காட்டுபகுதிகளில் தொடர்ந்து பழுதாகும் அரசு பேரூந்துகள்.. அவதிக்குள்ளாகும் பயணிகள்.. கண்டு கொள்ளாத அதிகாரிகள்…
கொடைக்கானல் மலைப்பகுதியில் அடிக்கடி அரசு பேருந்துகள் பழுதடைந்து ஆங்காங்கே நின்று விடுவதால் பயணிகள் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மலைப்பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகளை அரசு அதிகாரிகள் முறையாக பராமரிக்காமல் பழுதான பேருந்துகளையே தொடர்ந்து இயக்குவதால் இன்று 6/11/2022 ஞாயிற்றுக்கிழமை காலை பன்றிமலையில் இருந்து தாண்டிக்குடி பண்ணைக்காடு வழியாக வத்தலக்குண்டு சென்ற அரசு பேருந்து (எண் 2490) காட்டு யானைகள் அதிகம் நடமாடக்கூடிய எதிரொலிப்பாறை பகுதியில் பழுது ஏற்பட்டு நின்று விட்டது.
இதனால் பல மணி நேரம் காலதாமதம் ஆகியதால் பயணிகள் சிலர் வேறு வாகனங்களில் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. அடிக்கடி இது போன்று அரசு பேருந்துகள் மலைப்பகுதியில் பழுதாகி நின்று விடுவதால் பெரியவர்கள் குழந்தைகள் உட்பட பயணிகள் பலரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இது சம்பந்தமாக பேருந்தில் பயணம் செய்த சமூக ஆர்வலர் தாண்டிக்குடியை சேர்ந்த கணேஷ் பாபு நம்மிடம் கூறியதாவது:, அடிக்கடி இது போன்ற நிகழ்வுகளை நான் சந்தித்து வருகிறேன் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் புகார் அளித்தும் எவ்விதமான நடவடிக்கைகளும் இல்லை.
இது போன்ற சில நேரங்களில் சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளோம்.
எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இனிமேலாவது கொடைக்கானல், கிளாவரை, பூண்டி, மற்றும் தாண்டிக்குடி ஆடலூர் போன்ற மலைப்பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளை முறையாக பராமரித்து நடுவழியில் நிற்காமல் மழைக்கு ஒழுகாத தரமான அரசு பேருந்துகளை இயக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள அனைத்து கிராம பொதுமக்களும் நிம்மதியாக அரசு பேருந்துகளில் பயணம் செய்து பயன்பெறும் வகையில் தரமான அரசு பேருந்துகளை இயக்கிட உதவிடும்படி இதன் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம்