ஆன்மிகம்

நம் வாழ்க்கையை பரிமாற்றும், முருகபெருமானின் சூரசம்ஹாரம்.

243views
சூரசம்ஹாரம், முருகபகவானின் வெற்றிகரமான போராட்டத்தை குறிக்கும் நிகழ்வாகும்.
அசுரர்களின் குலத்தைச் சேர்ந்த மாயா என்ற பெண் அசுரர்களின் நோக்கத்தைப் பூர்த்தி செய்ய, தவறான வழியில் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் என்ற மூன்று அசுர மகன்களை பெறுகிறாள். அவர்களின் தபஸ்யத்தின் காரணமாக பல வரங்களை பெற்றனர். சூரபத்மன் தான் யாராலும் வெல்ல முடியாத சக்திப்பெற்றதை உணர்ந்தவுடன், தேவர்களை பயமுறுத்தத் தொடங்கினர். அவர்கள் தேவலோகத்தை வென்று தேவதைகளை தங்கள் விருப்பத்திற்குக் கீழ்ப்படியச் செய்தார்கள். சூரபத்மன் பெற்ற வரத்தின்படி, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரால் அவனது அட்டூழியங்களை தடுக்க முடியாது என்பதை தேவர்கள் அறிந்தனர். அந்த வரத்தின்படி சிவனின் இனி பிறக்கும் மகனின் சக்தியால் மட்டுமே சூரபத்மனை அழிக்க முடியும். இதை உணர்ந்த தேவர்கள் பிரம்மா மற்றும் விஷ்ணுவின் வழிகாட்டுதலுடன், சிவன், பார்வதி தஞ்சம் அடைந்து வழிகாண வேண்டினர்.

சிவபெருமான் உடனே அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் தனது நெற்றிக் கண்களைத் திறக்க, (ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது.
அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதிதேவி கட்டி அணைக்க, அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப்பெருமானாகத் தோன்றினார். இத்திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார். உடனே, முருகப்பெருமானுக்கு பார்வதி தேவியார் தன் அதிசக்தி மிகுந்த வேலை கொடுத்து, சூரபத்மனுக்கு எதிரான போரில் வெற்றிப் பெற வாழ்த்தி அனுப்பினார்.
பார்வதி தேவியின் பாத சிலம்பில் இருந்து தோன்றிய நவ சக்தியர்களிடம் இருந்து நவ வீரர்களான வீரபாகு தேவர், வீரகேசரி, வீர மகேந்திரா, வீர மகேசுவரர், வீர புரந்தரர், வீராக்கதர், வீர மார்த்தாண்டர், வீராந்தகர், வீர தீரர் மற்றும் லட்சம் வீரர்களும் தோன்றி முருகனின் படை தளபதிகளாக விளங்கினர்.

தேவசேனாபதி முருகனின் படை போருக்கு கிளம்பியவுடன், வெற்றி சங்கு முழங்கியது. விண்ணில் இருந்து மலர் மாரிபொழிந்தது. ஆறு நாட்கள் தொடர்ந்து நடந்த தேவ-அசுர போரில். சூரபத்மன் பல மாயைகளைப் பயன் படுத்தினான். இறந்த அசுரர்களை எழுப்பினான். தனது குருவான சுக்ராச்சாரியாரிடமிருந்து கற்றுக்கொண்ட மாற்றத்தை உருவாக்கும் திறன் கொண்ட சக்தியின் உதவியுடன் பறவைகள் மற்றும் விலங்குகளின் பல்வேறு வடிவங்களில் போரிட்டான்.
கடைசியாக சூரபத்மன் ஒரு ராட்ஷச பறவையான சக்ஸவஹம் வடிவத்தை எடுத்து. அதிலும் தோற்று மரத்தின் வடிவில் மாறுவேடமிட்டான். முருகபெருமான் தனது தாய் கொடுத்த சக்தி வேலால் மரத்தை / சூரபத்மனை இரண்டாகப் பிளந்து தன் வாகனமான மயிலாகவும், சேவலாகவும், மாற்றினார்.
இந்த பிரபஞ்சம் இதுவரை கண்டிராத கடுமையான போரில், முருகப்பெருமான் வெற்றிபெற்றது என்பது, என்றும் தர்மமே வெல்லும் என்பதை பறைசாற்றுகிறது. நம் சனாதன தர்மத்தை கடைப்பிடிப்பது மூலம், தெய்வத்தின் அருளால், நம்மை சுற்றி உள்ள கெட்டசக்திகளை (மாயை & அகங்காரம் l), தெய்வீக சக்திகள் அழித்து நமக்கு நல் வெற்றி வாழ்க்கை அருளும் என்பது சத்தியமே! ஹர ஹர மஹாதேவ்! ஓம்சக்தி! ஓம் சரவண பவாய நமஹ.
சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்தார். அதுதான் திருச் செந்தூர் கோவில். மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கம் உள்ளது. முருகன் செய்த உதவிக்கு கைம்மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடு வெற்றிவிழா நிறைவு பெறுகிறது.
Dr. பத்ரி நாராயணன்
குருஜி சத்யப் பிரணவ யோகி
9551555898

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!