தமிழகம்

‘சட்டத்தமிழ் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் முனைவர் வி.ஆர்.எஸ். சம்பத்!’ மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினர் நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் பேச்சு!!

187views
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் “தமிழர் தந்தை ஆதித்தனார் விருது” பெற்ற சட்டக்கதிர் மாத இதழின் ஆசிரியர் முனைவர் வி.ஆர். சம்பத் அவர்களுக்கு சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள திருவள்ளுவர் அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். ராமன் தலைமை தாங்கினார். முனைவர் சமீம் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் முனைவர் எஸ். ராஜராஜன் தொடக்க உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதி அரசர் ஏ.ஏ. நக்கீரன் மற்றும் சென்னை நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதி அரசர் திருமதி. விமலா, தொழிலதிபர் பழனி ஜி. பெரியசாமி, மேனாள் மாவட்ட நீதிபதியும், மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் முழு நேர உறுப்பினருமான அ. முகமது ஜியாவுதீன் ஆகியோரும் வாழ்த்தி பேசினர். முடிவில் முன்னாள் மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் இளங்கோவன் நன்றி உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அ. முகமது ஜியாவுதீன் பேசும்போது, சட்டத் தமிழ் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் வி.ஆர்.எஸ். சம்பத் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நாள் தமிழ் வழக்காடு மொழியாக வரும். அதற்காக முன் வரிசை போராளியாக உழைத்த டாக்டர் வி.ஆர். சம்பத் அவர்களின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும் என்றும் கூறினார். மேலும் அவர் பேசியதாவது:- 30 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டும்; சட்ட கருத்துரைகள் மற்றும் சட்டக் கலைச் சொற்களைத் தமிழில் மொழிபெயர்த்து ஒவ்வொரு மாதமும் ‘சட்டக்கதிர்’ என்ற மாத இதழை முனைவர் வி.ஆர்.எஸ்.சம்பத் அவர்கள் வெளியிட்டு வருகிறார். இந்த புத்தகம் நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் மட்டுமின்றி, பொது மக்களுக்கும், சட்ட மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் “தமிழர் தந்தை ஆதித்தனார் விருது” வழங்கப்பட்டுள்ளது.
அதற்காக இன்றைக்கு மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் இந்த பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. இங்கே கல்லூரியின் முதல்வர் பேசுகிறபோது சுப்பிரமணியம் சந்திரசேகர் மற்றும் பாரத ரத்னா விருது பெற்ற சர்.சி.வி. ராமன் ஆகிய இரண்டு நோபல் பரிசு பெற்றவர்கள் மாநிலக் கல்லூரியில் படித்தவர்கள் என்பதை பதிவு செய்தார். அவர்கள் மட்டுமல்ல. தனது சொத்துக்களை கல்வி வளர்ச்சிக்காக வழங்கிய கொடை வள்ளல் அழகப்ப செட்டியார், சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தவர் தான். நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான டி.எம். நாயர், இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன், தலைமை நீதி அரசர்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பதவி வகித்த முத்துசாமி அய்யர், மு.மு. இஸ்மாயில், பி.வி. ராஜமன்னார் ஆகியோரும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் சார்பில் அற்புதமான பங்களிப்பை வழங்கி வருகிற வைகோ, பா. சிதம்பரம், தொல் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் ஓலைச்சுவடுகளில் இருந்த தமிழை தேடிப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாத ஐயர், தமிழ்நாட்டின் தொழிற்சங்க இயக்கத்தை தொடங்கி வைத்த மாபெரும் சிந்தனையாளரான சிங்காரவேலர், கல்வியாளர் நெ.து. சுந்தரவடிவேலு, இந்த மேடையிலே அமர்ந்திருக்கிற தொழிலதிபர் முனைவர் பழனி ஜி. பெரியசாமி, ஹிந்து என். ராம் உள்ளிட்ட எத்தனையோ மாபெரும் ஆளுமைகள் சென்னை மாநிலக் கல்லூரியில் இருந்து உருவாகி இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இந்தியாவின் முதல்வர்களில் முதல்வராக சிறப்பாக தமிழ்நாட்டை வழிநடத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை மாநிலக் கல்லூரியின் மாணவர் என்பது பெருமைக்குரியதாகும்.
அத்தகைய சிறப்புக்குரிய முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில் வி.ஆர்.எஸ். சம்பத் அவர்களுக்கு இந்த பாராட்டு விழா நடைபெறுகிறது. வி.ஆர்.எஸ். சம்பத் வழக்கறிஞர், இதழ் நடத்துபவர் என்பதையும் தாண்டி தமிழுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அவர் மாணவராக இருந்த போது தான் மாணவர் பேரவை தொடங்குவதற்காக உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை தாக்கல் செய்து மாணவர் பேரவை தொடங்க காரணமாக இருந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர்கள் பி.எச்.டி ஆராய்ச்சி படிப்பு படிப்பதற்கு அனுமதி வழங்காத நிலை இருந்தது. மாண்புமிகு நீதியரசர் ஏ.எஸ். ஆனந்த் அவர்கள் தலைமை நீதி அரசராக இருந்தபோது வழக்கறிஞர் என்பது தொழில் அல்ல, அது பணி என்கிற வாதத்தை முன்வைத்து வழக்கறிஞர் தொழில் செய்து கொண்டே பி.எச்.டி என்கிற ஆராய்ச்சி படிப்பை படிக்கலாம் என்பதற்காக நீதிப்பேராணை மனு தாக்கல் செய்து அந்த நல் வாய்ப்பை பெற்று தந்தவர் வி. ஆர். எஸ்.சம்பத் என்பதை நாம் அறிவோம்.
அதுமட்டுமல்ல, சென்னை வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பை 1981 இல் தொடங்கி இன்று வரை சென்னை, புதுவை, துபாய், தென் ஆப்பிரிக்கா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதினோரு உலகத்தமிழர் பொருளாதார மாநாடுகளையும், இரண்டு உலகத் தமிழர் வளர்ச்சி மாநாடுகளையும் நடத்தியிருக்கிறார். தனக்கு தெரிந்த நபர்களை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி புதியபுதிய இளைஞர்கள் வளர்வதற்கு வழி காட்டுபவராக வாழ்ந்து வருகிறார். மனித உரிமை, சட்டம், கல்வி, சமூகம், பொருளாதாரம் ஆகிய அனைத்து துறைகளிலும் தமிழர்கள் முன்னேற வேண்டும் என்ற இலட்சியத்தோடு தொடர்ந்து உழைத்து வருகிற வி.ஆர்.எஸ். சம்பத் அவர்கள் 100 ஆண்டு காலம் வாழ வேண்டும் என்று நம் அனைவரின் சார்பிலும் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதி அரசர் எஸ். பாஸ்கரன், முன்னாள் மாவட்ட நீதிபதி பரஞ்சோதி, முன்னாள் வெளிநாட்டு தூதர் மகாலிங்கம், பேராசிரியர் முத்துவேல், பேராசிரியர் கதிர்வேல், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வீரசேகரன், மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினர் பேராசிரியர் முரளி அரூபன் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேசும்போது தந்தை பெரியார் என்றும் தமிழ்நாட்டுக்கு தேவையாக இருக்கிறார் என்று குறிப்பிட்டு தந்தை பெரியார் 96 ஆண்டுகள் வாழ்ந்தார். வி.ஆர்.எஸ். சம்பத் அவர்கள் அதையும் கடந்து 100 ஆண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்தி “என்றும் தமிழர் தலைவர் பெரியார்” என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!