ஆன்மிகம்கோயில்கள் - தல வரலாறு

ஆலயம் அறிவோம் : அருள்மிகு சப்தபுரீஸ்வரர் ஆலயம், திருக்கோலக்கா, சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம்.

510views
அருள்மிகு சப்தபுரீஸ்வரர் ஆலயம், திருக்கோலக்கா, சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம்.
* மூலவர் – சப்தபுரீசுவரர்
அம்மன் – ஓசைகொடுத்த நாயகி
தல விருட்சம் – கொன்றை
தீர்த்தம் – சூரிய தீர்த்தம், ஆனந்த தீர்த்தம்
பழமை – 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – சப்தபுரி, திருத்தாளமுடையார் கோயில்
* பார்வதிதேவியால் ஞானப்பால் கொடுக்கப்பட்ட திருஞான சம்பந்தர், பல தலங்களுக்குச் சென்று, தனது சிறு கைகளால் தாளம் போட்டு பாடுவதைப்பார்த்தார் சிவன். குழந்தையின் கைகள் வலிப்பது பொறாமல், அவருக்கு தங்கத்தால் ஆன இரண்டு தாளங்களை கொடுத்தார். தட்டிப்பார்த்தார் சம்பந்தர். ஆனால் அதிலிருந்து ஓசை வரவில்லை. உடனே அந்த தாளத்திற்கு ஓசை கொடுத்தாள் அம்மன். எனவே தான் இங்குள்ள மூலவர் “தாளபுரீஸ்வரர்” எனவும், அம்மன் “ஓசைநாயகி” எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

* கோயிலின் நுழைவு வாயிலிலேயே ஞானசம்பந்தருக்கு தாளம் கொடுக்கும் ஈசனும், ஓசை கொடுக்கும் நாயகியும் அருள்பாலிக்கிறார்கள்.
* இந்திரனும் சூரியனும் இத்தலம் வந்து பூஜை செய்து பலனடைந்துள்ளனர். இங்குள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லா செல்வங்களும் அருளக்கூடியவள். திருமகள் தவம் செய்து திருமாலுடன் இணைந்த தலம் என்பதால் இத்தலம் “திருக்கோலக்கா” எனப்பட்டது.

* இசைக்கலையில் விருப்பமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால் இசையில் வல்லவராகலாம்.
* ஓசை நாயகியின் சன்னதியில் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள், இன்னிசை நிகழ்த்துபவர்கள் மாபெரும் புகழை அடைவார்கள் என்பது கண்கூடான உண்மை. தற்போது “திருத்தாளமுடையார் கோவில்” என அழைக்கப்படுகிறது.
* சித்திரை திருவாதிரையில் சீர்காழி சட்டை நாதர் கோயிலில் திருவிழா கொண்டாடப்படும். இரண்டாம் நாளன்று பால் உற்சவம் நடக்கும். அதன்பின் திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளுவார். அன்று இரவு சிவபெருமான் சம்பந்தருக்கு பொன்தாளம் தருவார். மறுநாள் காலை பூப்பல்லக்கில் சம்பந்தர் திரும்புவது இங்கு நடக்கும் சம்பிரதாய திருவிழா. கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக் கிழமை தோறும் தீர்த்தவாரி நடக்கிறது.

* வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து ஆனந்த தீர்த்தத்தில் நீராடி, ஓசை நாயகியிடம், “ஜடப்பொருளான தாளத்திற்கு ஓசை கொடுத்த நாயகியே, பேசும் சக்தியைக்கொடு” என வேண்டி, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும்.
* மகாலட்சுமி தவம் இருந்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்த தலம் என்பதால், திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் பெண்கள் இங்குள்ள மகாலட்சுமிக்கு, தொடர்ந்து 6 வாரம் மஞ்சள் பொடியால் அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
நாமும் இந்த திருதாளமுடையாரையும், ஓசை கொடுத்த நாயகியையும் வணங்கி அருள் பெறுவோம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!