சினிமா

நம்பிக்கை நாற்றுகளை விதைக்கும் ‘கோட்டீஸ்வரன்’

145views
குறும்பட விமர்சனம்:
எந்த ஒரு சமூக பிரச்சனையானாலும் அதை இலகுவாக எடுத்து கையாளத் தெரிந்தவன் கலைஞன். அதை கலையின் வடிவில் எளிதாக புரியவைக்கும் போது சமூகம் அவனை கொண்டாடவே செய்கிறது.
ஆறு நிமிடம் இருப்பத்திரண்டு வினாடிகள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த படம் ஒரு அறுபது நிமிடம் வரை நம்மை உலுக்கி பார்க்கிறது என்றால் அது மிகையில்லை.
தொடக்கமே மின்தடையில் ஆரம்பிக்கிறது. இது ஒரு நல்ல குறியீடு. மெழுவர்த்தி வெளிச்சத்தில் ஒரு பிரச்சனையை உரையாடல் வழியாக கடத்தியிருக்கும் யுக்தி பாராட்டக்கூடியது.
பொய்த்துப்போன மழையும், கையேந்தும் நிலைமையும், கட்டிடங்களான விளைநிலங்களும் இடைத்தரகர்களின் இடையூறுகளுமாக சேர்ந்து சீரழித்துவிட்டதை வயதான அந்த கதாபாத்திரம் பேசும் வசனங்களில் கண்ணீரை விதைத்திருக்கிறார்கள்.
ஒரு நேர்காணல் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இந்த குறும்படம் ஒரு சாட்சி. நேர்காணல் என்ற பேரில் பிரபலங்ககளையே பிடித்து பிடித்து இம்சை செய்யும் மீடியாக்களுக்கு சரியான சவுக்கடி. எதை பேசவேண்டுமோ, எதை விவாதிக்க வேண்டுமோ அதை ஆணித்தரமாக விவாதிக்கும் விதத்தில் இது தனித்து நிற்கிறது.
மூன்று கதாபாத்திரங்கள். பேச்சு பேச்சு பேச்சு….ஆனால் வீணான பேச்சாகவில்லை.
சுபாஷ் அலெக்ஸ்சாண்டரின் ஒளிப்பதிவு இருட்டையும் மீறி ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சுகிறது. சுபாஷுக்கு ஒரு சபாஷ். படத்தொகுப்பில் அன்பு, அக்கறையுடன் அறுவடை செய்கிறார்.
கலைச்செல்வன், குன்றத்தூர் MG முருகேசன் இவர்களுடன் நடிகர் ஆதேஷ்பாலா நடித்து இயக்கி இருக்கிறார்.
ஆதேஷ் வயதான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். மறைந்த நகைச்சுவை குணச்சித்திர நடிகர் சிவராமன் மகன் ஆதேஷ் பாலா என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் போது அதை பொதுவெளியில் பேசினால் தான் அதற்கான தீர்வு நோக்கி நம்மால் நகர முடியும். அதை கண கச்சிதமாக இந்த குறும்படம் வழியாக வெளிப்படுத்தியிருக்கும் இந்த குழுவிற்கு நமது பாராட்டுகள்.
மொத்தத்தில், நடிகர் ஆதேஷ் பாலாவின் இயக்கத்தில் மிளிர்கிறது இந்த ‘கோட்டீஸ்வரன்’.
நாகா

Leave a Response

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!