ஆன்மிகம்

ஸ்ரீ மணவாள மாமுனிகளே இன்னுமொரு நூற்றாண்டிரும்!

120views
ஸ்ரீவைஷ்ணவ குரு பாரம்பரியத்தின் கடைசி ஆச்சாரியராகக் கருதப்படும் மணவாள மாமுனிகள், ஆதிஶேஷன் மற்றும் பகவத் இராமானுஜர் அவதாரமாக, நம்மாழ்வார் அவதரித்த அதே திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியிலேயே அவதரித்தார்.
மணவாள மாமுனிகள் 1370 ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரியில், திருநாவீருடைய பிரான் தாசரண்ணர் மற்றும் ஸ்ரீரங்க நாச்சியார் தம்பதியனருக்கு, ஐப்பசி மாதம் திருமூலம் நட்சத்திரத்தில் அழகிய மணவாளன் என்றப் பெயருடன் பிறந்தார்.
தக்க வயதில் உபநயனம் நடந்ததும், தந்தையே ஆச்சர்யனாக ஏற்று, வேதம் உபநிஷதம் அனைத்து ஸாஸ்திரங்களையும் கற்று ஆசார்யனின் திருவடிகளையே சரணாகதி என்று பூஜித்து வாழ்ந்து வந்தார். திருமணம் ஆனபின் இல்லற வாழ்வு மேற்கொண்டு ஸ்ரீரங்கம் வந்து அரங்கனின் கைங்கர்யங்களோடு, ஆழ்வார்களின் பாடல் தத்துவங்களை அடியார்களுக்கு காலஷேபங்கள் மூலம் உபதேசித்து வந்தார். தெய்வீக சிந்தனையில் வாழ்ந்து வந்திருக்கும் சமயம், அதிக காலம் அவரது தந்தை பூமியில் வாழவில்லை’

பாண்டிய மன்னனின் அரசவையில் ஒரு மந்திரியாக இருந்த வித்வான் ஸ்ரீ சைலேசருக்கு, ஆழ்வார்களின் பாசுரங்கள் மேல் வந்த பற்றால் ஆழ்வார்களின் பாசுரங்களைத் தேடி அலைந்து படித்து மகிழ்ந்து, நம்மாழ்வார் எம்மாழ்வார் என்று அவர் ஸ்மரணையாகவே வாழ்ந்து வந்த அவரை பெருமையாக திருவாய் மொழிப் பிள்ளை என்று அழைக்கலானர்.
ஆச்சார்யனின் மறைவினால் வாடிய இவர், திருவாய்மொழிப் பிள்ளை ஸ்வாமியை தேடி. அவர் பாதங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு, சிஷ்யரானார்.
ஸ்ரீ ராமானுஜரின் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை உலகறிய வைக்கப்போகிற தெய்வீக புருஷன் இந்த அழகிய மணவாளனே என்று ஏற்றுக் கொண்டார் திருவாய்மொழிப் பிள்ளை.
வர போகும் வைஷ்ணவ கோடிகளுக்கு வழிகாட்டபோகும் அழகிய மணவாளன், ஒரு ஆதிசேஷன், ஒரே நேரத்தில் ஆயிரம் கலைகளையும், ஞானத்தையும் க்ரஹிக்கும் சக்திப் படைத்தவன் என்று போற்றி சகல சாஸ்திரங்களையும் கற்பித்தார் திருவாய்மொழிப் பிள்ளை.
இந்த கைங்கர்யங்களுக்கு இல்லறம் தடையாக இருப்பதை உணர்ந்து துறவறம் பூண்டு மணவாள மாமுனிகள் என்ற நாமம் பூண்டார். தன்னுடைய குருவான திருவாய் மொழிப்பிள்ளையின் உத்தரவுப்படி ஆழ்வார்கள் நூல்களை ஆய்வு செய்தப்படி பல திவ்ய தேசங்களுக்கு யாத்திரை செய்தார். அவ்வமயம், காஞ்சியில் ஓராண்டு காலமும், அதேபோன்று ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீ ராமானுஜரை தரிசித்து அவரின் ஸ்ரீ பாஸ்யத்தை பிரவசனம் செய்தார். இன்றும் மாமுனிகள் காலட்சேபம் செய்த இடத்தில் உள்ள கம்பத்தில் அவரது திருவுருவத்தை காணலாம்.

ஸ்ரீரங்கநாதரே மணவாள மாமுனிகளின் காலட்சேபத்தின் தெய்வீகத்தை உணர்ந்து தன்னுடைய குருவாக வரித்து “ஸ்ரீசைலேச தயாபத்ரம் தீபக்யாதி குணார்னவம், யந்திர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாத்ரு முநிம்” என்ற தனியனை அளித்து கௌரவித்தான். மேலும் குருதட்சிணையாக தன் ஆதிசேஷ ஆஸனத்தில் அவரை அமர்த்தி இவரின் புகழ் உலகறிய செய்தார். இதனால் தான் மணவாளமாமுனிகள் ஆதிசேஷனில் அமர்ந்த நிலையில் திருவுருவங்கள் கோவில்களில் உள்ளன.
வைணவத்தை வளர்க்க தமக்குத் துணையாக எட்டு மஹனீயர்களை நியமித்தார். அவர்களே “அஷ்டதிக் கஜங்கள்’ என்று பெருமை பெற்றனர். 1. வானமாமலை ஜீயர், 2. பட்டர்பிரான் ஜீயர், 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர், 4. கோவில் அண்ணா, 5, பிரதிவாதி பயங்கரம் அண்ணா, 6. எறும்பியப்பா, 7. அப்பிள்ளை, 8. அப்புள்ளார்.
மணவாளமாமுனிகள் நமக்கு 19 கிரந்தங்களை அருளி உள்ளார்.
வியாக்யான கிரந்தங்கள்8:
1. ஸ்ரீ வாகன பூஷணம், 2. முமுக்ஷுப்படி, 3. தத்த்வத்ரயம்
4. ஆசாரிய ஹிருதயம் 5. ஞானசாரம், 6. பிரமேய சாரம், 7. பெரியஆழ்வார் திருமொழி, 8. ராமானுஜ நூற்றந்தாதி
பிரமாணத் திரட்டு எனும் 3 கிரந்தங்கள்:
1. ஈடு, 2. ஸ்ரீ வாகன பூஷணம், 3. தத்த்வத்ரயம்
சொந்த கிரந்தங்கள் 8.
1. உபதேச ரத்னமாலை, 2. திருவைமொழி நூற்றந்தாதி, 3. இயல்ச்சாறு, 4. திருவாராதனை கிரமம், 5. யதிராஜ விம்சதி, 6. தேவராஜ மங்களம், 7. ஸ்ரீ காஞ்சி தேவப்பெருமாள் ஸ்தோத்திரம், 8. ஆர்த்தி பிரபந்தம்.
ஸ்வாமி மணவாள மாமுனிகள், தன் ஆசார்யன் ஆணைப்படி நாலாயிர திவ்யபிரபந்தத்தை தமிழில் பிரச்சாரம் செய்வதையே தன் வாழ்நாள் குறிக்கோளாக செயல்பட்டார்.
”மாற்றற்ற செம்பொன் மணவாள மாமுனிகள் வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே”
ஆம், மணவாள மாமுனிகள் அவதரித்ததால் தான் இன்று தமிழ் பிரபந்தங்கள் ஆற்றிலே கரைத்த புளியாய் போகாமல் பக்தர்களின் சக்தியாய் திகழ்கின்றன.
மாமுனிகள் பல கிரந்தங்களை வியாக்யானம் செய்து, பல கிரந்தங்கள் அருளி பெரிய ஜீயர் என்ற நிலையை பெற்றார்.
நான்குநேரி வானமாமலை மடத்தில், பிரதி வருடம் மாமுனிகளின் அவதார தினமான ஐப்பசி திருமூல நட்சத்திரம் அன்று, இன்றும் வானமாமலை ஜீயர், மணவாளமாமுனிகள் அணிந்திருந்த மோதிரத்தை, தாம் அணிந்து கொண்டு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் கொடுக்கிறார்.
அடியார்கள் வாழ! அரங்கநகர்வாழ! சடகோபன் தண்தமிழ் நூல்வாழ! கடல்சூழ்ந்த மண்ணுலகம் வாழ! மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்”
வைணவ உலகில் மணவாள மாமுனிகள் உலகுக்கு அளித்த ஞானத்திற்குச் சான்றாக மணவாள மாமுனிகள் மேலும் ஒரு நூற்றாண்டுகாலம் வாழ வேண்டும் என்று போற்றும் பாடல், தினமும் வைணவகோயில்களில் எதிரொலிகின்றன என்பதே அவரின் சேவைக்கு சான்று.
Dr. பத்ரி நாராயணன்
குருஜி சத்யப் பிரணவ யோகி
9551555898

1 Comment

  1. மணவாள மாமுனிகள் குறித்த எளிமையான அழகான விளக்கம். நானும் வானமாமலையைச் சேர்ந்தவள் தான். நன்றி

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!