சினிமா

முகேன் ராவ் நடிக்கும் ‘ஜின் – தி பெட்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

23views
டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் -தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்’ ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை தீபக் கவனிக்க கலை இயக்கத்தை வி. எஸ். தினேஷ்குமார் மேற்கொண்டிருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை டி ஆர் பாலா‍ மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்குகின்றன.
வரும் 30ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘ ஜின் -தி பெட்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் படக்குழுவினருடன் நீதியரசர் எஸ் கே கிருஷ்ணன், ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரி பன்னீர்செல்வம் ஐபிஎஸ், ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, தயாரிப்பாளர் கேயார், ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் சங்க தலைவர் ஆர். வி. உதயகுமார் , செயலாளர் பேரரசு , துணைத் தலைவர் ஆர் . அரவிந்தராஜ், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வருகை தந்த அனைவரையும் தமிழ்நாடு திரைப்பட கல்லூரியின் முதல்வரும் இயக்குநருமான திருமலை வேந்தன் வரவேற்றார்.
ஃபெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி பேசுகையில், ”இப்படத்தின் இயக்குநரின் தந்தையான திருமலை வேந்தன் திரைப்படக் கல்லூரியில் எனக்கு ஜூனியர். அவருடன் எனக்கு 40 ஆண்டுகால நட்பு இருக்கிறது. அவருடைய வரவேற்புரையும் , வாழ்த்துரையும் சுருக்கமாகவும் , சிறப்பாகவும் இருந்தன.
இயக்குநரின் தாயாரான ராஜேஸ்வரி அம்மாவை பார்த்தால் பலருக்கு பயம். உண்மையில் அவர்தான் புரட்சிகரமான போராளி. அவருடன் பழகத்தொடங்கினால் ஒன்று எதிரியாகி விடுவார்கள், இல்லையென்றால் நட்பாகி விடுவார்கள். ஆனால் அவர் ஒருபோதும் யாருக்கும் துரோகியானதில்லை.
இப்படத்தின் பாடல்களையும் முன்னோட்டத்தையும் பார்த்தபோது தமிழ் திரையுலகுக்கு அற்புதமான திறமை மிக்க குழு கிடைத்திருப்பதாகவே நினைக்கிறேன்.
நாங்கள் எல்லாம் நாயகியை தேர்வு செய்யும்போது அந்தப் பெண்ணின் புன்னகையையும், கண்களையும் மட்டும் தான் கவனிப்போம். அந்த வகையில் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் பவ்யாவிடம் அழகான புன்னகை இருக்கிறது. பார்ப்பதற்கு சமந்தா போல் இருக்கிறார்.‌ அவருக்கு தென்னிந்திய திரைப்படத்துறையில் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.
வளர்ந்த நட்சத்திரங்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். இயக்குநரிடமும், எழுத்தாளர்களிடமும் நீங்களே நேரடியாக கதையை கேளுங்கள். நடிகர்களின் மேலாளர்களும், உதவியாளர்களும் கதை கேட்க தொடங்கியதால் தான் சினிமா சீரழிகிறது.
இதனால் திரைத்துறையில் ஆரோக்கியமான நட்பு ஏற்படுவதில்லை.  எப்போது ஒரு நாயகனுக்கும்.. நாயகிக்கும் இயக்குநருக்கும் இடையே ஒரு புரிதலும், நட்பும் இல்லையோ, அப்போதே அந்தப் படம் தோல்வியை தழுவுகிறது. இதை என் படத்தினை ஆய்வு செய்து தெரிந்து கொண்டிருக்கிறேன்.
தயாரிப்பாளர் கேயார் ஒரு ஜீனியஸ். அவர் நினைத்தால் தற்போது திரைத்துறையில் நடைபெற்று வரும் பிரச்சனைக்கு தீர்வை சொல்ல முடியும். அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது.
இன்றைய தேதியில் ஒரு நாளைக்கு திரையரங்குகளில் ஏழு முதல் எட்டு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன.‌ இதன் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு நாளொன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு அறுபது கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இவை அனைத்தும் படத்தின் தயாரிப்பாளர்கள் மூலம் தான் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் இந்த வருமானம் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கிறதா என்றால் இல்லை. படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு மட்டும்தான் நஷ்டம் ஏற்படுகிறது.
என்னுடைய தயாரிப்பாளர் நண்பர் ஒருத்தர் ‘மத கஜ ராஜா’ படம் வெளியாகி ஐந்து மாதங்கள் ஆகிவிட்டான, இன்னும் அதற்கான வசூல் முழுமையாக வந்து சேரவில்லை என குறிப்பிட்டார். இதுதான் தயாரிப்பாளர்களின் இன்றைய நிலை. அதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும். திரையுலகத்தில் தொழிலாளர்கள் தான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிப்பதில்லை. சில தயாரிப்பாளர்கள் மட்டுமே 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் வெற்றிகரமாக செயல்படுகிறார்கள்.
எங்களுடைய பெப்சி பொதுக்குழுவில் தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் தொழிலாளர்களாகிய நாம் நன்றாக இருக்க முடியும் என்று சொல்லி இருக்கிறேன்.‌ தற்போதுள்ள தயாரிப்பாளர்களில் 80 சதவீதத்தினர் தொழிலாளர்களை சிறப்பான மரியாதையுடன் நடத்துகிறார்கள். அதனால் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நாங்களும் பிரார்த்திக்கிறோம்.
தயாரிப்பாளர் கேயார் ஒரு ஃபார்முலாவை வைத்திருக்கிறார். அதனைப் பயன்படுத்தி தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு அவர் தீர்வு காண வேண்டும். நாங்கள் தவறு செய்திருந்தாலும் அதனை அவர் சுட்டிக் காட்டலாம். நாங்கள் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம்.
படத்தின் இயக்குநர் பாலா எதிர்காலத்தில் சிறந்த இயக்குநராக வருவார்.
பெற்றெடுத்த குழந்தையை கையில் ஏந்திக் கொள்ளும் போது கிடைக்கும் உணர்வை போல் இசை இருக்க வேண்டும். அப்படித்தான் கதையும் இருக்க வேண்டும். இப்போதுள்ள ஹீரோக்களுக்கு கதையை சொல்ல வேண்டும் என்றால் மெயிலில் அனுப்புங்கள் என்கிறார்கள். இது குழந்தையை மெயிலில் அனுப்புவது போல் இருக்கிறது. கதையை இயக்குநர் விவரிக்கும் போது தான் எதிரில் இருப்பவர்கள் கதையில் எந்த தருணத்தை ரசிக்கிறார், எதனை ரசிக்கவில்லை என்பதை இயக்குநரால் தெரிந்து கொள்ள முடியும். கதையை மெயிலில் அனுப்ப சொன்னால் அது கடினமானது. முதலில் கதையை ஆங்கிலத்தில் எப்படி மொழியாக்கம் செய்வது என்று யோசிக்க வேண்டும்.
இதுவரை பேய் படம் என்றால் ஒரு பயம் இருந்தது. ஆனால் அந்த பேயை ஒரு செல்லப்பிராணியாக மாற்றி அதனை வளர்க்கலாம் என்று இந்த படம் சொல்கிறது. அதனால் இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்,” என்றார்.
ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசுகையில், ”என்னுடைய பெற்றோர்கள் முதலில் சென்னையில் தான் வணிகம் செய்தார்கள். அதில் நஷ்டம் ஏற்பட்டதும் சொந்த ஊருக்கு திரும்பி விட்டார்கள். நான் முதன் முதலாக 19 வயதில் சென்னைக்கு வந்தபோது, எனக்கு அறையை கொடுத்து, உணவளித்து, தினசரி ஊதியமும் கொடுத்து, அவருடைய இயக்கத்தில் வேலை செய்வதற்கான வாய்ப்பு கொடுத்து ஆதரித்தவர் டி ஆர் பாலா. என் பின்னணி தெரியாமல் என்னிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று கண்டுபிடித்தவர் டி ஆர் பாலா. இவர் திறமையான இயக்குநர். இவர் இதற்கு முன் ‘தேர்ட்டீன்’ என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இவருடைய வாழ்வியலை மையப்படுத்தி ‘சென்னை பிரம்மாக்கள்’ என்ற ஒரு குறும்படத்தை நான் இயக்கினேன். இதன் பிறகு எங்களுடைய நட்பு இன்று வரை தொடர்கிறது. அதன் பிறகு தவிர்க்க முடியாத காரணத்தினால் ஆன்மீகத்தின் பக்கம் என்னுடைய கவனம் திரும்பியது.
படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நண்பர் டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜின் -தி பெட்’ திரைப்படத்திற்கு உங்களது ஆதரவை வழங்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் ஆர். அரவிந்தராஜ் பேசுகையில், ”16 குட்டி சாத்தான்களுக்கு தலைவர் ஒரு பூதம். 16 பூதத்திற்கு தலைவர் ஒரு பேய். 16 பேய்களுக்கு தலைவர் ஒரு ஜின். என நான் வாசித்திருக்கிறேன். இந்த ‘ஜின்’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது, எனக்கு ‘பட்டணத்தில் பூதம்’ திரைப்படம் நினைவுக்கு வந்தது. எனவே இந்தத் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும்.
பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள திரைப்படங்கள் வந்து நாளாகி விட்டது. அதுவும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஒரு திரைப்படம் வருகிறது என்றால் அது வரவேற்கக் கூடியது. இன்றைக்கு குழந்தைகள் பேய் படங்களை பார்த்து பேயை ரசிக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் கேயார் பேசுகையில், ”ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு முக்கியம். ஒரு தலைப்பு வைத்தால் அந்தத் தலைப்பு அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும். தற்போது ஓ டி டியில் அனைத்து மொழியினரும் படத்தை பார்ப்பதால் அவர்களுக்கும் பிடிக்கும் வகையில் படத்தை தலைப்பை வைக்க வேண்டியதிருக்கிறது. இதையெல்லாம் நன்றாக சிந்தித்து, இந்தப் படத்திற்கு இயக்குநர் டி ஆர் பாலா ‘ஜின்’ என்று பெயர் வைத்ததை பாராட்டுகிறேன்.
இப்படத்தின் முன்னோட்டத்தை அண்மையில் பார்த்தேன். பார்த்தவுடன் அதன் தரம் புரிந்தது. ஹீரோ-ஹீரோயின் காம்பினேஷன் சூப்பராக இருந்தது. ஜின் என்பது புது கான்செப்ட். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் ‘ஈ டி’ என்றொரு படம் வந்தது. அதை அடிப்படையாக வைத்து தான் ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ உருவானது. அந்த வகையில் குழந்தைகளை கவரும் வகையில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘ஜின்’.
இப்படத்தின் ஆடியோ உரிமை, டிஜிட்டல் உரிமை என அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு விட்டது என கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெற்றியை பெற்றிருக்கிறது. எந்த அளவிற்கு வெற்றியை பெறுகிறது என்பதை 30ம் தேதி முதல் திரையரங்குகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் படத்தின் இயக்குநர் டி ஆர் பாலா லோகேஷ் கனகராஜ், நெல்சன் போல் முன்னணி நட்சத்திர இயக்குநராக வருவார். அந்த அளவிற்கு திறமைசாலியாக இருக்கிறார். அது படத்தின் முன்னோட்டத்திலேயே தெரிந்து விட்டது,” என்றார்.
இணை தயாரிப்பாளர் ராகவேந்திரா பேசுகையில், ” எனக்கு சினிமா மீது ஆசை இருக்கிறது. படத்தை தயாரிக்கலாம் என்று நினைத்தபோது இப்படத்தின் கதை கிடைத்தது. படத்தின் கதை பிடித்து போனதால் இணை தயாரிப்பாளராக இந்த குழுவுடன் இணைந்தேன்.
இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருப்பது ஒரு கதை. ஆனால் படத்தில் மற்றொரு கதையும் உண்டு. அது சிறப்பானதாக இருக்கும். இது என்னுடைய முதல் படம். இவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
இப்படத்தின் மூலம் இயக்குநருக்கு சிறப்பான எதிர்காலம் கிடைக்க வேண்டும், கிடைக்கும் என நம்புகிறேன். இந்த திரைப்படத்தை திரையரங்கத்தில் பத்துக்கு மேற்பட்ட முறை பாருங்கள். பலருக்கு பகிருங்கள், ஆதரவிற்கு நன்றி,” என்றார்
தயாரிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி வேந்தன் பேசுகையில், ”ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் மகன் என்னிடம் ‘ஜின்’ என்றொரு தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என கேட்டார். அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி ஜின் என்ற தலைப்பை பதிவு செய்தேன். அதன் பிறகு இந்த ஜின் என் குடும்பத்தை சின்னாபின்னமாக்கிவிட்டது. என் மகன் இந்த டைட்டிலையும், கதையையும் வேறொரு நிறுவனத்திற்கு சொல்கிறார், நன்றாக இருக்கிறது என சொன்னார்கள் ஆனால் மேற்கொண்டு எந்த பணியும் நடைபெறவில்லை. அதன் பிறகு முன்னணி பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர் நடிப்பதற்காக இந்த டைட்டிலும் கதையையும் சொன்னார். கதை விவாதம் எல்லாம் நடந்தது. ஆனால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. இந்த தருணத்தில் இப்படத்தின் டைட்டில் வேறு ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது.‌ அதன் பிறகு அந்த டைட்டிலை அந்த நிறுவனத்திடம் கேட்டோம். அவர்கள் தர மறுத்து விட்டார்கள். அதன் பிறகு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து ‘ஜின் தி பெட்’ என டைட்டில் வைத்தோம். இதன் பிறகு எங்கள் குடும்பம் தொடர்ந்து உயர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கடவுள் இருக்கிறார் என்று ஒரு பிரிவினர் சொல்கிறார்கள். கடவுள் இல்லை என்று ஒரு பிரிவினர் சொல்கிறார்கள். ஆனால் ஜின் நிச்சயமாக இருக்கிறது. ‘ஜின்- தி பெட்’ என்று பெயர் வைத்த பிறகுதான் எங்களுக்கு நல்லது நடந்திருக்கிறது.
இந்த ஜின்னை மலேசியாவில் வளர்க்கிறார்கள்.. அதன் பின்னணியில் உருவானது தான் இப்படத்தின் கதை,” என்றார் நடிகை பவ்யா.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!