கட்டுரை

ஏதுமில்லாரா தமிழரென்பார்? இதனை சொல்லவா திராவிடம் என்பார்? சொல்லுவாயே.. தமிழா! உன் வாய்ப்பெல்லாம் பிறர் பெறவா?

205views
தமிழர் எதைத் தொட்டாலும் அது உனதில்லை. இது உனதில்லை. மாதங்கள் உனதில்லை. ஆண்டுகள், காலங்கள், கணிப்புகள் உனதில்லை தெய்வங்கள் உனதில்லை. வழிபாடுகள் உனதில்லை என பிடுங்கிப்போடும் திராவிடம் மட்டும் என்ன தமிழருடையதா? அவர்கொண்டாடும் ஆங்கில ஆண்டும் மாதங்களும் கிழமைகளும் மட்டும் என்ன தமிழருடையதா? அவர்கள் நடத்தும் ஆங்கிலக் கல்வியும் மொழியும் மட்டும் என்ன தமிழருடையதா? என கேள்விகள் நீள.. திராவிட மாயங்கள் தமிழரில் இருந்து வளம் செழித்துக் கொண்டே.. எதுவும் உனதில்லை. என சொல்லிக்கொண்டே பிற இனம் மொழிகளில் தமிழரை மூழ்கடித்து தனதென இல்லாமல் ஆக்கி கெடுக்கின்றனர். இவர்கள், ஏதோ உலகம் தோன்றுமுன்னே.. கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி! என்பது போல.. திராவிடர் பேசுகின்றனர் ஆரிய குளியலில் குளித்துக் கொண்டே..
தமிழருக்கு அறிவும் கிடையாது. அவருக்கு அளவும் தெரியாது என்பது போல பேசியே தமிழரை ஏய்த்துப் பிழைத்தவர்கள் யாரென கேட்டால்.. அது இங்கே வந்து தமிழரிடையே ஒடுங்கி கைகட்டி வாய் பொத்தி நின்று வயிறு வளர்த்தவர்களை தன்கரம் நீட்டி வரவேற்று உணவும் நிலமும் எனதந்து ஆதரித்த தமிழரையே இன்றைக்கு ஆட்டிப் படைக்க துணிந்த திராவிடரே.
தமிழ்நாட்டில்தான் எங்கும் இல்லாத அன்பும் அறமும் எல்லோரையும் அரவணைக்கும் குணமும் இங்கே தோன்றியதாலே.. அதனாலேயே தமிழர் தலைமேல் சிலர் ஏறி நிற்க முடிந்தது. அதுவே தொழிலாக தொடராகி தமிழரின் தொழிலெல்வாம் அவர்களுடையதாகி தமிழர் ஏதுமற்றவர்கள் போல் கீழே நிற்க.. இங்கே வந்தவர்களின் பேயாட்டத்தால் எதுவும் நமதின்றி நடந்து கொண்டே இருக்கின்றது.
ஒன்றை நாம் தெறிந்து கொள்ள வேண்டும்.  1967 க்கு முன்னால்.. நமக்கு ஆங்கிலம் என்ற மொழி பலருக்கும் தெரியாது. ஆங்கிலம் படித்தால்தான் அறிவு என்ற நிலைமை கிடையாது. தமிழே நமக்கு எல்லாம் ஆகி நின்றது. எல்லா பாடமும் தமிழில் இருந்தது. தமிழில் நம் வரலாறுகளை, அறிவியலை, கணக்கியலை படித்தறிய முடிந்தது.
தமிழறிஞர்கள் என்ற பெரும் தொடர் நெடிதாய் வந்து கொண்டிருந்தது. திரைப்படங்கள் கூட தமிழை போற்றிப் புகழ்ந்து பாடி மகிழ்ந்து உணர்வூட்டியது.   தமிழ்நாடு! தமிழர்! தமிழ்மொழி என்ற உணர்வுகள் தமிழ் மொழியாலும் மக்களினத்தாலும் மதிப்புற்றிருந்தது.
யாருக்கும் தமிழர் கீழில்லை என்ற உணர்வுகள் மேலோங்கி நிற்க! ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த பரம்பரையினர் நாமென நின்ற வரலாறுகள் பேசின. இங்கு அரசியல் பேசி எழுந்தவர்கள் எல்லாம் தமிழ்மொழி உணர்வு மிக்கவர்களாகவும் எழுத்தாளர் பேச்சாளர் எனவும் புகழப்படும் நிலையில் இருந்தனர். எந்த போராட்டமும் தமிழ் மொழியை சார்ந்தும் அவர்தம் நில பரப்புகளை சார்ந்ததாகவும் அமைந்தன.
இந்திய விடுதலைக்கு முன்னின்ற தமிழகம் பண்பாட்டு வளங்களை படைத்து, வடமாநிலத்து தலைவர்களும் துறவிகளும் கூட தமிழரின் ஈகத்தை ஈகையை, வீரத்தை மெச்சி நன்றியுடன் பேசினர். நாங்கள் மீண்டும் பிறக்க நேர்ந்தால்.. அது தமிழ்நிலத்தில் தமிழராக பிறக்க வேண்டும் எனவும் தமிழராய் பிறக்க வேண்டும் எனவும் பேசி மகிழ்ந்தனர். மேலை கீழை நாடுகள் எல்லாம் தமிழர் வாழும் கதைகளை பேசிக் கிடந்தன. உலகமே தமிழர் வாழும் பல நாடுகளாயின.
ஏரும் உழவும் பேசவும்.. பொன்னும் பொருள் படைப்பும் என எதுவும் தமிழருடையதாய் இருந்தன. பாடும் பாட்டும் பண்ணும் இசையும் என தமிழாய் முழங்கின. ஏடும் எழுத்தும் கருத்தும் தமிழாய் வழங்கின.   காடுகள் சோலைகள் மாடுகள் மண்ணுயிர்கள் எங்கும் வாழ தமிழ்நாடு ஆறுகள் பாய அலைகள் வீச காற்றும் மழையும் கலந்து திரிந்தன.
ஆனால்.. அந்த அறுபத்தியேழிற்கு பின்னால்.. அவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி மாறி.. இன்று தமிழ் நிலமே மாறிப்போய் தமிழ் நிலமா? இதுவென மனமே கேள்வியில் நனைகின்றது..
அப்போ.. தெரியாததல்லாம் இப்போ தெரிகிறது?!.. ஆட்சியை தமிழர் திராவிடத்திற்கு இழந்தது தெரிகிறது. தமிழர் யாரும் அதன் பின் அரசியலில் தலையெடுக்க வில்லை என்பது தெரிகிறது. திரைப்படத்தை நம்பி பார்த்து புலகாங்கிதம் அடைந்த தமிழர்கள் வந்தவரெல்லாம் தமிழராகவே மதித்து திராவிடத்திற்கு மெய் மறந்து பொய்யாய் புகழ்ந்து போயினர். அதனால் நம்மொழி இன் உணர்வுகளில் பெருங்கீரல் விழ, நம் தாய்மொழியை தமிழரே இகழந்து நிற்கின்ற நிலைமை.
பள்ளிகளை விட்டே தாய்த்தமிழை கொஞ்சம் கொஞ்சமாக கீழிறக்கி துரத்தி அனுப்பிவிட்டு எங்கும் தமிழாய் இருக்க வேண்டிய நாட்டில்.. இப்பொழுது ஆங்கிலமே எல்லாம்.  தமிழ்தான் ஆட்சிமொழி என 1956ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆட்சி மொழி சட்டம் சொல்ல.. 67ல் ஆட்சிக்கு வந்த திராவிடகட்சி இருமொழி திட்டம் என கொண்டுவந்து.. அதிலும் முதல்மொழி தமிழ் என்றில்லாமல் தாய்மொழியென செய்து இரண்டாம் மொழியென ஆதிக்க ஆங்கிலத்தை வைத்து தமிழை புறந்தள்ள.. தமிழரைப் போலவே தமிழும் தன் இடத்தை கேள்விக்குள்ளாகி பின் தள்ளிப் போனது.
தமிழ்மொழிக்கும் தமிழருக்கும் கிடைத்த விடுதலையும் மாநில பிரிவினையால் அமைந்த மாநில அதிகாரமும் ஆட்சியும் இங்கு வந்தவர்களின் கைகளில் எல்லோருக்கும் உபசரிப்பு என்ற பங்கு வைப்பில் ஏதும் கிடைக்காமல் ஒதுக்குப் புறத்தில் இன்றுநாம்.
வடக்கத்திய மாநிலங்கள் தமிழரை கண்டு பாராட்டியது வெல்லாம் இன்று பிசுபிசுத்துப் போயின. தமிழரின் பண்பாடுகளும் கலைகளும் அதன் சிறப்புகளும் கேட்பாரற்று அழிக்கப்பட நம் விழாக்களுக்கான அனுமதியையும் கூட திராவிடம் தர மறுக்கின்றது.
நமது வாழ்வுரிமை என்பது திராவிடத்தால் மூடப்பழக்கம் என பழித்து.. அதன்வழியாக வரும் வருவாய் மட்டும் இனிக்க பிடுங்கப்பட்டு விட்டது. நமக்கென திருவிழாக்கள் இல்லை. நமக்கென தனித்த அடையாளங்கள் இல்லை. நம்மொழி படிக்க பள்ளிக்கூடங்கள் இல்லை. நமதென சொல்லிக் கொள்ள வணிகம், தொழில்கள் இல்லை. எல்லாம் வந்தவர்களிடம் அல்லது வெளிநாட்டிடம்.
பல்கலைக் கழகங்களில் எதிலும் ஒரு மொழி ஆய்வு இருக்கைகள் கிடையாது. தமிழ்மொழியில் நடக்கும் அரங்குகள் கிடையாது. தமிழில் வழக்காடும் நீதி மன்றங்கள் கிடையாது. அரசின் கைகளில் இருக்கும் பொது அரங்குகளில் தமிழ் அமைப்புகள் நிகழ்ச்சிகள் நடத்த முடியவில்லை. அளவு மீறிய கட்டணத்தில். வள்ளுவர் கோட்டங்கள் கூட வடநஆட்டவரஇன் விற்பனை அகமாகி பொருள்மாறி நிற்கிறது.
தமிழக அரசு வைத்திருந்த அரசவை கவிஞர் என்ற பொறுப்பிற்கு எந்த ஒருவரும் நியமனம் இல்லை.  உலகத் தமிழரை இணைக்கவும் தமிழ்மொழியின் வாழ்வையும் வளர்ச்சியையும் முன்னெடுக்க தோன்றிய உலகத் தமிழ் மாநாடும் நடத்துவாரில்லை. எல்லாம் மறந்து தமிழக அரசியலின் ஆர்ப்பாட்டம் தான் ஓயமல் ஒலிக்கிறது
இதனால் வெற்றுத் தனங்கள் மேலெழ.. தமிழர் வீரம், அறம், மறம் தூய்மை செழுமை வளமை ஒற்றுமை உயர்வு என்ற நலங்களெல்லாம் ஊழலுக்கும் இலவயங்களுக்கும் கூலிக்கு வேலை செய்கின்றன. தமிழர் மரபும் தமிழரென்ற செழுமையும் கேள்விக்குறியாக இங்கே பலரும் தங்களின் ஆண்டு பிறப்பை கொண்டாட.. தமிழரின் ஆண்டு கணக்கும் நாட்களும் மாதங்களும் நமது தானா? என் கேள்வி எழுப்பி பாமர தமிழர்களாக சிலர் மனம் போக கேள்வி கேட்பதும் தான் இன்றைய மாதிரியாக வருவதை தடுத்து தலை தனதென போற்றி தலைநிமிர வேண்டும். அதற்கே சித்திரை தமிழ்ப்புத்தாண்டு நம் முன் வந்து நின்று இளவேனில் காலமாக இளந்தளிராக்க நம்மை தொட்டு சுகம் காட்டுகிறது எம்மரும் தமிழர் நமக்கு!
இவற்றையெல்லாம் சிந்திக்குமா திரவிடம்?. அதன் உடனிருந்து பயணித்தால் விடுபடுமா நம் தமிழரினம்? எலும்பும் தோலுமாக நம்தமிழ் ஆகுமுன் அவற்றை தடுத்து மீட்டு மீள் உருவாக்கம் செய்ய தமிழர் நாம் கைகோர்ப்போம். இவ்வளவு தீமைகள் நம்மை சூழ்ந்த பின்னும் கூட காக்க எண்ணாத மூடத்தனத்தை முடக்கு வாதத்தை முறியடிக்க முன்நிற்போம்!
பாவலர் மு இராமச்சந்திரன்,
தலைவர். தமிழ்த் தன்னுரிமை இயக்கம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!