சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் 100% ஊழியர்களுடன் வங்கிகள் இன்று முதல் வழக்கம்போல செயல்படும்
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அனைத்து வங்கிக் கிளைகளும் இன்று முதல் 100 சதவீத ஊழியர்களுடன் வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில வங்கியாளர் குழுமம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் வரும் ஜூலை 5-ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், கரோனாதொற்று அதிகம் உள்ளவை, குறைவாக உள்ளவை என மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி பாதிப்பு அதிகம் உள்ள கோவை,நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் 28-ம் தேதி (இன்று) முதல் 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும்.
இந்த மாவட்டங்களில் வாடிக்கையாளர் பரிவர்த்தனை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், வங்கி வேலை நேரம் மாலை 4 வரையும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நிர்வாகஅலுவலகங்கள், இதர அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் வழக்கம்போல செயல்படும்.
தொற்று பரவல் குறைவாக இருக்கும் 2, 3-ம் வகைகளில் உள்ள 27 மாவட்டங்களில் அனைத்து வங்கிக் கிளைகளும் 100 சதவீத ஊழியர்களுடன் வழக்கம்போல செயல்படும்.
வாடிக்கையாளர்கள் பரிவர்த் தனை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையும், வங்கி வேலை நேரம் மாலை5 மணி வரையும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நிர்வாக அலுவலகங்கள் உள்ளிட்ட பிற அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் வழக்கம்போல செயல்படும்.
ஆதார் சேவைகள், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதிக்கப்படுகிறது. வங்கிக் கிளைகள் அவ்வப்போது கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்படுவதை சம்பந்தப்பட்ட வங்கிகள் உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.