கட்டுரை

நூல் விமர்சனம் : ‘ இளமை தொலைந்த போது..’— கவிதை தொகுப்பு நூல்.

444views
நூலாசிரியர்: ‘சோழா புகழேந்தி’
பல ஆண்டுகள் கவிதை உலகில் கோலோச்சிய போதும், பல பத்திரிகைகள் இவரிடம் கவிதை வாங்கி பரிசளித்த போதும், 1982 ஆம் ஆண்டு முதல் இலக்கிய பொறுப்பு வகித்து கவி அரங்கில் செயல்பட்ட போதும், இந்த கவிஞருக்கு ஒரு குறை மனதில் தோன்றியிருக்கிறது. அது என்னவென்று அவரே இப்படி கூறுகிறார் : ‘ஆதார் இல்லாத மனிதன் அரை மனிதன்’.. என்பது போல கவிதைத் தொகுப்பு நூல் வெளியிடவில்லை என்றால் எனக்கே ‘கவிஞன்’ எனும் அங்கீகாரம் கிடைக்காது என்று நினைத்ததால், இதோ எனது கவிதை தொகுப்பு நூல் உங்கள் கைகளில் தவழ்கிறது..’ என தனது கவிதை நூல் வெளியீட்டுக்கான காரணத்தைக் கூறுகிறார் கவிஞர்.
பல தலைப்புகளில் கவிதைகளை எழுதி இருக்கிறார். நூலின் தலைப்பான ‘இளமை தொலைந்த போது..’ என்ற தலைப்பில்…
‘ஆடித் தீர்த்த மோகம் ஆசையோடு நிற்கிறது,
ஊடிக் கலந்த பொழுது உறக்கமின்றித் தகைக்கிறது’…
……
‘மாடி மனை வாசல் கூட மகிழ்ச்சி தர மறுக்கிறது,
மூடி வைத்த இளமை முகம்சுளிக்க வைக்கிறது’…..
என் எழுதி வந்த கவிஞர், வருங்கால முதியோர்களுக்கு (அதாவது நிகழ்கால வாலிபர்களுக்கு) சில வரிகளைத் தருகிறார்..
‘வாடிப்போகும் முன்னே வாலிபத்தைப் பேணிடுங்கள்,
கோடி கொடுத்தும் வாராது கொஞ்சும் இளமைக் காலம்’…
என்று முத்தாய்ப்பாய் முடிக்கிறார்.
கவிஞர்களுக்கே உரிய அந்தத் தெனாவட்டும் அறிவுரையும் இவரது கவிதைகளில் தெரிகிறது..
ஆம்…’போர் இல்லா உலகம் செய்வோம்’ என்ற தலைப்பில் கவிதை எழுதிய இந்தக் கவிஞர் இஸ்ரேலின் அடாவடி போக்கையும், குழந்தைகளை சுட்டுத்தள்ளும் அராஜகத்தையும் எதிர்த்து எழுதுகிறார்.
‘என்ன நடக்குது அங்கே,
நெஞ்சு துடிக்குது இங்கே,
இஸ்ரேல் ஆட்சிக்கு இதயம் இல்லையா?,
இரக்கத்திற்கும் தேவை எல்லையா?,
பச்சிளம்குழந்தைகள் பசியில் துடிக்க,
பட்டுன்னு சுட்டுத் தள்ளுவது சரியா?!.
என எழுதிவிட்டு, கடைசியில் நெத்தி பொட்டில் தனது கவிதையால் சுட்டுத் தள்ளுகிறார் இப்படி : ‘ஆசைகள் இன்னும் அடங்கவில்லையா?,
ஆறடிதான் உனக்கு எண்ணவில்லையா?,
போர் இல்லாத உலகம் எங்கே?,
போவோம் நாமும் நாளை அங்கே!’
என நம் அனைவரையும் போரில்லா உலகம் நோக்கி அழைக்கிறார்.
தமிழ், நாடு, திருக்குறள், வள்ளலார், அன்னை தெரசா, அறிஞர் அண்ணா, கலைஞர், கவிஞர் வாலி, சுவாமி சங்கரதாசர், சிங்காரவேலர் என ஆளுமைகளையும் தமிழ் கூறும் நூல்களையும் குறித்தும் கவிதைகளில் எழுதி இருக்கிறார்.
இவரது கவிதைகளில் சமூக நல சிந்தனைகள் பிரதிபலிக்கின்றன.
பேருந்து நடத்தினரின் சிரமமும, இவரது கவிதையில் இடம் பெற்றிருப்பது சிறப்பு. பேருந்து நடத்துனர் சில்லறையின்றி தவிப்பதும் பேருந்திற்குள் நிற்கும் கூட்ட நெரிசலில் பயண சீட்டு தருவதின் சிரமமும் இவருக்கு பரிதாபத்தைத் தருகின்றன.
‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்ற எண்ணத்தை கவிஞர் சோழா புகழேந்தி தன் மனதிற்குள் உள்வாங்கி இருக்கிறார். அதனால் தான் ‘மதுவுக்கு மரணம் தா!’ என்கிற இவரது கவிதையில் அரசாங்கத்தையோ அல்லது சமூகத்தையோ குறை கூறாமல், ‘மதுப் பிரியர்களிடமே’ அந்தக் கோரிக்கையை வைக்கிறார்..’மது வேண்டாம் என ஒதுக்கிவிட்டு, வேதவாக்கா எடுத்துக்கிட்டு, மதுவுக்கு மரணத்தைத் தந்திடு, நல்ல மனுசனா பூமியில் வாழ்ந்திடு!’, எனக் கூறுகிறார்.
மொத்தத்தில் இந்நூல் சமூகத்தின் அனைத்து விஷயங்களையும் பேசுகிறது.
‘சோழா புகழேந்தி’யின் ‘இளமை தொலைந்த போது..’ என்ற இந்தக் கவிதை நூல் தொகுப்பு, இவருக்கு கவிஞர் என்ற பட்டத்தை தந்து விட்டது.
…விழிகள் பதிப்பகம்
8/M 139, 7வது குறுக்கு தெரு திருவள்ளுவர் நகர் திருவான்மியூர் விரிவு சென்னை 600041
944265152 / 7397283447.
விலை ரூ.260
கவிஞர் தொடர்பு எண் : 70949 14328
விமர்சனம் : வி.களத்தூர் கமால் பாஷா

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!