தமிழகம்

நாகம்பட்டி கல்லூரியில் சுந்தரனார் பிறந்தநாள் விழா மற்றும் ‘கரிசலில் தோன்றிய விதைகள்’ நூல் வெளியீட்டு விழா

137views
தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் சுந்தரனார் பிறந்தநாளை முன்னிட்டு கரிசலில் தோன்றிய விதைகள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளி/கல்லூரி மாணவர்களின் சிறுகதைகளைத் தொகுத்து நூலாக (ISBN) வெளியிட்டனர். 326 கதைகளில் 123 கதைகளை தேர்வு செய்து நூலாக்கியுள்ளனர். நூல் பதிப்பாசிரியர் முனைவர் இரா. சேதுராமன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் வெ. இராமதாஸ் தலைமையுரை ஆற்றினார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி இயக்குநர் முனைவர் அ. வெளியப்பன் நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். அவர் உரையாற்றுகையில், இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் மாணவர்களின் மனதில் உள்ள பல்வேறு உணர்வுகளையும், எண்ணங்களையும் நம்மால் உணர முடிகிறது. சில கதைகள் நம்மைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன. ஒவ்வொரு கதையும் ஒரு புதிய உலகத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
மாணவர்களின் எழுத்தில் உள்ள நேர்மையும், ஆர்வமும் நம்மை வியக்க வைக்கின்றன. அவர்களின் சிந்தனைகள் ஆழமாகவும், நுட்பமாகவும் இருக்கின்றன. அவர்கள் எதிர்காலத்தைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும், நம்மைப் பற்றியும் நாம் சிந்திப்பதற்குத் தூண்டுகின்றன. இத்தகைய முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது என்று பேசினார். கோவில்பட்டி பால சாகித்திய புரஸ்கார் விருதாளர் எழுத்தாளர் கா. உதயசங்கர், சென்னை பயண எழுத்தாளர் ப. சுதாகர் ஆகியோர் மாணவர்களின் கதைகள் பற்றி மதிப்புரை நிகழ்த்தினர்.
கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் தாமோதரக்கண்ணன், செயலாளர் ராஜமாணிக்கம், ஓட்டப்பிடாரம் முன்னாள் ஊராட்சி ஒன்றியத் துணைப் பெருந்தலைவர் காசிவிஸ்வநாதன், கோவில்பட்டி புனித ஓம் கல்வி நிறுவன தாளாளர் லட்சுமணப்பெருமாள், முன்னாள் ராணுவ வீரர் முத்துராஜ், நாகம்பட்டி சேதுபதி, கப்பிகுளம் அரிச்சந்திரன், உடற்கல்வி இயக்குநர் கணேசன் ஆகியோர் இளம் மாணவப் படைப்பாளர்களை வாழ்த்திப் பேசினர்.
கல்லூரி அளவில் முதல் பரிசினை நாகர்கோவில் தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி மாணவி எழுதிய நான் ‘அவன்’ இல்லை சிறுகதையும், இரண்டாம் பரிசினை சென்னைப் பல்கலைக்கழக மாணவர் ச. ஜாஹீர் உசேன் எழுதிய அம்மாவுக்கு கடிதம் சிறுகதையும், மூன்றாம் பரிசினை திருவெல்வேலி ராணி அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி எம். சுகிர்தா எழுதிய கற்பு என்னும் கதையும், பள்ளி மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டியில் முதல் பரிசினை தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி மாணவி எழுதிய சே. தர்ஷினி காலம் பொன் போன்றது என்னும் சிறுகதையும், இரண்டாம் பரிசினை திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ரா. ருத்ரபிரியா எழுதிய வெற்றியின் ரகசியம் என்னும் கதையும், மூன்றாம் பரிசினை கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அ. ஹாி நாராயணன் எழுதிய எதிா்பாரா உதவியும் ஏற்றம் தந்த வாழ்வும் என்னும் கதை பெற்றன.
சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு 5000, 3000, 2000 வீதம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியாக சிறப்பு விருந்தினர்கள் வழங்கினார்கள். பிற மாணவர்களுக்கு நூல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இணைப்பதிப்பாசிரியர் முனைவர் மு. பவானி நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!