தமிழகம்

அண்ணா பல்கலைக்கழ முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் காலமானார்

66views

ண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் (92) கரோனா பாதிப்பால் காலமானார்.

கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் எம். ஆனந்தகிருஷ்ணன்(92), நுரையீரலில் தொற்று காரணமாக ஒரு வாரமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் பிறந்த ஆனந்தகிருஷ்ணன், கிண்டி பொறியியல் கல்லூரியில் கட்டட பொறியியல் துறையில் பட்டம் பெற்று, அமெரிக்கா மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பொறியியல் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார்.
பின்னர், தாயகம் திரும்பிய அவர், புதுதில்லியில் உள்ள மத்திய சாலை ஆராய்ச்சிக் கழகத்தின் முதுநிலை அறிவியல் அலுவலராகவும், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியராகவும், தலைவராகவும் பணியாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் அறிவியல் ஆலோசகர், ஐ.நா. அவையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் துணை இயக்குநர் மற்றும், இந்த மையத்திற்கான ஐ.நா. ஆலோசனைக் குழுவின் செயலர் ஆகிய உயர் பதவிகளை வகித்தார்.

பின்னர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி வகித்த ஆனந்தகிருஷ்ணன், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை எளிதாக்கிய ஒற்றைச் சாளர முறையை நடைமுறைக்குக் கொண்டுவரக் காரணமாக இருந்தவர். நாட்டில் முதன்முறையாக செமஸ்டர் கல்வி முறையை கொண்டு வந்தவர்.

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின் ஆளுமை துறையின் ஆலோசகராகவும் இருந்தவர். இவர், 4 புத்தகங்களையும் 90-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியள்ளார். கணினியிலும், இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதில் முயற்சி மேற்கொண்டு, வெற்றி பெற்றவர்களில் ஒருவர்.
ஆனந்தகிருஷ்ணனுக்கு 2002-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!