கட்டுரை

“நாங்க வேற மாதிரி…”

198views
யூனிகேர்ல்ஸ் –
இன்றைய யுவதிகள் கொஞ்சம் வித்தியாசமாகவே யோசிக்கின்றனர்.
ஐ டி நிறுவனங்களில் கை நிறைய சம்பளம், வாரஓய்வு நாட்களில் ரிசார்ட், வெளியே அவுட்டிங் செல்வது, சமூக வலைத்தளங்களில் அரட்டை, இன்ஸ்ட்டா, எக்ஸ் -ல் உடனடியாக பதிவேற்றும் புகைப்பட களேபரங்கள், ஸ்டேட்டஸ் என்ற பெயரில் நடக்கும் பயமுறுத்தல்கள் இப்படியான இன்றைய வெகு ஜன வட்டத்தை விட்டு வெளியே வந்திருக்கும் இவர்கள் கடந்த ஆண்டு தான் கல்லூரி முடித்து சுடச்சுட இந்த விளிம்பு நிலை மனிதர்களின் உலகில் கால் வைக்க தொடங்கி இருக்கின்றனர்.
யூனிகேர்ல்ஸ்…- இப்படி தங்களை தாங்களே அழைத்துக் கொள்கின்றனர்.
நிறைய அக்கறை …கூடுதல் அன்பு….சிந்தனையில் புதுமை.
கோயம்பத்தூரில் வசிக்கும் இந்த பெண்கள் கல்லூரியில் படிக்கும் போதே மாற்று சிந்தனையுடன் இயங்கியவர்கள். எல்லோரையும் போல சராசரிகளாக இல்லாமல் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க பிரியம் காட்டியவர்கள்.
வசதிபடைத்த குடும்பமோ அல்லது அரசியல் செல்வாக்குமிக்க பின்புலமோ எதுவும் துளிகூட கிடையாது . மிக சாதாரணமான நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள். மனசு நிறைய அன்பு மட்டுமே நிறைந்திருக்கிறது. சொல்லிக் கொள்ளும்படியான எந்த அடையாளமும் இல்லாது இயங்கிய வாழ்க்கை இப்போது அடையாளங்களாக இவர்களை முன்னிறுத்தி இருக்கிறது.
எளிய வேலை செய்து அன்றாடம் வாழ்வை நகர்த்தும் குடும்ப பின்னணி மட்டுமே இவர்களுக்கு சொந்தம்.
கல்லூரி காலத்தில் இவர்களின் செயல்பாட்டை கவனித்த சில நிறுவனங்கள் இவர்களுக்கு ஆதரவாக கை கொடுக்க முன்வந்தது. அதன் ஒரு பகுதியாக யூனிகார்ப்ஸ் – என்ற நிறுவனத்தை எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காமல் இவர்களே அதை தங்கள் விருப்பம் போல் இயக்க கூடிய அளவிற்கு சுதந்திரத்தையும் அந்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் முடிவெடுக்கும் அதிகாரத்தையும் வழங்கி இந்த பெண்களை கௌரவப்படுத்தி இருக்கிறது.

அப்படி என்னதான் செய்கின்றனர் இந்த யூனிகேர்ல்ஸ்.
வயது முதிர்ந்தவர்களின் ஊன்றுகோலாகி இருக்கிறது இவர்களின் அன்பு.
ஆம்.
கோயம்பத்தூர் மாவட்ட நலச்சங்கம் நடத்தும் முதியோர் இல்லம் மாதம்பட்டி அடுத்த மத்திபாளையம் என்ற கிராமத்தில் செயல்படுகிறது. ஆதரவற்ற முதியவர்கள் முப்பதுக்கும் மேற்பட்டோர் இருக்கும் அந்த இல்லத்திற்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை இந்த பெண்கள் குழு செல்கிறது. காலையில் இருந்து இரவு வரை ஒருநாள் அவர்களுடன் கழிப்பது என முடிவு. போர்வைகள், உணவு, இனிப்பு பலகாரங்கள் தேவையான அத்தியாவசிய மருந்துகள் என இவர்கள் கொண்டு செல்கின்றனர் இவர்கள். தாங்கள் உருவாக்கிய நிறுவனத்தின் முதல் மாத சம்பளத்தை தங்கள் குடும்பத்தாருடன் அந்த இல்லத்தில் இருப்பவர்களுடன் சேர்ந்து கொண்டாடுகின்றனர்.

இங்குதான் அந்த விதை ஆழமாக நிலத்தில் தன்னை புதைய வைக்கிறது.
ஐந்து பெண்கள் தங்களின் ஒருநாள் சம்பளத்தை இனி இந்த இல்லத்திற்கு கொடுப்பது என ஏகமானதாக முடிவெடுத்து வீட்டாரின் சம்மதத்தையும் பெற்று இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த செயலை பேரன்புடன் செய்ய நண்பர்களையும், உறவினர்களையும் இணைத்திருப்பது பாராட்டிற்குரிய ஒன்று.

முப்பது நாள் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் அந்த முதியோர் இல்லம் இனி செயல்படும். இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் நடந்துகொண்டிருக்கும் செயல் கிடையாது. இனி எல்லா மாவட்டங்களிலும் இது தொடரவேண்டும். இந்த நடவடிக்கைகளில் தொடர்ந்து இயங்க ஆரம்பித்து விட்டது இந்த ஐவர் மகளிர் குழு.
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் இதயமாக இந்த யூனிகேர்ல்ஸ் துடிக்க ஆரம்பித்திருக்கிறது.
கட்டுரை :  RJ நாகா

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!