தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1300 பேர் பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மகக்ள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு தர 60,000 மருந்துகள் தேவைப்படும் எனவும் கூறியுள்ளார்.
கருப்பு பூஞ்சை நோய்க்கு இந்தியாவில் இதுவரை 31 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2,109 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 3 வாரங்களில் மட்டும் கருப்பு பூஞ்சை பாதிப்பு 150 சதவீதம் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தோருக்கு கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை போன்ற நோய் தொற்று ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. கொரோனா 2-வது அலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போராடி வரும் நிலையில், இந்த கருப்பு பூஞ்சை நோய் இன்னொரு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் இதுவரை கருப்பு பூஞ்சைக்கு 31 ஆயிரத்து 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,109 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கு, அம்போடெரிசின்-பி மருந்து வழங்கப்படுகிறது. இந்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதும், கருப்பு பூஞ்சை அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
நாட்டிலேயே அதிக அளவாக மகாராஷ்டிரவில்தான் கருப்புப் பூஞ்சையால் 7,057 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலத்தில் இதுவரை 609 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்து குஜராத்தில் 5,418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 323 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 188 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் 1,744 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 142 பேர் உயிரிழந்துள்ளனர்.