29views
நூலாசிரியர் : குகை மா. புகழேந்தி அவர்கள்
நூல் விமர்சனம் : தயானி தாயுமானவன்
சமர்ப்பணம் : பாடிப்பறந்த குயில் S. ஜானகி அம்மாவுக்கு
கவிதைகளோடு ஓர் உயிர்ப் பின்னல் என்ற ஏற்புரையோடு நட்பின் கரை நடந்த இன்னொரு நட்பாக அறிமுகம் ஆகிறார் அவருடைய நண்பர் பழ.புகழேந்தி அவர்கள். எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற நட்பில் மலர்கிறது
இந்த நூல்.
எழுதுவதெல்லாம் படைப்பாகாது, எழுத்தை தானியம் போல சேமித்து உணவாகத்தருகிறார் மனதிற்கும் பசி உண்டல்லவா?
நதி எப்படி கடலைப் பார்த்து நீ உப்பாக இருக்கிறாய் என்கிறதோ அதேப் போலத்தான் இந்த வாழ்வும் உப்பைக் கொண்டு வந்து சேர்த்ததே நீ தானே என்கிறது கடல்!
கவிஞனின் வாழ்வும் அப்படித்தான் குகை. மா.புகழேந்தி அவர்களின் கவிதையும் நினைவுறுத்துகிறது வாழ்வின் சாரத்தை!!
“ஒவ்வொரு நாளும்
என்னைக் கடந்து போகிறேன்
நினைவுகளின்
சேகரத்தில்
மறுபடி மறுபடி
வாழ்கிறேன்.”
என்ற வரிகளில் கண்ணீரும் காய்ந்த தீற்றலின் உப்பாக மிளிர்கிறார். அனுபவத்தில் கவிதையில் வாழ்கிறார்! ஆமாம். அவரது வரிகள் மீண்டும் நினைவுபடுத்துகிறது இப்படியாக,
“அனுசரித்துப் போகும் படி
எதுவுமே இல்லை
தினசரி பிரயோகங்கள்
பிரகாசமில்லை
உட்புகுந்து வெளியேறாமல்
உயிர்ப்பதில் தொல்லை
கணங்களின் கனங்களை
சுமக்கும் நிலை
இல்லாது வாழ்தலே
இறகின் கலை”
இந்த வரிகளில் கணங்களின் கனம் எனக் குறிப்பிடுவது, பிரகாசமான இந்த வாழ்வு மங்கித்தான் கிடக்கிறது இப்படிப்பட்ட கவிதைகள் புதிய வண்ணம் தந்து பிரகாசிக்கின்றன வரிகள்!
” சரித்திரத்தை வாழ்க்கையோடு பொருத்துகிற பணியை இலக்கியம் செய்கிறது. ” – ஜெயகாந்தன் அவர்கள்
“ஏமாந்த கவிஞன் தானே
என்று ஏளனத்தை
தூக்கிக் கொண்டு
என்னருகே வந்து விடாதீர்கள்”
காரணத்தையும் சொல்லும் கவிதையில், கூர்மை.
“வெப்பத்தில் கூரெடுத்த
சூரியச் சொல்லொன்று
எப்போதும் என் இடுப்பில்
பத்திரமாய் இருக்கிறது”
என்ற வரிகள் சுயநலத்தில் ஊறிய ததும்பலை எச்சரிக்கிறது சூசகமாக.
“நாணலைப்போல
அசைந்தாடிக் கொண்டிருக்கிறேன்
ஒரு நாடகம் போல”
என்ற வரிகளில் நாணலும் சூரியப்பிறையின் கூர்மை. அன்பால் தணிந்து தன் வாழ்வை கடத்துகிறது என்பதை அத்தனை அழகாக அதேகவிதையில். வாசகர்களே உங்கள் வாசிப்புக்கு விட்டு வந்திருக்கிறேன் ஆறுவரிகளை! முடிந்தால் வாசித்துப் பாருங்கள் அவை உங்களுக்கான வாழ்வியல் கோபமாகக் கூட மிளிர வாய்ப்புண்டு.
பிறகு ஏன் ? என்ற கேள்விக்கு விடையும் அவரது 23ம் பக்க கவிதை தான்.
வாழ்வு ஒரு நடையின் முன்னோக்கிய பாதை. அது சிலருக்கு வழிகள் ஏற்கனவே செதுக்கப்பட்டது. சிலருக்கு நெருஞ்சிமுள் பாதையே பழகிவிட்டது. மரணம் சில நேரம் போதும் இந்த வாழ்வு என்ற சுயவிருப்பமாக நிகழும் போது பரிதவிப்பின் கூட்டம் சொல்லும் அதே வரிகள்… இவருடைய கவிதையில்.
“இனி எப்போதும் போக முடியாத படி பாக்கியாய் நின்றுவிட்டது “
-எனும் துயரம் அனைவரையும் தொற்றிக் கொள்கிறது. என்னை மிகவும் பாதித்த அந்தக் கவிதையில் ஒரு மனிதர் இருக்கிறார்.
“ஊருக்கே
தலைவாழை விருந்திட்டவர்”
-என்ற கவிதையில் துரத்தும் இந்த சீர்கெட்ட வாழ்வை விதியென்று பழிக்கும் மனிதர் நடுவே காலம் துயரம் தாங்காது. தன் கடைசி அஸ்திரத்தை அந்த மனிதர் மீது குறிபார்த்த நொடி.
அவரே அவரை விரட்டி விட்டார் எனும்போது கண்ணீர் பெருகாமலில்லை. வாழ்வின் பாடம் வலிநிறைந்தது. அந்த எல்லை எதுவென கவிதை காட்டி விட்டது.
“மரத்தின் மீது
சிறுவன் எறிந்த பந்து
பழமாகித்
திரும்புகிறது.”
என்றவரிகள், வாழ்வின் மீதான எதிர்பார்ப்பை மிகுதிப்படுத்துகிறது. வாழ்வதற்கான எதிர்படும் அதிசயங்கள் இன்னும் வாழ சுவைமிகுந்த ஏதோ ஒன்று நம்மை முன்னோக்கி தள்ளுகிறது. மரம் என்பது பேசாத மௌனத்தில் காலம் உறைந்து பசுமையாக தலையாட்டும் அதிசயத்திற்குள் தான் வாழ்வின் சுவை ஒளிந்திருக்கக்கூடும்.
கல்லெறியத் துணியாத பாசக்காரனவன் ஏதோ விளையாட்டில் பாத்திரமாய் வந்தவன் அவனும் விளையாடும் விளையாட்டில் எதிர்பாராத கனி சுவைபடுகிறது. கண்களில் பசியாற்றும் ஆற்றல் இருந்தாலும் இன்னும் பசி வரத்தான் செய்கிறது மரணம் வரை.
கிடைத்த பழங்கள் ருசிப்பதில்லை. என்றோ பூத்தகாலத்தில் மயங்கிய வண்டு நீங்கள் சுவைக்க முற்படும் போது அந்த வண்டு விடுதலை யடையலாம். புதிய வாழ்வின் சாரம் தேடி நீங்கள் சீ… இந்த வாழ்வு இப்படி புளிக்கிறதே என வெறுக்கவும் வாய்ப்புண்டு.
அதனால், விளையாட்டை விட்டவனுமில்லை காலத்தின் தோற்றம் அதிசயக் கவிதைகளை பரிசளிக்காமலும் இல்லை! வலியை எழுதாத கவிதையும் கவிதையல்ல!!
” சாவுதான் வாழ்வின் இறுதி லட்சியம் என்றாலும் பிணமாக நடிப்பவர்களுக்குத்தெரியும் அடிக்கடி சாவதைப் போல் நடிப்பது. மரணத்தை பகடி செய்வது என்று ” – இந்திரன் சொன்ன இந்த வாழ்வுதான் நம்மையும் வரிசையில் நிறுத்தியிருக்கிறது. இவரது கவிதை நூலின் தலைப்பில் அட்டைப் பட ஓவியத்தில்!!
“நீர் நிரம்பிய நினைவுகளுடன் நாளும் வந்து போகிறது வற்றிய குளக்கரைக்கு ஒரு மீன்கொத்தி ” – ஆ . உமாபதி அவர்கள். இப்படித்தான் இவரது கவிதைக்குள் நீங்களும் வந்து இளைப்பாறலாம் என்னைப் போல!!
வாழ்க தமிழ்!
வெல்க எழுத்து!!
பதிப்பகத்தார் அட்டைப் படம் முதல் நூலின் கடைசி பக்கம் வரை அருமையான வடிவமைப்பு.
வெளியீடு :
பரிதி பதிப்பகம்
அழைக்க- கைபேசி எண் : 7200693200
பக்கம் : 72
மதிப்பு : ₹120/
add a comment







