சினிமா

’வேட்டைக்காரி’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

74views
ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிப்பில், காளிமுத்து காத்தமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வேட்டைக்காரி’. இதில் கதாநாயகனாக புதுமுக நடிகர் ராகுல் நடித்திருக்கிறார். கதாநாயகியாக சஞ்சனா சிங் அதிரடி ஆக்‌ஷன் வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். வின்செண்ட் செல்வா வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தில் வேலுச்சாமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
ராம்ஜி இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி மே 29 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் கவிப்பேரரசு வைரமுத்து, தமிழக அமைச்சர் பெரியகருப்பன், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் காளிமுத்து காத்தமுத்து,
“ஆங்கிலேயர்கள் காலத்தில் தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டத்தில் பணியாற்றியவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்கள், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு அவர்கள் விட்டுச் சென்ற தேயிலை தோட்டங்களை அவர்களுக்கு சேவகம் செய்தவர்கள் தற்போது நடத்தி வருவதோடு, அவர்கள் கடைபிடித்த கொத்தடிமை முறையையும் கடைபிடித்து வருகிறார்கள். அங்கு மட்டும் அல்ல, செங்கல் சூளை உள்ளிட்ட பல இடங்களில் இன்னமும் கொத்தடிமை முறை இருக்கத்தான் செய்கிறது. அந்த கொத்தடி முறைக்கு எதிரான படமாக ‘வேட்டைக்காரி’ இருக்கும். வைரமுத்து ஐயா அவர்களின் பாடல்கள் படத்திற்கு பக்கபலமாக இருக்கும். அவர் என் படத்திற்கு பாடல் எழுதியது எனக்கு பெருமை. வேட்டைக்காரி கமர்ஷியல் படமாக மட்டும் இன்றி சமூகத்திற்கான படமாகவும் இருக்கும்.” என்றார்..
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வேலுச்சாமி பேசுகையில், “நான் மூன்று திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். தற்போது முதல் முறையாக தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். ஒரு நல்ல கதையை, நல்லபடியாக தயாரித்து இருப்பதில் மகிழ்ச்சி. இங்கு வாழ்ந்த வந்திருக்கும் அண்ணன் அமைச்சர் பெரியகருப்பன், வைரமுத்து ஐயா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.” என்றார்.
படத்தின் கதாநாயகன் ராகுல் பேசுகையில்,
“இது எனக்கு முதல் படம், வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. என்னால் முடிந்தவரை நடித்திருக்கிறேன், பார்த்துவிட்டு நீங்கள் தான் சொல்ல வேண்டும், நன்றி.” என்றார்.
நாயகி சஞ்சனா சிங் பேசுகையில்,
“இங்கு வந்திருக்கும் ஊடகம் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி. பெரிய நன்றி வைரமுத்து சாருக்கு, அவர் வேட்டைக்காரி என்ற சிறப்பான தலைப்பை எனக்கு கொடுத்திருக்கிறார், இது எனக்கு பெருமையாக இருக்கிறது. நான் 15 வருடங்களாக தமிழ்நாட்டில் இருக்கிறேன், ஆனால் எனக்கு சரியாக தமிழ் பேச வராது, இருந்தாலும் நான் அனைத்து இடங்களிலும் தமிழில் தான் பேசுவேன், தமிழ் என் உயிர். 2009 ஆம் ஆண்டு நான் நடித்த முதல் தமிழ்ப் படமான ‘ரேணிகுன்டா’ வெளியானது, இப்போது வரை அந்த படத்தை தமிழ் ரசிகர்கள் நினைவு வைத்திருக்கிறார்கள். ஆனால், இனி என்னை ‘வேட்டைக்காரி’ சஞ்சனா என்று மக்கள் அழைக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். காரணம், நான் முதல் முறையாக ஆக்‌ஷன் ஹீரோயினாக இந்த படத்தில் நடித்திருக்கிறேன். இதுவரை 40 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் ஒரு அழகான கிராமத்து பின்னணியில் நடித்த படம் இது தான். அனைவரும் படம் எடுப்பார்கள், ஆனால் இந்த படத்தை தயாரிப்பாளர் வேலுச்சாமி சார் மற்றும் இயக்குநர் காளிமுத்து சார் மிகவும் கஷ்ட்டப்பட்டு நடித்திருக்கிறார்கள். மலை மீது படப்பிடிப்பு, அங்கு எந்த வசதியும் இருக்காது. ஒரே ஒரு வீடு மட்டும் இருக்கும். கீழே இருந்து தான் அனைத்து பொருட்களையும் எடுத்துச் செல்ல வேண்டும், அப்படி ஒரு இடத்தில் கேரோவேன் உள்ளிட்ட எந்தவித வசதியும் இல்லாமல் கஷ்ட்டப்பட்டு நடித்திருக்கிறேன். அதேபோல், இந்த படக்குழுவினரும் அதிகம் கஷ்ட்டப்பட்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு நிச்சயம் விருது கிடைக்க வேண்டும். மீடியா நினைத்தால் இந்த படத்தை சூப்பர் ஹிட் படமாக்கலாம், நிச்சயம் அதை நீங்கள் செய்ய வேண்டும். இந்த படக்குழு பட்ட கஷ்ட்டங்களுக்கு அது தான் தீர்வாக இருக்கும், நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன், நன்றி.” என்றார்.
இசையமைப்பாளர் ராம்ஜி பேசுகையில்,
“எனக்கு இந்த படத்திற்கு வாய்ப்பளித்த இயக்குநர் காளிமுத்து மற்றும் தயாரிப்பாளர் விஷ்ணுபிரியா வேலுச்சாமி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் ஐயா அவர்கள் இந்த பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்வது பெருமையாக இருக்கிறது. வைரமுத்து சாருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாது. அவருடன் பணியாற்றியிருப்பதே இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன். இந்த படத்தை மிகப்பெரிய கஷ்ட்டங்களுக்கு மத்தியில் எடுத்திருக்கிறார்கள். இயக்குநர் யாரும் செல்ல முடியாத வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார். படத்தை பார்க்கும் போதும், இப்படிப்பட்ட படம் நமக்கு கிடைத்தது வரப்பிரசாதமாக இருந்தது என்று தோன்றியது. படக்குழுவினர்களும் மிகவும் கஷ்ட்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் கொடுக்கும் ஆதரவு தான் அனைவருக்கு வெற்றியை கொடுக்கும், எனவே நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன், நன்றி.” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில்,
“கருப்பர் துணையோடு படத்தை ஆரம்பித்திருப்பதாக சொன்னார்கள், இங்கு இரண்டு கருப்பர்கள் வாழ்த்த வந்திருக்கிறார்கள், ஒருவர் வைரமுத்து சார், மற்றொருவர் மாண்புமிகு அமைச்சர். அவர் எங்கள் தொகுதியை சேர்ந்தவர். இசையமைப்பாலர் ஏ.கே.ராம்ஜி ரொம்ப கொடுத்து வைத்தவர், வைரமுத்து சார் அவருக்கு பாடல் எழுதுகிறார் என்றால் அது அவருக்கு கிடைத்த வரம். இந்த படத்தில் பாடல் திரையிட்ட போது, பெண் குரல் வரும் போது, எனது அருகில் ஒரு குரல் கேட்டது, என்னவென்று பார்த்தால் என் பக்கத்தில் உட்கார்ந்த ஹீரோயின் அந்த முழு பாடலையும் பாடுகிறார். அது தான் பாடல் வரிகளுக்கு கிடைத்த வெற்றி, கவிப்பேரரசுக்கு கிடைத்த வெற்றி. இத்தனைக்கும் அவருக்கு முழுமையாக தமிழ் தெரியாது, இருந்தாலும் அந்த வார்த்தைகளை அவர் உச்சரிக்கிறார் என்றால் அது தான் அந்த வரிகளின் வலிமை.
சில தினங்களுக்கு முன்பு ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டேன், அப்போது அந்த பட இயக்குநர் படத்திற்கு தலைப்பு வைத்தவர் வைரமுத்து என்றார், இந்த படத்தின் இயக்குநர் காளிமுத்துவும் இந்த படத்திற்கு வைரமுத்து சார் தான் தலைப்பு வைத்ததாக சொன்னார். எனவே வைரமுத்து சார் பாடல் வரிகளை மட்டும் கொடுக்கவில்லை தலைப்புகளையும் கொடுத்து வருகிறார். காரணம், அவர் தமிழ்ப் பட தலைப்புகள் மீது கடும்கோபம் கொண்டிருக்கிறார். அதனால் தான் இப்போது அவரே களத்தில் இறங்கி தலைப்பு வைக்க தொடங்கி விட்டார். இந்த நேரத்தில் நான் ஒரு உண்மையை சொல்ல வேண்டும், திருப்பாச்சி என்ற தலைப்பும் வைரமுத்து சார் தான் கொடுத்தார். திருப்பாச்சிக்கு முதலில் ஒரு தலைப்பு வைத்தோம், அதை விஜய் சார், செளத்ரி சார் ஏற்றுக்கொண்டார்கள். பதிவு செய்யும் போது அந்த தலைப்பு வேறு ஒருவரிடம் இருந்தது, நாங்கள் எவ்வளவு கேட்டும் கொடுக்கவில்லை. புதிய தலைப்பு என்ன வைப்பது என்று தெரியாமல் எங்கள் குழுவே குழப்பமடைந்த நிலையில், தொலைக்காட்சியில் ஒரு பாடல் பார்த்தேன், “திருப்பாச்சி அருவாள தூக்கிக்கிட்டு வாடா…வாடா.” என்ற பாடல் அது. அந்த பாடலை கேட்டதும், என் பட நாயகன் அருவா செய்பவர், என்றவுடன் திருப்பாச்சி என்ற தலைப்பு சரியாக இருக்கும் என்று தோன்றியது, உடனே அந்த தலைப்பை வைத்துவிட்டேன். ஆகையால், எனக்கும் தலைப்பு கொடுத்தவர் வைரமுத்து சார் தான்.
நிறைய படங்களில் பாடல்கள் ஹிட்டாகிவிடும், அதற்கு இசை தான் காரணம். நல்ல இசையாக இருந்தால் பாடல் உடனே ஹிட்டாகிவிடும் அதை மறுக்க முடியாது, ஆனால் அந்த பாடல் காலங்களை கடந்து மக்கள் மனதில் நிலைத்திறுக்க வேண்டும் என்றால் வரிகள் முக்கியம். சிறப்பான வரிகள் மூலமாகத்தான் ஒரு பாடல் காலம் கடந்து வாழும், அப்படிப்பட்ட வரிகள் தான் வைரமுத்து சாருடையது. திரை இசைக்கு ட்யூன் என்று சொல்வார்கள், அந்த ட்யூனை பல்லாங்குழியாக வைத்துக்கொண்டால் பலர் சோழி போட்டு விளையாடுவார்கள், பலர் புளியங்கொட்டை போட்டு விளையாடுவார்கள். ஆனால், வைரமுத்து சார் ஒருவர் மட்டும் தான் வைரங்களையும், முத்துக்களையும் போட்டு விளையாடுவார், அது தான் வைரமுத்து. அவருடைய பாடல்கள் காலம் கடந்து இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர் ‘வேட்டைக்காரி’ படத்திற்கு பாடல் எழுதியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம். நிச்சயம் இந்த படம் வெற்றியடையும் என்று வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.
மாண்புமிகு அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில்,
“தம்பி வேலுச்சாமி அவர்கள் திரையுலகில் காலடி பதித்து, தன்னுடைய குலதெய்வமான ஸ்ரீ கருப்பர் பெயரில் நிறுவனத்தை தொடங்கி முதல் படத்தை தயாரித்திருக்கிறேன். நானே இப்போது தான் கேள்விபடுகிறேன், அவர் மூன்று படங்களில் நடித்திருக்கிறார் என்பதை. அந்த அளவுக்கு தன்னடக்கத்துடன் தனது சினிமா பயணத்தை அவர் தொடர்ந்துக்கொண்டிருக்கிறார். அவரது பெரும் முயற்சியால், அவருடைய துணைவியார், அவருடைய அறுமை மகள் இவர்களுடைய ஒத்துழைப்பால் இந்த படத்தை தயாரித்து அதை வெளியிடுகின்ற இந்த நல்ல சூழ்நிலையில், கவிப்பேரரசு அவர்கள் அவருடைய வளர்ச்சிக்கு, இந்த படம் வெற்றி பெறுவதற்காக எல்லாம் உதவிகளையும் செய்து, அவரே இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் தம்பி வேலுச்சாமியும், அவரது குடும்பமும் கொடுத்து வைத்திருக்க வேண்டும், என்று தான் சொல்ல வேண்டும்.
‘வேட்டைக்காரி’ என்ற புரட்ச்சிகரமான மற்றும் வித்தியாசமான தலைப்பில் இந்த படக்குழு உருவாக்கி நமக்கு படைத்துக்கொண்டிருக்கிறார்கள், அதற்கான முன்னோட்ட நிகழ்ச்சியாக பாடல்கள் மற்றும் டிரைலர் இன்று வெளியிடப்படுகிறது. இதில், நானும் கலந்துக்கொள்வதில் மற்றற்ற மகிழ்ச்சிடைகிறேன், அதற்கு காரணமான வேலுச்சாமி மற்றும் அவரது குடும்பத்தாருக்கும், கருப்பர் பிலிம்ஸ் மற்றும் நாங்கள் வணங்கும் சாம்பிராணி கருப்பர் ஆகியோருக்கு நன்றி என்பதை விட வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கவிப்பேரரசை பொறுத்தவரையில் அவர் பிறவி கவிஞராகவே பிறந்திருக்கிறார். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் பாடல் வரிகளை மட்டும் இன்றி, இப்போது திரைப்படங்களுக்கு தலைப்புகளை தருவதோடு, அந்த தலைப்புகள் தமிழில் தான் அமைய வேண்டும் என்பதில் அவர் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பது தெரிகிறது. கவிப்பேரரசு அளவுக்கு இன்று பாடல்கள் எழுதுபவர்கள் யாரும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு திரைத்துறையில் முன்னணி பாடலாசிரியராக மட்டும் இன்றி இலக்கியவாதியாகவும் இருக்கிறார். அவருக்கு இன்று தமிழ்நாட்டில் மட்டும் இன்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் இன்றைய முதலமைச்சர் மட்டும் இன்றி, தமிழ் மண்ணின் முடிசூடா மன்னனாக, சுமார் 80 ஆண்டுகளை தமிழ்நாட்டுக்காகவும், தமிழுக்காகவும் வாழ்ந்து மறைந்த நம்முடைய முத்தமிழ் அறிஞரும் கவிப்பேரரசுவின் ரசிகர் மட்டும் இன்றி அவரது கவிதையால் ஈர்க்கப்பட்டவர். எழுத்துலகில், கலையுலகில் மட்டும் இன்றி அவருடன் நீண்ட காலம் பயணித்தவர் என்ற பெருமையை பெற்ற கவிப்பேரரசு இந்த படத்தின் ஒலி நாடாவை வெளியிட்டது பெருமை.
பேரரசு, நான் மேடையில் இருக்கும் விருந்தினர்கள் அனைவரும் அடுத்தடுத்த ஊரைச் சேர்ந்தவர்கள் தான். அடுத்தடுத்த ஊர் என்றதுமே ஏதோ நாங்கள் இன்று தான் சினிமாவில் வந்திருக்கிறோம் என்று நினைத்துவிட வேண்டாம். குறிப்பாக தமிழ் திரையுலகமே அன்றைக்கு எங்களுடைய காரைக்குடி, சிவசங்கை மாவட்டத்தில் தான் இருந்தது. ஏ.வி.எம் ஸ்டுடியோவே தேவகோட்டையில் இருந்தது. எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாச்சலம் என பல முன்னணி திரையுலகினர் அங்கிருந்து வந்தவர்கள் தான். சற்று இடைப்பட்ட காலத்தில் தொய்வு இருந்தாலும், அந்த தொய்வுகளை நீக்கும் வகையில் தான் தம்பி இயக்குநர் பேரரசு போன்றவர்கள், தம்பி தயாரிப்பாளர் வேலுச்சாமி போன்றவர்கள் வந்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சிறப்பாக இசையமைத்த ராம்ஜி அவர்களே, பாடகர் அந்தோணி தாசன் அவர்களே, தமிழ் மூவி மேக்கர்ஸ் தமிழரசி அவர்களே, திரைப்படத்தின் இயக்குநர் காளிமுத்து காத்தமுத்து, நாயகன் ராகுல், நாயகி சஞ்சனா, தயாரிப்பாளர் விஷ்ணுபிரியா வேலுச்சாமி மற்றும் இங்கு வந்திருக்கும் கலைத்துறையைச் சார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.

கவிப்பேரரசு வைரமுத்து பேசுகையில்,
“கருப்பர் சாமி என்ற பெயரில் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இங்கு இரண்டு கருப்பர்கள் வாழ்த்த வந்திருக்கிறோம். ஒன்று பெரியகருப்பர் அமைச்சர், மற்றொருவர் சின்ன கருப்பராகிய நான். இயக்குநர் காளிமுத்து என்னை வந்து சந்தித்ததும் கதை சொன்னார், கதை எனக்கு பிடித்திருந்தது. கதை நன்றாக இருக்கிறது தம்பி, சினிமா என்பது இன்று கதை இல்லை, ஆக்கம். எப்படி அதை கொடுக்கிறீர்கள் என்பது தான் முக்கியம், என்று சொன்னேன். நெஞ்சில் தைப்பது போன்று காட்சிகளை அமைக்க வேண்டும், அந்த இடத்தில் தான் பார்வையாளருக்கும், இயக்குநருக்கும் தொடர்பு ஏற்படுகிறது. இந்த இடத்தில் தான் மற்ற இயக்குநர்களை விட வித்தியாசப்படுத்தி சில இயக்குநர்கள் நிற்கிறார்கள், வெற்றி பெறுகிறார்கள். அந்த வகையில் காளிமுத்து இந்த படத்தை சிறப்பாக எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு பிறந்தது, அதனால் அவருடைய கதைக்கு ‘வேட்டைக்காரி’ என்ற தலைப்பு கொடுத்தேன்.
நான் தலைப்பு கொடுப்பது புதிதல்ல, பொன்மாலை பொழுது என்று எழுதினேன் அது தலைப்பானது, வெள்ளை புறா என்று எழுதினேன் அது ஒரு படத்திற்கு தலைப்பானது. என் பல்லவி பூவே பூச்சூடவா அது அந்த படத்திற்கு தலைப்பானது. இப்போது தான் தெரிந்தது திருப்பாச்சி என் பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட தலைப்பு என்று. இதுபோல் பல படங்களுக்கு என் பாடல் வரிகள் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் யாரும் என்னிடத்தில் வந்து கேட்பதில்லை. இவர்கள் அனைவரும் வைரமுத்து நமக்கானவர், தமிழுக்கானவன் என்று நினைத்து எடுத்துக்கொள்கிறார்கள் அதனால் நான் யாரையும் கேட்பதில்லை. என்னிடம் பலர் நீங்கள் கேட்க கூடாதா என்று கேட்பார்கள். அதற்கு நான் ஜெயகாந்தன் பாணியில் பதில் சொல்ல வேண்டும் என்றால், “இல்லாதவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள், இதை ஏன் கேட்க வேண்டும்”. எது எப்படியோ தமிழ் பல வகையில் வளர வேண்டும். ஒரு தலைப்பு என்பது சாதாரணமானதல்ல, அது எப்படி எல்லாம் சுழற்சி முறையில் சுழன்றுக் கொண்டிருப்பதோடு, பல தளங்களில், பல வடிவங்களில் சென்றடையும். நல்ல தமிழ் பெயர் இருந்தால் அதனால் தமிழ் நீட்சியடையுகிறது, ஆட்சி செய்கிறது. ஒரு திரைப்படத்தின் தலைப்பு உலகம் முழுவதும் கவனிக்கப்படுகிறது, அதனால் தான் உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன், நல்ல தமிழில் தலைப்பு வையுங்கள். ஆங்கிலத்தில் தலைப்பு வைத்து படம் ஓடினால், அதற்கான சான்றுகள் கொடுத்தால் நான் ஏற்றுக்கொள்கிறேன். அதே சமயம், தமிழில் தலைப்பு வைத்து அந்த படம் ஓடவில்லை என்றால் அதற்கும் சான்றுகள் கொடுத்தால் நான் ஏற்றுக்கொள்கிறேன். தமிழை தமிழ்நாட்டை கடந்து செல்லுபடியாக வைக்க வேண்டும். அதனால் தான் காளிமுத்துக்கு இந்த வேட்டைக்காரி என்று தலைப்பை வழங்கினேன், அவரும் ஏற்றுக்கொண்டார், அதற்கு அவருக்கு நன்றி.
இயக்குநர் காளிமுத்து என்னிடம் வந்ததும், அவருடைய வெள்ளந்தியான முகத்தை பார்த்து, நிறத்தை பார்த்து, அவர் உடல் மொழியை பார்த்து, அவர் ஆடை அணிந்திருக்கிற அசரத்தையை பார்த்து, இவரை ஏற்றுக்கொள்ளலாம வேண்டாமா என்று நான் கருதவில்லை, இவரை தான் நாம் ஏற்றுக்கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என்று நினைத்தேன். இவன் நம்மவன், நம் மண்ணவன், என் உறவினர், தமிழன், பச்சை தமிழன், நிறத்தால் கருப்பு தமிழன், இவனை தான் ஆதரிக்க வேண்டும் என்று கருதினேன். யாருக்கு என்ன குனம் என்று தெரியாது, நிராகரிக்கப்பட்டவர்கள் எல்லாம் எந்த உயரத்தில் இருந்தார்கள் என்று உங்களுக்கு தெரியாது. ஒரு நடிகர் ஒரு இயக்குநரை பார்த்து கெஞ்சுகிறார் ஒரு நடிகர். எனக்கு இது தான் முதல் படம், எனக்கு ஒரு குளோஷப் போட முடியுமா? என்று கேட்கிறார். அதற்கு அந்த இயக்குநர் உனக்கு பல்லு எத்தி இருக்கு, குளோஷப் போட்டால் நல்லா இருக்காது, என்று நிராகரிக்கிறார். அப்படி நிராகரித்த இயக்குநர் எல்லிஸ் டங்கன், நிராகரிக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். அப்படி நிராகரிக்கப்பட்டவரின் முகத்தை உடம்பில் பச்சை குத்திக்கொண்ட காலமும் வந்தது. அதேபோல், ஒரு நடிகர் வசனம் பேசினால் மீன் வாயை திறப்பது போல் இருக்கிறது, இவரை நீக்கி விட்டு வேறு ஒருவரை போட முடியுமா? என்று கேட்டு இருக்கிறார்கள். அப்படி கேட்கப்பட்டவர் சிவாஜி கணேசன். பராசக்தி படத்தில் அவரை நீக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவர் தான் தமிழ் சினிமாவை பல வருடங்கள் ஆட்சி செய்தார். அதனால், யாரையும் நிராகரிக்க முடியாது. காளிமுத்துவை நான் நிராகரித்தால் என்னை நானே நிராகரிப்பதாக அர்த்தம்.
படத்தின் பாடல்கள் பற்றி சொல்லும் போது, எப்போதெல்லாம் ஒரு கவிஞன் தனது கவிதைகளை பாடல்களில் சேர்க்கிறானோ அப்போதெல்லாம் தமிழ் உச்சத்திற்கு செல்கிறது. பாடல்களில் கவிதைகள் இருப்பதன் மூலம் மக்கள் கவிதையை ரசிக்கிறார்கள், பாடல்களை ரசிக்கிறார்கள். இன்று நல்ல பாடல்கள் வருவது என்று சொல்கிறார்கள், அதற்கு காரணம் கதையில் அதற்கான இடம் இருப்பதில்லை. அப்போது பாடல்கள் உட்கார்வதற்கு இடம் இருந்தது. ஆனால், இன்று வரும் கதைகளில் பாடல்கள் உட்கார இடுப்பு இல்லை, இடம் இல்லை. ஆங்கில படங்களை பார்த்து நல்லவற்றை எடுத்துக்கொள்ளுங்கள், கெட்டவற்றை தவிர்த்துவிடுங்கள். ஆங்கில படங்களில் பாடல்கள் காட்சியோடு பாடல்கள தேய்க்கபட்டு விடுகிறது. இதை நீங்கள் பின்பற்ற வேண்டாம். ஏன் என்றால், தமிழன் பாட்டில் பிறந்து, பாட்டில் வளர்ந்து, பாட்டில் லயத்து, பாட்டில் கரைந்து, பாட்டில் கரைந்து போகிறான். எனவே பாடல்களை தூக்கி விடாதீர்கள். பாடல்களுக்கு திரைக்கதை செய்து விட்டீர்களா? என்று கேட்டால் இயக்குநர்கள் திணறுகிறார்கள். பாட்டுக்கு ஒரு திரைக்கதை வேண்டும், அது தான் முக்கியம். உங்கள் கதைக்கு பாடல் தேவை இல்லை என்றால் அதை தூக்கி விடுங்கள், அது தவறில்லை. ஆனால், பாடல்களை வைத்துக்கொண்டு அதை எங்கே உட்கார வைப்பது என்று தெரியாமல் இருக்காதீர்கள். இயக்குநர் காளிமுத்துவிடம் எனக்கு பிடித்தது, காட்டுக்குள் ஒரு பாடல் என்று கேட்டார், ஏன் என்று கேட்டால், காடு தான் இந்த படத்தின் களம், காடு தான் இந்த படத்தின் உயிர் என்று சொன்னார். நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன், அந்த கவிதையை இந்த பாட்டுக்கு பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதன்படி பயன்படுத்தினேன், அந்த பாடலை இன்று தமிழ் தெரியாதவர்களுக்கும் உச்சரிக்கிறார்கள், இது தான் அந்த கவிதையின் வெற்றி. என்னுடைய சின்ன சின்ன ஆசைகள் பாடல் தமிழகத்தை தாண்டி இந்தியாவின் பல மாநிலங்களில் ரசிக்க பட்டது. மொழி தெரியாதவர்கள் கூட தமிழின் ஓசையை ரசிக்க வைத்தது. அதற்கு காரணம் தமிழ் வார்த்தைகள் தான்.
தமிழ் சினிமா இன்று கவலைக்கிடமாக இருக்கிறது, ஆனால் என்றுமே அழிந்துவிடாது. சினிமாவுக்கு அழிவே கிடையாது, அது காலத்திற்கு ஏற்ப மாற்றம் அடையும், அதற்கு ஏற்றவாறு படைப்பாளிகளும் தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். சினிமாவின் மாறுதல்களுக்கு ஏற்றபடி இயக்குநர்கள் தங்களை புதுப்பித்துக்கொண்டால் நிச்சயம் சினிமா மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள். இன்று திரையரங்கிற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. பெண்கள் தொலைக்காட்சிகளில் முழுகி விட்டார்கள். காதலர்கள் வருகிறார்கள் ஆனால் அவர்கள் படம் பார்ப்பதில்லை, படம் தொடங்குவதற்கு முன்பாகவே அவர்களுடைய படத்தை தொடங்கி விடுகிறார்கள். கோடைகாலத்தில் ஏசிக்காக பலர் திரையரங்கிற்கு வருவதாக சொல்கிறார்கள். அதையும் தாண்டி உழைப்பாளர்கள் இன்று படம் பார்க்க வருகிறார்கள், அப்படி என்றால் அவர்களுக்கான படங்கள் வர வேண்டும், அவர்களை ஈர்க்கும் படங்களை கொடுக்க வேண்டும். எனவே, சினிமா காலத்துக்கு ஏற்ப மாற்றமடைவது போல் படைப்பாளிகளும் தங்களை மாற்றியமைத்துக்கொண்டு இயங்கினால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். அந்த வகையில், ’வேலைக்காரி’ படமும் நிச்சயம் காலத்துக்கு ஏற்ற படமாக இருக்கும் என்று கூறி வாழ்த்தி விடைபெறுகிறேன்.” என்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!