கட்டுரை

நூல் விமர்சனம் : நினைவுகள் நிரம்பிய வீடு

136views
நூலாசிரியர் : அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா அவர்கள்
நூல் விமர்சனம் : தயானி தாயுமானவன்
ஒரு கொத்துச் சாவிகள் என்னிடம் இருக்கின்றன.
வீடுதான் எங்களிடம் இல்லை.
‘துணையெழுத்து’ – எஸ். ரா
ஆம் … நினைவுகள் தான் மேலேறி …மேலேறி …வரும் நீர் போல …கூழாங்கல்லின் கனம் தான் நினைவுகள் …மேலேறி வரும் நீர் ,காகத்தின் தாகம் தீர்ப்பது போல …யாரிடமாவது பகிரும் நினைவுகள் தான் இதயத்தின் சுவாசமாக.
இப்படியாக, இந்தத்தலைப்பு “நினைவுகள் நிரம்பிய வீடு” என்றதும் நினைவில் நிற்ப்பது கைமாற்றிவிட்டதோ காலம் ?அல்லது நாம் நுழைய முடியாத நமது பால்ய கால வீடுகள் நமது கனவுகளில் நீர்மையின் ஓவியமாக வந்து போகும்… அனைவரின் நினைவிலும்.  எத்தனை வளர்ந்தாலும் வயதானாலும் அந்த பால்யத்திலிருந்து மீள்வதில்லை மனம்! இந்நூல் கவிஞரின் நான்காவது நூலாகும்.
கவிஞரின் கனவும் முதல்பக்கத்தில் வீட்டின் புகைப்படம் அச்சாகியுள்ளது. நமது வீடுகளின் பால்யகால ஒளியும் விளையாட்டுகளில் நாம் தான் காணாமல் போய்விட்டோம்.
நமது காலடிகள் ஓசை இன்னும் இதயத்துடிப்பாக ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.  கவிஞரை ஹைக்கூ உலகம் இந்த நூலின் வழியாக வரவேற்கிறது. இது இவரின் முதல் ஹைக்கூ நூல் என்பதை நம்பமறுக்கிறது மனம் .
காட்சிகளை வரிகளில் கொண்டு வரும் பாங்கை, வரிகளில் எங்கோ படிக்கும் வாசகன் அந்தக் காட்சியை உள்வாங்க முடிகிறது எனில் இதைவிட நூலின் வெற்றி எதுவாக இருக்கும் ?
உன் வார்த்தையும் ஒருவனுக்கு
தாகம் தணிக்கலாம்
உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில் விளக்கேற்றலாம்
போராட்டமே உன் புதையல்களைத் தோண்டி
எடுக்கிறது
போராட்டத்தினால் தான் நீ
துருபிடிக்காமல் இருக்கிறாய்
போராட்டமே உன்னை கூர்தீட்டும் சாணைக் கல்லாய் இருக்கிறது
– கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள்
(ஆலாபனை)
போராட்ட களத்தில் தான் பூக்கிறது இவரது முதல் கவிதை.
யுத்தகாலம்
கருகிக் கிடக்கிறது
ரோஜாத் தொட்டி
சமகால வாழ்வு…யுத்தம் நடைபெறுகிறது, வான்வெளியில் தடுத்து நிறுத்த முடியாத நாம் கையறு நிலையில் கண்ணீர் வடிக்கிறோம். கருகியது பள்ளிகள் அல்ல …
குழந்தைகள்.. கல்வி பயில வந்த பட்டாம்பூச்சிகள் இளம் வயது குழந்தைகள்… ரோஜாத் தொட்டி என்பது பள்ளியின் இருப்பிடம் . உடன்படிக்கைகள் தோற்றுவிட்டன. வல்லரசுகள் போரை நிறுத்துவதாக இல்லை.  மக்கள் தொகையை கட்டுப்படுத்த எங்கோ அழிக்கப்படும் மனிதர்கள். உலகமே அகதிகள் முகாமாக மாறிக் கொண்டிருக்கிறது, என்பதே உண்மை…என்கிறது இவரது முதல் ஹைக்கூ.

அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா
பூமியின் ஒரு எல்லையில் கொன்றொழிக்கப்படும் மானுடம் அநாதையாக்கப்பட்ட சிறுமிகள் சிறுவர்கள் பசியில் துடிப்பதை கண்டு இரசிக்கும் முகமூடியிட்ட வல்லரசுகள் மண்ணை விட்டு வேரோடு பிடுங்கப்பட்ட வாழ்வுதான் அகதிகளின் கண்ணீர்.
ஆயுத வியாபாரிகளின் கல்நெஞ்சம்.. கொஞ்சம் நிவாரணப் பொருட்களைத் தருவதாக தம்பட்டம் அடிக்கிறது ஊடகங்களில்.  கவிஞரின் ஆறாதமனமே ஹைக்கூவாககருக் கொண்டது போலும்.
அமைதிப் பேரணி
ஆயிரக்கணக்கில் மக்கள்
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு
முரண்களின் எதுகை மோனைகளில் கலவரம் வராது தடுக்க முரணே காவலாக. இதுதான் வாழ்வின் முரண்.  இந்த அழகான கவிதை அமைதியாக கடந்து போகிறது ஆயுத காவலுடன்.
ஆடிக் கொண்டேயிருந்தாலும்
அலுப்பே தெரியவில்லை
காதணிக்கு.
நுட்பத்தின் அழகியல் சார்ந்த இந்த ஹைக்கூ தொங்கட்டான் (காதணிஅணிந்த பெண்களுக்கு மகுடம் சூட்டும் ஹைக்கூ. இரசிப்புத்தன்மையை நமக்கும் கடத்தும் பாங்கு தான் இவரின்எழுத்து.
பொருட்களெல்லாம் எடுத்தும்
நிரம்பியே இருக்கிறது
நினைவுகளால்
வாடகை வீடு.
உண்மைதான் தட்டுமுட்டு சாமான்களோடு கடந்துவிடும் வாழ்வு. எங்கோ ஒரு தெருவில் ஒளிந்து கொள்கிறது.
நினைவுகள் மட்டும் ஒழிவதில்லை! நினைவுகளின் கூட்டில் ஓவியமாய் கரையும் நமது வாழ்வின் நினைவுகளின் ஈரம் கலையாத காட்சியாக உயிர் உள்ளவரை உலவும் என்பதில் ஐயமுண்டா?
கிழிந்த சட்டையும்
காவல் காக்கிறது
சோளக்கொல்லை பொம்மை
-இந்த ஹைக்கூ கிழிந்த சட்டை கூட காவலாகிறது எனும் போது காக்கிச் சட்டை காவலுக்கு கௌரவம் அல்லவா? நமது வாழ்வியல் முரண்களில் அறைந்து செல்கிறது ஹைக்கூ நம் மானுடத்திற்கு பலகேள்விகளை வைக்கிறது இந்தஹைக்கூ.
ஆண் என்பவனே பெண்களின் பாதுகாவலன். முகம் அறியாத ஆண்கள் கூட வழித்துணையாக இரவு நேரங்களில் கிராமத்தை அடைய உதவியதுண்டு.

முகம் அறியாத சகோதரர்கள், அரவமற்ற வழிகளில் ஊர் எல்லை வரை விட்டதுண்டு. வெள்ளந்தியான மனிதர்கள் நிரம்பிய நமது சமூகம் காணாமல் போனது ஏன்? இப்படி ?என்ற முரண்களைக் கடக்க முடியாமல் தவிக்கிறது மனது.

புத்தனைத் தொடாமல் ஒரு ஹைக்கூ நூல் எழுத முடியுமா? என்றால் இல்லை என்பது தான் கவிஞரின் பதிலும்.
இருளுக்குள்
தொலைந்த நிழல்
புத்தனின் ஞானம்
புத்தனின் நிழல் இருளுக்குள் தொலைந்தாலும் எல்லோர் மனதிலும் ஒரு சுடராக வெம்மையேற்றுகிறான்.  அமைதியாக ஒரு புன்னகையை வீசி நம்மை சுயபரிசோதனையில் தள்ளுகிறான் என்பதே உண்மை!
அமைதியாக இரு…உன்னை உணர்ந்தாயா? மனதை அமைதிப்படுத்து. எல்லாம் சரியாகும் அதுவரை பொறுமையாக இரு என்பது வாழ்வுக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பொருந்தும் இப்படியாக மனதில் வெளிச்சத்தைப் பரப்பும் ஹைக்கூ பூக்களை மலர வைத்திருக்கிறார் தன் எழுத்துக்களால்.
பிரகாசிக்கட்டும் ஞானம்! கூர்தீட்டிய வரிகள் … அறிவை உரசும் ஹைக்கூ. சிந்தனைகள் செழிக்கட்டும்! எழுத்து சிறக்கட்டும்!
புதுக்கோட்டையில் நடந்த ஐந்தாம் தமிழ்ஹைக்கூ மாநாட்டில் மே – 17 அன்று அகநி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.
வாழ்த்துகள் கவிஞரே!
பதிப்பகம் – அகநி பதிப்பகம்
நூல் மதிப்பு _₹100
நூல் வடிவமைப்பு சிறப்பு. இன்னும் பக்கங்களை கூட்டியிருக்கலாம்.  64 – பக்கங்களோடு முடிவுற்றது.  இன்னும் சில பக்கங்கள் நீண்டிருக்கலாம்.

தயானி தாயுமானவன்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!