59
பதிவு: சித்தார்த்தன் சுந்தரம்
சமீபத்தில் வாசித்த `இப்படியும் சாதிக்கலாம்: நகரத்தார் பெண் தொழிலதிபர்களின் பேட்டிகள்” மூலம் நகரத்தார் சமூகப் பெண்களில் வெற்றிக் கொடி நாட்டிய 17 ஆச்சிமார்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. இது போல இந்த சிறிய சமூகத்தைத் சேர்ந்த பல பேர் உலகெங்கும் வியாபித்து இருக்கலாம். அதையும் இந்நூலாசிரியர் தேனம்மை லெட்சுமணன் ஆவணப்படுத்த வேண்டும்.
`விடாமுயற்சியே வெற்றி தரும்’ எனச் சொல்லும் மணிமேகலை சரவணனிலிருந்து `பேருந்தில் சாதனை’ நிகழ்த்திய இராமகிரி சுப்பையா வரை 17 ஆச்சிமார்களின் வெற்றிக் கதை இந்நூலில் கட்டுரை வடிவில் இடம் பெற்றிருக்கிறது. நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த ஆச்சிகள் பல துறைகளிலும் – கார்பொரேட், மருத்துவம், மசாலா பொருள்கள் விற்பனை, கைத்தறி பட்டுச்சேலை தயாரிப்பு, பொட்டீக், இசையுரை, நடனம், நகரத்தார்களின் பெயர் சொல்லும் பாரம்பரிய கட்டிடக்கலைப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, கல்வி நிறுவனம் மேலாண்மை, ஆக்ஸிஜன் தொழிற்சாலை, பதிப்பாளர், பட்டிமன்ற பேச்சாளர் என பல துறைகளிலும் கோலோட்சி வருவதைப் பார்க்கையில் வியப்பு மேலிடுகிறது.
இதில் நேர்காணல் கண்ட அனைவரும் தங்களது குடும்பத்தினர் ஆதரவு இல்லையெனில் இந்த அளவுக்கு உயர்ந்திருக்க முடியாது என்பது மிகவும் போற்றத்தக்க விஷயமாகும். இதை வாசிக்கும் போது என்னை வியப்பில் ஆழ்த்தியவர் திருமதி கனகலட்சுமி ஆச்சி, வயது 89. இவர் தன் க்ரோஷா வேலைப்பாட்டுக்காக கின்னஸ் சான்றிதழ் பெற்றிருக்கிறார். அதோடு தஞ்சாவூர் பாரம்பரிய ஓவியங்கள் வரைவதில் கை தேர்ந்தவராக இருக்கிறார். இவர் மறைந்த இராம. சுப்பையா அவர்கள் மகள் என்பதும் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், திராவிட கழகத்தைச் சேர்ந்த சுப. வீ. அவர்களின் சகோதரி என்பதும் கூடுதல் தகவல்.
இவர் இளைய தலைமுறையினருக்கு சொல்லும் ஆலோசனை / அறிவுரை : `முடியும் என்றால் எதையும் சாதிக்க முடியும். வெற்றி வந்தாலும் பணிவுடன் தான், தோல்வி வந்தாலும் பொறுமையுடன் தான், எதிர்ப்பு வந்தாலும் துணிவுடன் தான், எது வந்தாலும் நம்பிக்கையுடன் தான். இது தான், இப்படித்தான் என்று எதுவும் இல்லை. எது எப்படியோ, அது அப்படித்தான் என்று ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை வசந்தமாகும்” என்கிறார் இந்த அனுபவசாலி.
இது போல ”ராமு ட்ராவல்ஸ்” இராமகிரி சுப்பையா, `இளைய தலைமுறையினருக்கு நான் சொல்வதெல்லாம் தன்னம்பிக்கையுடன் முடிவெடுங்கள். சோம்பேறித் தனம் இல்லாமல் உழையுங்கள். தொடர் உழைப்பு உங்களை நிச்சயம் உயர்த்தும்” என்கிறார்.
தமிழ் படித்ததால் உயர்ந்ததாகச் சொல்லும் அலமேலுவும், பல சிரமங்களுக்கு இடையில் பிரெஞ்ச் மொழி கற்றுக் கொண்டு இன்றைக்கு கோவையில் பிரெஞ்ச் மொழி கற்றுக் கொடுக்க ஒரு இன்ஸ்டிடியூட்டை நடத்தி வரும் மாலதி சுப்புவும், பெங்களூருவில் சினேகா பொட்டீக் நடத்தி வரும் அன்னபூரணி நாராயணனும், பிரிட்டனின் எரித் நகரிலிருந்து மசாலாப் பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வரும் சீதா தேனப்பனும் இன்னும் மற்றவர்களும் பாராட்டுக்குரியவர்கள் என்பதோடு இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாக இருக்கிறார்கள்.
தேனம்மை லக்ஷ்மணன்
அன்றைக்குக் கடல்கடந்தும் வணிகம் செய்து வந்த சமூகம் நகரத்தார் சமூகம் ஆகும். ஆனால், இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலோர் அதிலிருந்து விலகி அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். மீண்டும் நம் பாரம்பரியமான வணிகத் தொழிலில் இன்றைய தலைமுறையினரை ஈடுபடுத்த பல நகரத்தார் அமைப்புகள் (Nagarathar Chamber of Commerce _NCC, International Business Conference for Nagarathars – IBCN, Nagarathar Business Connections – NBC போன்ற இன்னும் பல) முனைப்புடன் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்க விஷயமாகும்.
எளிய தமிழில் எண்பது பக்கங்களில் 17 ஆச்சிமார்களின் வெற்றிக் கதையை தேனம்மை லட்சுமணன் எழுதியிருக்கிறார். நீங்களும் வாசித்துப் பாருங்கள், கண்டிப்பாக ஓர் உத்வேகம் ஏற்பட்டு நாளைக்கு நீங்களும் ஒரு தொழில்முனைவோராக பரிணமிக்கலாம்.
இந்நூலில் உள்ள சிறு குறைபாடு என்னவெனில், ஆங்காங்கே சில சொற்பிழைகளும், ஆங்கிலப் பெயர்கள் குறிப்பிடப்பட வேண்டிய இடங்களில் அர்த்தம் எதுவும் இல்லாத ஏதோ ஒரு சில தமிழ் சொற்களும் இருப்பதாகும். அடுத்தப் பதிப்பில் தவிர்க்கப்படும் என நினைக்கிறேன். அது போல, பெண் சாதனையாளர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
நூலின் பெயர்: இப்படியும் சாதிக்கலாம்
ஆசிரி(யை)யர்: தேனம்மை லெட்சுமணன்
பதிப்பாளர்: நூல் குடில் பதிப்பகம்
விலை: ரூ 70.
add a comment