டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணை இன்று திறப்பு; கர்நாடகத்திடம் இருந்து உரிய தண்ணீரை பெற கவனம் செலுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு இன்று மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில், தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகத்திடம் இருந்து பெற தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என டெல்டா விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ள மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 12) தண்ணீரை திறந்து வைக்கிறார். தற்போது அணையில் நீர் இருப்பு 96.80 கன அடியாக (60.75 டிஎம்சி) உள்ளது.
காவிரியில் கர்நாடகம் மாதவாரியாக வரையறுத்து ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்குத் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் 17.2.2018-ல்தீர்ப்பளித்தது. காவிரி நீரை உரிய முறையில் பங்கீட்டுக் கொள்வதை உறுதி செய்ய காவிரி மேலாண்மை ஆணையமும், நீர் ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் அவ்வப்போது கூடி நீர் பங்கீட்டை முறைப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாத இறுதி வரை கர்நாடகம் காவிரியில் 12.76 டிஎம்சி தண்ணீரை வழங்கியிருக்க வேண்டும். இந்த ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும். ஆனால் இதுவரை உரிய தண்ணீரை வழங்கவில்லை என்கின்றனர் விவசாயிகள்.
இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் கவண்டம்பட்டி சுப்பிரமணியன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று, விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்து, தூர்வாரும் பணி, மேட்டூர் அணை திறப்பு உள்ளிட்டவற்றை செயல்படுத்தியதை வரவேற்கிறோம்.
அதேநேரத்தில் தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி மாதந்தோறும் கர்நாடகம் வழங்க வேண்டிய தண்ணீரை கேட்டுப் பெற வேண்டும். கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை தமிழகத்துக்கு 12.76 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டிய நிலையில், இதுவரை 2 டிஎம்சி தண்ணீரைக் கூட கர்நாடகம் அளிக்கவில்லை.
மேலும், மேட்டூர் அணையில் தற்போதுள்ள தண்ணீர் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு போதுமானதல்ல. எனவே, தமிழக அரசு உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்டி, கர்நாடகத்திடம் இருந்து ஜனவரி முதல் மே வரை பெற வேண்டிய தண்ணீர் மட்டுமன்றி இனி வரும் காலங்களில் மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரையும் முறையாக விடுவிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.
கர்நாடகம் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்து, அங்குள்ள அணைகள் நிரம்பி உபரியாக வெளியேற்றப்படும் தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டு, அதை ஆண்டுதோறும் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நீராக கணக்குக் காட்டுவதை இனியும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இதில் தமிழக அரசு உறுதியாக இருந்து காவிரியில் உரிய நீரைப் பெற்று விவசாயத்தை செழிக்க வைத்து, விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகம் மாதந்தோறும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு: ஜனவரி 2.76 டிஎம்சி, பிப்ரவரி முதல் மே வரை மாதந்தோறும் 2.50 டிஎம்சி, ஜூன் 9.19 டிஎம்சி, ஜூலை 31.24 டிஎம்சி, ஆகஸ்ட் 45.95 டிஎம்சி, செப்டம்பர் 36.76 டிஎம்சி, அக்டோபர் 20.22 டிஎம்சி, நவம்பர் 13.78 டிஎம்சி, டிசம்பர் 7.35 டிஎம்சி என மொத்தம் 177.25 டிஎம்சி.