சினிமாவிமர்சனம்

தெக்கத்தி மண்ணின் இன்னொரு பெண்சிறுத்தை

620views
உலகம்மை – திரை விமர்சனம்:
மெட்ராஸ் டிஜிட்டல் சினிமாஸ் தயாரித்து இருக்கும் திரைப்படம் “உலகம்மை”
சு.சமுத்திரம் எழுதிய ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ என்ற குறுநாவல் 2 மணிநேரம் ஓடும் திரைப்படமாக உருவாக்கி இருப்பதற்கே இந்த குழுவை நாம் பாராட்டலாம்.
இது ஒரு பீரியாடிக் மூவி. 1970களில் திருநெல்வேலியில் நடப்பதாக கதை ஆரம்பமாகிறது. பனையேறும் வேலைச் செய்யும் மாயாண்டியின் ஒரே மகள் உலகம்மை. மாயாண்டி பனையேறும் போது கீழே விழுந்து கால் உடைந்த நிலையில் வீட்டிலேயே இருக்கிறார். இதனால் குடும்ப பொறுப்பு உலகம்மை மீது விழுகிறது.
இந்த நிலையில் தன் தாய்மாமன் மாரிமுத்துவின் மகள் சரோஜாவை பெண்பார்க்க மாப்பிள்ளை வருகிறார். உடன் துணைக்கு செல்லும் உலகம்மையை சரோஜா என்று நினைத்து திருமணம் செய்ய ஆசைப்படுகிறார்.  இங்கிருந்து தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. மாப்பிள்ளைக்கு உண்மை நிலையை உலகம்மை விளக்கினாலும் அந்த மாப்பிள்ளை பிடிவாதாக இருக்க பிரச்சனையின் வீரியம் அதிகமாகிறது.
தான் குடியிருக்கும் வீட்டை காலி செய்ய பழவேசம் வக்கீல் நோட்டிஸ் விடுகிறார். வீட்டின் சொந்தகாரர் பழவேசம் ஒருவகையில் தனக்கு சித்தப்பா முறையென்றாலும் தன் குடிகார மகன் தங்கப்பழத்திற்கு சரோஜாவை கட்டி வைத்து மாரிமுத்துவை சம்பந்தியாக்கி கொண்டதால் மாரிமுத்துவும், பழவேசமும் தொடர்ச்சியாக உலகம்மைக்கு பிரச்சனைகளை தர ஆரம்பிக்கின்றனர். வாங்கிய கடனை வட்டியும் முதலுமாக கொடுக்க சொல்லி மாயாண்டியை கோட்டுக்குள் அமர வைத்து ஊர் பெரியவர்கள் கொடூரமாக நடந்துகொள்ள காவலர்கள் உதவியுடன் தன் தந்தையை மீட்டெடுக்கிறாள் உலகம்மை.
ஊர் பெரியவர்களை அந்த நேரத்தில் ‘நீங்களெல்லாம் ஆம்பளைங்க இல்ல பொம்பளைங்கடா’ என பேசி விட்டதால் அந்த அவமானம் அவர்களை உசுப்பேற்ற தொடர்ந்து பல வழிகளில் உலகம்மை தாக்கப்படுகிறாள். இரவில் வீட்டில் கல்லெறிவது, பாதையை மறித்து வேலிப்போடுவது என பல அடக்கு முறைகளால் தாக்கப்படும் உலகம்மை இதில் இருந்து மீண்டு வந்தாளா? அந்த ஊர் அவளை வாழ விட்டதா… இப்படி பல கேள்விகளுக்கு விடைதான் இந்த படம்.

மாரிமுத்துவாக மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்திருக்கிறார். முட்டி வரை இறக்கிய கதர்ச்சட்டை, வேட்டியில் அந்த கதாப்பாத்திரமாகவே மாறியிருக்கிறார் மனிதர். திருநெல்வேலி பாஷை பேசியிருக்கும் அந்த பாடிலாங்குவேஜும் வசன உச்சரிப்பும் பிரமாதம்.

 

பழவேசமாக ஜி எம் சுந்தர் அலட்டல் இல்லாத அட்டகாசமான நடிப்பை தந்திருக்கிறார். நல்ல பாத்திர தேர்வு. அதை உள்வாங்கி நடித்திருப்பதை பாராட்டிதான் ஆக வேண்டும்.

வெளியூர் மாப்பிளளையாக வரும் வெற்றிமித்திரன் கவனிக்கக்கூடிய கேரக்டர், பீடி ராமசாமி யாக வரும் அருள் மணி, மாரிமுத்துவின் அண்ணன் மகனாக வரும் காந்தராஜ், போலீஸ்காரராக வரும் ஆரி, மாரிமுத்து மகள் சரோஜாவாக வரும் அனிதா என எல்லோரும் தங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம். அருணாச்சலமாக பிரணவ் வருகிறார். கருப்புச்சட்டை இளைஞனாக கம்யூனிசம் பேசியப்படி வரும் அவரின் நடிப்பும் கவனிக்கக்கூடியதாக இருக்கிறது.

மாயாண்டியாக வரும் வி.ஜெயபிரகாஷ் மிகை நடிப்பில் இருந்து விலகி இயல்பாய் வந்திருப்பதால் அவரின் இறுதி காட்சிகளில் நம் கண்கள் கலங்குவதை மறுப்பதற்கில்லை.
உலகம்மை – இந்த பாத்திரத்தில் கௌரி கிஷனை தேர்வு செய்ததுதான் படத்தின் வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

கதாநாயகியை முன்னிலை படுத்தும் கதையம்சம் கொண்ட படங்கள் தமிழில் அபூர்வம். அப்படி அத்தி ப்பூத்தாற்போல் கிடைத்திருக்கும் வாய்ப்பை மிக கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் கௌரி. அவரது கேரியரில் இந்தப் படம் ஒரு மைல் ஸ்டோன்.
கேவி மணியின் ஒளிப்பதிவு அழகு. இயற்கை வெளிச்சத்தை மட்டுமே பிரதானப்படுத்தி இன்னொரு பாலுமகேந்திராவை ஞாபகப்படுத்தி இருப்பது வரவேற்க கூடியது.
சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு கொஞ்சம் தொய்வுதான். காட்சிகளை அப்பட்டமாக வெட்டி இருப்பதும் ஒரு சில கதாபத்திரங்களின் அடையாளப்படுத்தல் முழுமை இல்லாமல் இருப்பதை பல இடங்களில் கவனிக்க முடிகிறது.
கலை : வீர சிங்கம். ஒரு சில காட்சிகளில் மெனக் கெட்டிருப்பது தெரிகிறது.

எம்மனசு எனக்கே தெரியலையே …பாடல் ரசிக்கும் படி இருக்கிறது.  இசைஞானியின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.
வசனம் எழுதி இருக்கும் குபேந்திரன் தரமாக எழுதிஇருக்கிறார்.
நான் ஒன்னும் செடி கிடையாது பன மரம். கிள்ளி எரிஞ்சு தூக்கிப்போட – என்று உலகம்மை பேசுவதாகட்டும், கருப்பு சட்டை போட்டவன் எல்லாம் பெரியார் இல்லாதான். ஆனா கதர்சட்டை போட்டவன் எல்லாம் காமராஜர் இல்லதெரியுமா…னு அருணாச்சலம் பேசும் வசனம் தியேட்டர் விசிலால் நிறையும்.
நாவலை திரைப்படமாக கொண்டுவருவதில் நிறைய சவால்கள் இருக்கும். அதையெல்லாம் சமாளிக்க முடியாமல் தான் பல இயக்குனர்கள் இந்த முயற்சியை மேற்கொள்வதில்லை. அப்படி ஒரு சவாலை கையில் எடுத்துக்கொண்டு உழைத்திருக்கிறார் இயக்குனர் வி.ஜெயப்பிரகாஷ்.

முதல் பாதியில் காட்டி இருக்கும் வேகம் இரண்டாம் பாதியில் காணாமல் போய் இருக்கிறது.
நிறைய காட்சிகள் அழுத்தமில்லாமல் இருப்பது ஒரு குறை. திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம். இதெல்லாம் படத்தின் தரத்தை உயர்த்தி இருக்கும்.
நாவலை சிதையாமல் எடுத்திருக்கும் முயற்சிக்கு நமது பாராட்டுக்கள்.
உலகம்மை – உலகம் ஆள வாய்ப்பிருக்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!