன் தொடர்ச்சியாக ஐந்தாறு நாட்கள் உணவு உறக்கமின்றி உழைப்பார் என்று சொல்வார்கள், மணவை முஸ்தபாவுக்கும் அது பொருந்தும். பல நாட்களுக்கு ஒய்வே எடுத்துக்கொள்ளாமல் உழைத்தவர் மணவை முஸ்தபா.
1966 இல் பாரீசில் மூன்றாம் உலகத்தமிழ் மாநாடு தொடங்கி பல உலகத் தமிழ் மாநாடுகளிலும் அறிவியல் தமிழ் குறித்து மணவை முஸ்தபாவின் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றன. பாரீஸ் மாநாட்டை நடத்திட ‘யுனெஸ்கோ’ உதவியது. அன்று யுனெஸ்கோவின் தலைமை இயக்குனராக இருந்தவர் மால்கம் ஆதிசேசையா. அந்த மாநாட்டில் 53 நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள் கலந்து கொண்டதைக் கண்டு பிரம்மித்த யுனெஸ்கோ, தமிழில் தனியாக ’யுனெஸ்கோ கூரியர்’ இதழ் தொடங்க முடிவு செய்தது. எனினும் தமிழ் இந்திய ஆட்சிமொழி அல்ல, இந்திய பிராந்திய மொழிகளில் ஒன்று என்பதால் யுனெஸ்கோ கூரியரை தமிழில் தொடங்க மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை. யுனெஸ்கோவின் உறுப்பினராக இருந்த மணவை முஸ்தபா, அப்போதைய தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணாவைச் சந்தித்து நிலைமையை விளக்கினார். அண்ணாவின் நிர்பந்தத்தைத் தொடர்ந்து யுனெஸ்கோ கூரியரை இந்தியிலும் நடத்தினால் ஒப்புக்கொள்வோம் என்று லால்பகதூர் அரசு தெரிவித்தது. 1967 ஜூலை மாதம் தமிழில் தொடங்கப்படுவதை ஒட்டியே, இந்தியிலும் கூரியர் இதழ் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இதழின் ஆசிரியர்களாக எஸ். கோவிந்தராஜூ, தெ.பொ. மீனாட்சிசுந்தரம், நெ.து. சுந்தரவடிவேலு ஆகியோர் செயல்பட்டதற்குப் பின்னர் மணவை முஸ்தபா ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். யுனெஸ்கோ கூரியர் இதழ் ஆசிரியர்களின் முக்கியமான பணியைத் தாண்டி, இதழுக்கு தொடர்ச்சியாக பங்களித்த பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களின் பணியும் அளப்பரியது. யுனெஸ்கோ கூரியரின் முதல் சிறப்பு ஒவ்வொரு இதழும் ஒரு மையக்கருவை அடிப்படையாகக் கொண்டே வெளியானது. புதிய புதிய சொற்கள், கலை, அறிவியல், கல்வி, சமூகம், பண்பாடு, மானிடவியல் என பல்வேறு துறைகளின் முக்கிய அம்சங்களை அலசும் கட்டுரைகள், சர்வதேச ஒளிப்படங்கள், ஓவியங்கள் எனத் தமிழ் இதழியலின் கால்தடங்கள் பாவாத பாதை அது. ‘உலகைக் காட்டும் ஜன்னல்’ என்ற அந்த இதழின் அடைமொழி, அதை பொருத்தமாக உணர்த்தியது.
தமிழ்நாடு பற்றிய தனிச் சிறப்பிதழை ‘தமிழரின் வாழும் பண்பாடு’ என்ற பெயரில் யுனெஸ்கோ கூரியர் மார்ச் 1984 இல் வெளியிட்டது. அந்த இதழ் வெளியாக முக்கியக் காரணமாக இருந்த பிரெஞ்சு, தமிழ் ஆய்வாளர் பிரான்சுவா குரோ, ‘சங்க இலக்கியத்தில் நிலக்காட்சி’ என்ற கட்டுரையை எழுதியிருந்தார். அவருடன் எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, அம்பை, க்ரியா, திலகா பாஸ்கரன் ஆகியோரும் கட்டுரை எழுதியிருந்தனர். தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி சுருக்கமான, அதே நேரம் அழகானதொரு சித்திரத்தை அந்த இதழ் உலக மக்கள் மத்தியில் உருவாக்கியது. தமிழ் உள்ளிட்ட 27 உலக மொழிகளில் அந்த இதழ் வெளியாகியிருந்தது. மணவை முஸ்தபா ஆசிரியராக இருந்தபோது ஐந்து இலட்சம் பிரதிகள் விற்று யுனெஸ்கோ இதழ்களில் நான்காம் இடத்தை பெற்றது. ‘யுனெஸ்கோ கூரியர்’ நிதி நெருக்கடிகளை காரணம் காட்டி 2001 இல் நிறுத்தப்பட்டது. தற்போதும் இது ஆங்கிலத்தில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அத்துடன் ஐ.நா அங்கீகரித்துள்ள ஆறு மொழிகளில் அச்சு இதழாகவும், இணையத்தில் இலவசமாகவும் வெளியாகி வருகிறது.
மணவை முஸ்தபா 31 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலிருந்து ஏழிற்கு மேற்பட்ட நூல்களை தமிழாக்கம் செய்திருக்கிறார். மலையாளத்திலிருந்து மூன்று நூல்களை மொழிபெயர்த்துள்ளார். எம்.ஜி.ஆர்., கலைஞர் மு. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தமிழக முதல்வர்களாக இருந்தபோது தமிழக அரசு வழங்கிய விருதுகளைப் பெற்ற ஒரே தமிழறிஞர் மணவை முஸ்தபா மட்டுமே.
தமிழ் செம்மொழியே என்பதை நிறுவிய பரிதிமார்கலைஞர், மறைமலை அடிகளார் ஆகியோரின் விருப்பம் நிறைவேற இடைவிடாது போராடினார். மத்திய அரசு செம்மொழியாக தமிழை ஏற்றபோது 1000 ஆண்டுகள் பழமையான மொழி என குறிப்பிட்டதை கண்டு கொதித்தெழுந்தார். அதற்கு எதிராகப் போராடினார். இவர் எழுதிய ‘இசுலாமும் சமய நல்லிணக்கமும்’ எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம், அளவியல், அறிவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய ‘மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்’ எனும் நூல் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன. பல்வேறு நாடுகளாலும், அமைப்புகளாலும் பாராட்டப்பெற்று ஏறத்தாள 50 க்கும் மேற்பட்ட விருதுகளையும், பட்டங்களையும், பரிசுகளையும் இவர் பெற்றிருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகளில் சொற்பொழிவாற்ற இவர் சென்றிருந்தபோது பக்கவாத நோயினால் தாக்கப்பட்டு படுத்த படுக்கையானார். ஆனாலும், தமிழின் மீது இவர் கொண்ட காதல் கொஞ்சமும் குறையவில்லை. தொடர்ந்து தமிழுக்குத் தொண்டாற்ற முடியவில்லையே என்பதுதான் அவருடைய ஏக்கமாக இருந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மணவை முஸ்தபாவும் பழ. நெடுமாறனும் பயின்றவர்கள். இரண்டு பேரும் கல்லூரித் தோழர்கள். பழ. நெடுமாறன் தலைமையில் மணவை முஸ்தபா அவர்களின் 81 வது பிறந்தநாளை தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் 19-6-2016 அன்று மிகச்சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். தமிழறிஞர்கள் பலரும் இவ்விழாவில் பங்கேற்றனர். மணவை முஸ்தபா நிறுவியுள்ள அறக்கட்டளை சார்பில் பல்வேறு துறைகளில் தமிழுக்குத் தொண்டாற்றிய 10 அறிஞர்களுக்கு ‘அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா விருது’ அப்போது வழங்கப்பட்டன.
திண்டுக்கல்லில் 15-6-1935 அன்று விவசாய குடும்பத்தில் பிறந்த மணவையார் 6-2-2017 அன்று தனது 82 வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றார்.
இசுலாம் எங்கள் மார்க்கம், இன்பத்தமிழ் எங்கள் மொழி என்பதை தனது வாழ்வின் நோக்கமாகக் கொண்டு தமிழுக்குத் தொண்டாற்றி மறைந்திருக்கும் அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
(நான் எழுதிய இக்கட்டுரை, ஏப்ரல் 2017 அமுதம் மாத இதழில் வெளியானது)
add a comment