கட்டுரை

சீரிய சிந்தனை

155views
மகா கவியின் கவிதைகள் அனைத்துமே சீரிய சிந்தனைகள் மூலம் வெளிப்பட்டவை. வாழ்நாளில் வறுமை தவிர எதையுமே கண்டறியாதவர். எத்தகைய வறுமையில் உழன்றலும் அவரது கவியுள்ளம் உறங்க வில்லை . சுப்பையா என்கிற அவருக்கு பாரதி என்கிற பெயரை  1893இல் சூட்டினார் எட்டயபுரம் மன்னர். அப்போது அவருக்கு வயது பதினொன்று மட்டுமே. வெள்ளையர்கள் அரசு, கத்தி முனைக்குக் கூட அஞ்சவில்லை. பிரதியின் கூர்மையான பேனா முனைக்கு அஞ்சியது. அவரைக் கைது செய்து சிறையில் அடைப்பதிலேயே குறியாக இருந்தனர். பாண்டிச்சேரி க்குச் சென்று தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். எழுச்சியூட்டும் கவிதைகள். ஒரு நல்ல எழுத்தாளனும் கவிஞனும் சொன்ன வார்த்தை கள், கண்ட  கனவுகள் நிஜமாகும் என்கிற வரிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்.
சுதந்திரம் அடைவதற்கு 27 ஆண்டுகளுக்கு முன்பேயே ‘ஆடுவோமே  பள்ளுப்பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்,’ என்றும் , ‘ ஆயுதம் செய்வோம். நல்ல  காகிதம் செய்வோம்” என்று பாடிய பாரதியின் கனவு , இன்று நனவாகியிருக்கிறது. உலக நாடுகளுக்கு இணையாக அணு ஆயுதங்கள் தயாரிப்பில் முன்னணியில் நிற்கிறோம். மனிதர் களை விட பிராணிகளையும் அதிகம் நேசித்தவர் ஒரு தடவை சிங்கத்தைக் கூட தொட்டுத் தடவிக் கொஞ்சத் தொடங்கி விட்டார். அவர் மனைவி அஞ்சினார். “மிருகராஜ்! நான் பாரதி; கவிராஜ் வந்திருக்கிறேன்; உன் வீரத்தை எனக்குக்  கொடு. ! நாம் இருவரும் நண்பர்கள் . ஊம் .. முழங்கு என்று சிங்கத்தைத் தடவிக் கொடுக்க, “ஆஹா நண்பா” என்பது போல  அது கர்ஜிக்கத் தொடங்கியது.
வீட்டிலே ஒரு மணி அரிசிகூட இருக்கவில்லை! அவர் மனைவி, வீட்டின் உரிமையாளரின் மனைவியிடம் கடனாக வாங்கி வந்த அரிசியை முறத்தில் வைத்துவிட்டு, குளிக்கச் என்றாள். திரும்பிவரும்போது, அத்தனை அரிசியையும் முற்றத்தில் வரியிறைத்துவிட, சின்னஞ்சிறு குருவிகள் அவரை ஆனத்தமாகத்  தின்று கொண்டிருப்பதை உவகை யோடு ரசித்துக்கொண்டிருந்தார். அதைக் கண்ட  அவர் மனைவி செல்லம்மா கண்ணீர் மல்க , நான் கடனாக வாங்கிவந்த அரிசியை  இப்படிச் செய்துவிட்டீர்களே! என்று கேட்க, “ செல்லம்மா! இந்த அரிசியால் நமது இருவரின் வயிறு மட்டுமே நிறைந்திருக்கும். ஆனால் இப்போது பார் ! நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறு குருவிகள் எவ்வளவு ஆனந்தமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன “ என்று சொன்னார். அப்போது எழுதியது தான் குருவிப்பாட்டு . ஒரு தடவை அவர் மைத்துனர் அப்பாதுரை வீட்டிலிருந்து சிற்றுண்டியாக தோசை வந்தது . முகமதியர் தொழுகை நடத்தும் போது உட்காருவது போல மண்டியிட்டு  உட்கார்ந்து சாப்பிடத்துவங்கும்போது காக்கையும் குருவிகளும் வந்தன. தோசைகள சாப்பிடும்போது குருவிகளும் காக்கைகளும் வந்து இலையில் இருந்த தோசையைக் கொத்தின. உடனே அவற்றைப் பிய்த்து அவற்றிற்குப் போட்டார். அவருக்கு இறுதியில் மிஞ்சியது  ஆறில் இரண்டு மட்டுமே. அப்போது எழுதியது “காக்கைக் குருவி எங்கள் ஜாதி”  என்கிற பாடல்.

நாள் தவறாமல் பார்த்தசாரதி கோவிலுக்குச் செல்வார். அங்கு இவருக்கு ஒரு யானை நண்பன் உண்டு. தினமும் அதற்குத் தேங்காய் மூடி, பழம் கொடுப்பதுண்டு. அன்புடன் அதன் நட்புடன் அதன் துதிக்கை யை வருடிக் களிப்பது வழக்கம். சுற்றி நின்ற மக்களின் ஆரவாரக் குரல் கேட்ட யானை , மிரண்டுபோய், அவரை வாரிக் கீழே எறிந்துவிட்டது. அப்போது குவளைக் கண்ணன் பாய்ந்துவந்து அவரைக் காப்பாற்றினார். ஸ்ரீநிவாஸாசாரியார் உடனடியாக ராயப்பேட்டை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றார். அப்போதும்கூட, பாரதி, யானை நண்பனைச் சினக்காது “நம்மிடம் உள்ள அன்பால் நசுக்காமல் சும்மா நின்றது!” என்றவர் உடல் நிலை தேறவேயில்லை.11.09.1921 இல் இவ்வுலகை விட்டு நீங்கி னார். அன்று வெகு சிலரே அவரது உடலின் பின்னே சென்றனர். அவர் உடலுடன் மயானத்திற்கு சென்றவர்கள்  ஆறேழு பேர்களே. உடல் பிரிந்த பிறகே புகழ் உடல் பெற்று வாழ்கிறார். சாகாவுடலான கவிதைகளே பாரதி! இறுதிநாட்களில் அழியாத்தன்மை வேண்டினார். அவரது பட்டு,சரிகை ஆடைகளையெல்லாம் ஏழைகளுக்கு வாரி வழங்கிவிட்டு கதர் ஆடையே அணிந்தார்.இறந்தபோது , உடலுடன் இடுகாடு சென்றவர்களை விட அவர் உடலில் மொய்த்த ஈக்களே அதிகம். மனிதர்களைவிட ஈக்களுக்கே  அவர்மீது பாசம் அதிகம்போலத் தெரிகிறது.
பாண்டிச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தியபோதும் நீங்கா நல்குரவாகத் தொடர்ந்தது வறுமை.. வறுமையைக்கண்டு அஞ்ச வில்லை சன்மானமாகக் கிடைத்த பணத்தையும் புத்தகங்கள் வாங்குவதிலும் வறியவர்களுக்கு வழங்குவதிலும் செலவிட்டார். கழுத்துக்கு மேலே கம்பீரம் . ஆனால்  உடல் மட்டும் வறுமையைக் காட்டும். அவர் ஒருதடவை சொல்கிறார்.” பராசக்தி, இந்த உலகின் ஆத்மா நீ! உனக்கு அறிவில்லை யா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக்கூடாதா? முதலாவது எனக்கு வெற்றி வேண்டும். குழந்தைக்கு காய்ச்சல் வந்துவிட்டது; நின் திருவருளால் குணமாகிவிட்டது.இரண்டு மாதகாலம் நானும் செல்லம்மா வும் புழுபோலத் துடித்தோம். ஊண் உறக்கமில்லை, புழுப் போலத் துடித் தோம். இருவருக்கும் எப்போதும் கவலை,பயம்,பயம்,பயம் தான். வைத்தி யனுக்குக் கொடுக்கப் பணமில்லை. கடன்காரர்கள் தொல்லையும் அத்துடன் சேர்ந்தது.
பராசக்தி! கவலைகள்,குழப்பங்களை மறக்க ஓயாமல் கவிதை எழுதிக்கொண்டிருக்கும்படி செய்ய மாட்டாயா? தாயே! கடன்காரர்கள் என்னை ஓயாமல் தொல்லைப் படுத்திக்கொண்டிந்தால், , நான் அரிசிக்கும்,உப்புக்கும் யோசனை செய்துகொண்டிருந்தால் உன்னை எப்படிப்பாடுவேன்?  எனது குடும்ப பாரமெல்லாம் உன்னைத் சேர்ந்தது. தாயே உனக்குச் சம்மதம் தானா?  எத்தனை நாட்களுக்கு செட்டி பணத்திற்கு பொய் சொல்வது? பொய்-வாய்தா- தினமும் இந்தக் கொடுமைதானா ? உன்னை நம்புவதைவிட்டு நாத்திகனாகி விடுவேன். சரி ,சரி உன்னைத் திட்ட மாட்டேன் என்னைக் காப்பற்று உன்னைப் போற்றுகிறேன்” என்று மேற்கோள் காட்டுகிறார் கவியோகி சுத்தானந்த பாரதி.. தனது  வறுமையைப் பொறுத்துக்கொண்டு , வறுமையை உரம்போட்டு கவிதைப் பயிரை வளர்த்தார். அவரை வருத்திய வறுமை தமிழருக்காக ச் செய்யப்பட்ட கடுந்தவமாகும் அந்தத் தவத்தில் எழுந்த கவிதைகள் இன்று தமிழர்களின் மனதை ஆளுகின்றன. .
  எனது மனத்தைக் கவர்ந்த சிறந்த கவிதை: வேடிக்கை மனிதர்கள்.
தேடிச்சோறு நிதந்தின்று – பல 
சின்னஞ் சிறுகதைகள்பேசி – மனம் 
வாடித் துன்பம் மிக உழன்று – பிறர் 
வாடப் பல செயல்கள் செய்து – நரை 
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங் 
கூற்றுக் கிரையெனப்பின்  மாயும் – பல 
வேடிக்கை மனிதர்களைப் போலே – நான் 
வீழ்வே னென்று நினைத்தாயோ!   
எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு நிலையிலும் அவர் மனம் தளர்ந்த தில்லை. மனம் தளர்வடையும்போது இந்தக் கவிதை ஒரு ஊக்க மருந்து போலச் செயல்படுகிறது. அன்று பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து இன்றும் கூட சில சிறுமைகளைக் கண்டு மனம் வாடியபோதெல்லாம்   இந்தப் பாடல் மனத்துக்கு இதமளித்தது- வீழ்வது மீண்டும் எழுவதற்கே! என்று ஒரு உத்வேகத்தைக் கொடுப்பது இந்தக்கவிதை. இது அவருக்கு மட்டுமில்லை இதைப்படிக்கும் ஒவ்வொருவருக்கும் இது  ஒரு கிரியா ஊக்கி.   பாரதி இன்றும் நமது உள்ளங்களில் கவிதைகளில் வாழ்கிறார்.

ஜெயா வெங்கட்ராமன்
பெங்களூரு 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!