724
உலகம்மை – திரை விமர்சனம்:
மெட்ராஸ் டிஜிட்டல் சினிமாஸ் தயாரித்து இருக்கும் திரைப்படம் “உலகம்மை”
சு.சமுத்திரம் எழுதிய ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ என்ற குறுநாவல் 2 மணிநேரம் ஓடும் திரைப்படமாக உருவாக்கி இருப்பதற்கே இந்த குழுவை நாம் பாராட்டலாம்.
இது ஒரு பீரியாடிக் மூவி. 1970களில் திருநெல்வேலியில் நடப்பதாக கதை ஆரம்பமாகிறது. பனையேறும் வேலைச் செய்யும் மாயாண்டியின் ஒரே மகள் உலகம்மை. மாயாண்டி பனையேறும் போது கீழே விழுந்து கால் உடைந்த நிலையில் வீட்டிலேயே இருக்கிறார். இதனால் குடும்ப பொறுப்பு உலகம்மை மீது விழுகிறது.
இந்த நிலையில் தன் தாய்மாமன் மாரிமுத்துவின் மகள் சரோஜாவை பெண்பார்க்க மாப்பிள்ளை வருகிறார். உடன் துணைக்கு செல்லும் உலகம்மையை சரோஜா என்று நினைத்து திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். இங்கிருந்து தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. மாப்பிள்ளைக்கு உண்மை நிலையை உலகம்மை விளக்கினாலும் அந்த மாப்பிள்ளை பிடிவாதாக இருக்க பிரச்சனையின் வீரியம் அதிகமாகிறது.
தான் குடியிருக்கும் வீட்டை காலி செய்ய பழவேசம் வக்கீல் நோட்டிஸ் விடுகிறார். வீட்டின் சொந்தகாரர் பழவேசம் ஒருவகையில் தனக்கு சித்தப்பா முறையென்றாலும் தன் குடிகார மகன் தங்கப்பழத்திற்கு சரோஜாவை கட்டி வைத்து மாரிமுத்துவை சம்பந்தியாக்கி கொண்டதால் மாரிமுத்துவும், பழவேசமும் தொடர்ச்சியாக உலகம்மைக்கு பிரச்சனைகளை தர ஆரம்பிக்கின்றனர். வாங்கிய கடனை வட்டியும் முதலுமாக கொடுக்க சொல்லி மாயாண்டியை கோட்டுக்குள் அமர வைத்து ஊர் பெரியவர்கள் கொடூரமாக நடந்துகொள்ள காவலர்கள் உதவியுடன் தன் தந்தையை மீட்டெடுக்கிறாள் உலகம்மை.
ஊர் பெரியவர்களை அந்த நேரத்தில் ‘நீங்களெல்லாம் ஆம்பளைங்க இல்ல பொம்பளைங்கடா’ என பேசி விட்டதால் அந்த அவமானம் அவர்களை உசுப்பேற்ற தொடர்ந்து பல வழிகளில் உலகம்மை தாக்கப்படுகிறாள். இரவில் வீட்டில் கல்லெறிவது, பாதையை மறித்து வேலிப்போடுவது என பல அடக்கு முறைகளால் தாக்கப்படும் உலகம்மை இதில் இருந்து மீண்டு வந்தாளா? அந்த ஊர் அவளை வாழ விட்டதா… இப்படி பல கேள்விகளுக்கு விடைதான் இந்த படம்.
மாரிமுத்துவாக மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்திருக்கிறார். முட்டி வரை இறக்கிய கதர்ச்சட்டை, வேட்டியில் அந்த கதாப்பாத்திரமாகவே மாறியிருக்கிறார் மனிதர். திருநெல்வேலி பாஷை பேசியிருக்கும் அந்த பாடிலாங்குவேஜும் வசன உச்சரிப்பும் பிரமாதம்.