150views
– தயானி தாயுமானவன்
இந்தப் புத்தகம் சிறுகதை உலகில் ஒரு மைல்கல் ஆகும். ஒவ்வொரு மனிதனும் தன் கற்பனைச் சிறகைக் கொண்டே பறக்கிறான் எழுத்து வழியாக ஓவியம் வழியாக. ஆனால் இந்தப்புத்தகம் தன் தாதியின் (அப்பா -பாட்டி) வளர்ப்பும் அவரின் வாய்வழி கேட்ட பஞ்சதந்திர கதைகள், நீதிநெறி கதைகள் , ராஜா ராணிக் கதைகள், பேய்க்கதைகள், காட்டு விலங்கு கதைகளைக் கேட்டு வளர்ந்த ஒரு பேரனின் …எழுத்து …வெற்றிநடை போடுகிறது. காரணம் வலியும் வாழ்வும் உழைப்பின் நிமித்தம் வெளிநாட்டு வேலை என்றாலும் தனிமையின் கொடுமை நமது மக்களின் பார்வை, நாம் சந்திக்கும் மனிதர்கள் நம்மை நடத்தும் விதம் என நம்மை செதுக்குவது அவர்கள் தரும் அனுபவம்தான்…
சகோதரரின் முத்தான கதைகள் 20. சகோதரர் லி. நௌஷாத் கான் தந்த அருமையான எழுத்து நடை எளிமை, உண்மையின் உறவியல், நேர்மையின் பாதை, நாம் அறிந்திடாத இசுலாமிய மக்களின் வாழ்வியல், பின்னிப்பிணைந்துள்ள சகோதர பாசம் மதம் தாண்டிய உறவுகள் இப்போது உறவுகளாகவே மாறிவிட்டது.
அறியாமையிலிருந்து விழிப்புக்கு வர வேண்டிய ஊடகங்கள் பிரயோகிக்கும் ஒரு சொல் ….எப்படி
மேல்வாரியாக ஒரு சமுதாயத்தையே பழிச்சொல் கொண்டு தூற்றுவது அபத்தம்…பாசங்களின்
வேர்களில் பின்னிக்கிடக்கும் உறவுகளை மதம் கொண்ட மனிதம் ஒற்றை வார்த்தையில் விட்டெறியும் போது…காலமும் சூழலும் அதை வெல்லும்போது இனவாதம் மறைந்து தன் கண்ணையே நட்பிற்கு தந்த பின்னே….மானுடம் தழைக்கும் கதைகள். ( கதைகளல்ல – உறவுகளின் உயிர்ப்பு) மொத்தம் இருபது கதைகள். இதில் மனித மனத்தின் குரூரம்… முதலாளிக்கும் தன் கீழ் வேலை செய்யும் தனது பணியாளையும் காலதாமதமாக ஊருக்கு பாஸ்போர்ட் டிக்கெட் எடுத்துத்தரும் வன்மம் … அவர்களின் பெருங்கனவை தன் குழந்தையை பார்க்காது பணி நிமித்தம் இரண்டேகால் வருடம் தவிக்கும் அந்த இளைஞன் அனஸ் வஞ்சகம் அறியாத வாழ்வு. பெருநாளுக்கு தன் தாயோடு கழிக்க முடியாத அந்த நாள் தாய்மையின் ஏக்கம்.. என விரிகிறது, வாழ்வு.
குழந்தைகள் வளர்ந்த பிறகு தனது தந்தையின் வழக்கமான எளிமையான வாழ்வை வெறுப்பது இப்போது … கெளரவமாகிவிட்டது. இதில் ஜாஹிர் என்ற இளைஞனின் மனப்போராட்டம் தந்தையின் பதில்…அருமை. மனதை ஏதோ செய்யும் கதை முதுமை ஒரு மனிதனை என்ன செய்யும்? ஏனங்குடி மச்சானும் வெள்ளை குர்மா ஆணமும் கதை கண்களில் நீரை வரவழைத்தது. நம்பிக்கை என்பதை நாம் ஏன் மாற்ற வேண்டும்? அது அறியாமையில் இருந்து விழிப்புநிலை. எனினும் அது அவர்களின் வழிவழி நம்பிக்கை என்பதை கற்சித்திரமாக்கிவிட்டார்…தம்பி லி. நெளஷாத் அவர்கள். சர்வர் அலியக்கா – கனவுகளின் கோட்டை தகர்ந்தாலும் தந்தையின் கடின உழைப்பை மறக்காது அந்த பிம்பத்தில் தன் தந்தையை காணும் மானுட அன்பு எல்லோருக்கும் அமையாது. திருமணம் முடிந்தவுடன் மூன்றாவது மனுஷியாக மாறிவிடும் தாய்… முதுமையோடு அவளின் வேலை பளு அமைதியாக வாழ வேண்டிய தருணத்தில் வேரோடு பிடுங்கப்பட்ட வாழ்வில் மகனுக்கு அவளின் துப்பட்டி எத்தனை பாசத்தை அள்ளித்தருகிறது. இருபுறமும் ஊசாலாடும் ஆண்மகனின் மனநிலை விட்டுக்கொடுத்து செல்லும் தாய்… இதுவே இந்த நூலின் தலைப்பாக “அம்மாவின் துப்பட்டி ” – மகுடம் சூட்டும் கதை. அயல்நாட்டு அன்னப் பறவைகள் உயிர் ஒன்று – வாழ்வோ இரண்டு தவித்தலையும் மனதை எழுத்தில் வடித்த தம்பிக்கு வாழ்த்துகள். “நீரும் சோறும் ” இன்றைய இளைய தலைமுறை அறிய வேண்டிய வாழ்வியல். வெள்ளாயி கிழவியும், காதர்பாயும் … மனதில் வரைந்த ஓவியங்கள்.
ஆரஞ்சு மிட்டாய் கதை… மெல்லிய நினைவாய் வண்ணங்களில் கோலமிடுகிறது கண்களில் நீர்த்திரை.
நெய் அதிரசம் மறக்கவியலா சுவையோடு. இதே போல பேய்க்கதை என் அனுபவத்திலும் உண்டு. இரவு எண்ணெய் கொதித்து பரிகாரம் வாசனைக்கு …பிசாசுகளுக்கு உகந்ததாம். இதுவும் நான் கேள்விப்பட்டதுண்டு. இரவு ஜன்னல் திறந்திருக்க மாமிச குழம்பை உச்சுக்கொட்டி சாப்பிட்ட சமையலறை சத்தமும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இடுப்பில் அருணாக்கயிறும் இல்லாமல் சுழல்காற்றில் மதிய வேளை சுற்றும் சருகை கிள்ளிப்பார், இரத்தம் துளிர்க்கும் ஆனால் போய்விடாதே உயிருக்கு ஆபத்து என்ற என் அனுபவமும் இதுவும் ஒன்றாக உணர்ந்தேன். சிறு வயது – களத்து மேட்டில் சுழற்காற்றை பார்த்து பயந்திருக்கிறோம். ஆனால் தாதியே காலமான பின்பே இவரிடம் நிறைய கதை பேசியிருக்கிறார் என்பதை அறிந்து அதிர்ச்சி மேலிட்டது. புத்தகம் பல சுவைகளையும் தரும் வேறுவேறு திசைகளின் மாந்தர்களை கண்டேன். எளிய எழுத்து எஸ். ராவின் துணையெழுத்தை ஒத்த… மனிதர்கள். வாழ்க எழுத்து.
அனுபவம் மிளிர்கிறது கதைகளில் . அழகிய வடிவத்தில் அட்டைப் படம் அசத்தல். மெளவல் பதிப்பத்திற்கு நன்றி.
நூல் மதிப்பு : ₹ 150
தொடர்புக்கு – 97877 09687, 94888 40898.
– தயானி தாயுமானவன்
add a comment







