செய்திகள்தமிழகம்

சென்னையில் மின்சார ரயில்களில் பயணம் செய்ய பொதுமக்களுக்கு இன்றுமுதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதி

65views

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் இன்றுமுதல் சில கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றின் 2-வது அலை குறைந்து வருவதால், மாநில அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்துள்ளது. இந்நிலையில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப தொலைதூர மற்றும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

புறநகர் மின்சார ரயில்களில் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இதனால் ரயில் போக்குவரத்தை நம்பியிருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்களையும் புறநகர் மின்சார ரயில்களில் அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்களும் பயணிக்க இன்றுமுதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பெண்கள் மற்றும் அவர்களுடன் பயணிக்கக்கூடிய 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம். ஆண்கள் `பீக் ஹவர்ஸ்’ எனப்படும் முக்கிய நேரத்தைத் தவிர்த்து, காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், பின்னர் இரவு 7 மணி முதல் கடைசி நேரம் வரையிலும் பயணிக்கலாம்.

மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், அத்தியாவசியப் பணியாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம். தொலைதூரம் செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒருவழிப் பயணம் மேற்கொள்வதற்கான அனுமதிச் சீட்டு மட்டுமே வழங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!