88
அழுத்தமான முறையில், இறைவேண்டலை ஆணித்தரமாக அறிந்துணர்தல் அவசியமாகிறது.எது நமக்கு வேண்டுமென ஏங்குவது இறைவேண்டல்ல. எது நம்மில் இருக்கின்றது எனத் தெள்ளத் தெளிந்து தெரிந்துணர்வது இறைவேண்டலாகும்.
அதாவது, நம் ஒவ்வொருவரிலும் நிறைந்திருக்கும் இறைமையுடன் ஒவ்வொரு நொடியும், தருணமும் உறவாடுகின்றோம்; உரையாடுகின்றோம். அப்படியானால், இறைவேண்டலின் போது, நாம் நமக்குள் பயணஞ்செய்து, நமது உள்ளகத்தில் உறைந்திருக்கும் இறைமையை உசுப்பி விடுகின்றோம். உள்ளே ஆழ்நிலையில் உறைந்திருக்கும் இறைமையை முதலில் உய்த்துணர இயலாதவர், வெளியே பரந்து வியாபித்திருக்கும் தேவனை அறிய முடியாதவர்.
இறைவேண்டலானது, நான் எனக்கே தந்துகொள்ளும் சவால் என்றும் அறியலாம். இறைவேண்டலானது, வெளியே விரவி நிற்கும் இறைவரிடம் வேண்டுதல் என்பதைவிட, என்னுள்ளே பரவி இருக்கும் இறைமையிடம் வேண்டுதல் என்பதே முதலான அர்த்தமாகும்.
“இந்தச் சக்தியைத் தா… இந்தச் சந்தர்ப்பத்தைத் தா…” என இறைவரிடம் வேண்டும்போது, குறிப்பிட்ட அந்தச் சக்தியையும், சந்தர்ப்பத்தையும் நான் என்னிலே வருவித்துக்கொள்ளவும், நான் என்னை அவ்வகையில் வார்த்தெடுக்கவும் சபதம் எடுக்கின்றேன். மேலும், என் வழியாக அந்தச் சந்தர்ப்பத்தை மற்றவரிலும் ஏற்படுத்தும் சவால் நிறைவாழ்வினை மேற்கொள்கிறேன். சாராசரி நிலையிலிருந்து அசராசரி உயர்வுக்கு என்னை ஏற்றுக்கொள்கிறேன். என் மூலம் மற்றவர்களையும், பரந்த சமுதாயத்தையும் அத்தகைய அசாதாரண நிலைக்கு முன்னேற்றுகின்றேன். அல்லது முன்னேற்ற முயலுகிறேன்.
மேலும், என்னிலும், மற்றவரிலும் சமுதாயத்திலும், சரித்திரத்திலும் இணைந்து வாழும் இறைமையை உசுப்பிவிடுகின்றேன். இன்னமும், உயிர்ப்பிக்கின்றேன். அல்லது உயிர்ப்பிக்க முனைகிறேன்.
தேடலுடன்,
மண்ணச்சநல்லூர் பாலசந்தர்
add a comment